மாணவி தற்கொலை: ஒடிசாவில் 8 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து முழு கடையடைப்புப் போராட்டம்
Jul 19 2025
10

புவனேஸ்வர், ஜூலை 17–
ஒடிசாவில் உதவிப் பேராசிரியா் பாலியல் துன்புறுத்தலால் தீக்குளித்த மாணவி உயிரிழந்த நிலையில், காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் இன்று முழு கடையடைப்பு போராட்டத்தை நடத்தின.
பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பகிர் மோகன் தன்னாட்சி கல்லூரியில், ஒருங்கிணைந்த இளநிலை கல்வியியல் (பி.எட்) படித்து வந்த 2ம் ஆண்டு மாணவி ஒருவருக்கு அந்தக் கல்லூரியின் கல்வித் துறை தலைவரான உதவிப் பேராசிரியர் சமீரா குமார் சாஹு, பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். இதனால் தீக்குளித்த மாணவி 3 நாள்கள் உயிருக்குப் போராடிய நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 14–ந்தேதி இரவு உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக உதவிப் பேராசிரியர் சமீரா குமார் சாஹு, கல்லூரி முதல்வர் திலீப் கோஷ் ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மாணவியின் குடும்பத்தினரைச் சந்தித்த ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜீ, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருந்தார்.
இந்த நிலையில் மாணவி தற்கொலை விவகாரத்தில் பாஜக அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ் தலைமையில் 8 எதிர்க்கட்சிகள் இணைந்து இன்று முழு கடையடைப்பு போராட்டத்தை நடத்தின.
மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு அனைத்து மாவட்டங்களிலும் ரெயில் மறியல் மற்றும் பேரணி போன்ற பல்வேறு வகையான போராட்டங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து ஒடிசா காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ் கூறியதாவது:“அனைத்து மாவட்டங்களிலும் 8 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்துக்கு முழு ஆதரவு கிடைத்துள்ளது. பொதுமக்களும் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து, மாணவியின் தற்கொலைக்கு நீதி கோருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?