மனமே மாமருந்து

மனமே மாமருந்து

வேலவனைப் பார்க்க வீடு தேடி வந்தார் வெங்கட் நாராயணன். அந்த வள்ளலார் நகரின் செயலாளர்.


 நாராயணன் வந்தபோது வேலவன் இரண்டாவது மொட்டை மாடியில் நின்று பூக்களைப் பறித்துக்கொண்டிருந்தார்.


 தெருவிற்குள் வந்து வீட்டு வாசலில் நின்று தன்னை அழைப்பதற்குள் அவரைப் பார்த்துவிட்ட வேலவன் மேலிருந்து சொன்னார்


 நாராயணன் வாங்க.. உள்ளே உக்காருங்க.. இதோ வந்துடறேன். இன்னும் கொஞ்சம்தான் இருக்கு.


 நாராயணன் மேலே அண்ணாந்து பார்த்துவிட்டு.. ஓ பூ பறிக்கிறீங்களா.. நான் இருக்கேன் வாங்க.. என்றபடி வீட்டிற்குள் போனார்.


 பதினைந்து நிமிடங்கள் கழித்து கையில் பூக்கூடையில் பூக்களுடன் கீழே வந்தார்.


 முன் கூடத்தில் உட்கார்ந்து அன்றைய பேப்பரைப் பார்த்துக்கொண்டிருந்த நாராயணன் என்ன சார் காலையிலேயே பூ பறிக்கிறீங்க? ஏதும் விசேஷமா? என்றார்.


 இல்லை.. எப்பவும் நடைப்பயிற்சி முடித்துவிட்டு ஐந்து மணிக்குத்தான் பறிப்பேன். ஆறு மணிவரைக்கும் வெயில் இருந்து படுத்துது. அப்புறம் ஆறு மணிக்குமேல பறிச்சா பொழுது போயிடுது.. இருட்டுல பறிக்கிற மொட்டு தெரியமாட்டேங்குது..


          இது என்ன பூ?


 சந்தன முல்லை. ரொம்ப வாசமா இருக்கும். பூக்க விட்டாப் பாம்பு வரும்பாங்க.. அதுக்காகவே பறிச்சிடறது. இன்னொன்னும் இருக்கு.. காலையில மொட்டுக்காம்பு சிறிசா இருக்கும்.. சாயங்காலம் பறிச்சா காம்பு நீண்டிருக்கும்.. கட்டறதுக்கு சிரமமில்லாம இருக்கும்..


 மேடம் ஊருக்குப் போயிட்டாங்க.. நீங்க பூ பறிச்சி என்னப் பண்ணப்போறீங்க?


 பூக்கூடையை வைத்துவிட்டு .. நாராயணன் இருங்க வர்றேன்.. வந்து உங்களுக்குப் பதில் சொல்றேன் என்று உள்ளே போய் இரண்டு டம்ளர்களில் சுடச்சுட இஞ்சி டீ கொண்டு வந்தார். 


 முதல்ல டீ சாப்பிடுங்க.. நான் போட்டது.. என்றபடி கொடுத்தார். நாராயணன் வாங்கிக்கொண்டு ஓர் உறிஞ்சு உறிஞ்சிவிட்டு.. சார்.. உண்மையிலேயே டீ சூப்பரா இருக்கு.. சகலகலா வல்லவர்தான் நீங்க என்று சொல்லிச் சிரித்தபடி டீயைச் சாப்பிட ஆரம்பித்தார்.


            புள்ளங்க அவங்க அவங்க வாழ்க்கையிலே இருக்காங்க நாராயணன் சார்.. நானும் அவளுந்தாம் இந்த வீட்டுலே… இப்பத்தான் முதன்முறையா வீட்டைவிட்டு பத்துநாள் வெளியில பேரனைப் பாத்துக்கங்கப் போயிருக்கா.. ஒரே ஆளா இருக்கறதுக்குப் போரடிக்குது..


 அதுக்குத்தான் பூ பறிக்கிறீங்களா?


 ஆமா சார்.. அவள் இருந்தால் தினமும் செய்யறதுக்கு சரியாக வேலை வச்சிருப்பா.. சலிக்காமப் பார்ப்பா.. அவளுக்குப் பிடிச்சது.. பூ பறிக்கறது.. அப்புறம் பூ கட்டறது.. இவ்வளவு செடிங்க இருக்கு பாருங்க.. ஒவ்வொன்னும் ஒவ்வொரு வெரைட்டி பூச்செடி.. இதுங்களப் பராமரிக்கறது.. அப்புறம் செவ்வரத்தைச் செடியில் பழுப்பு நீக்கிறது.. ஏதும் பூச்சி வச்சிருந்தா சோப்பு ஆயில் அடிக்கறது.. அப்புறம் கோயிலுக்குப் போய் கட்டுன பூவைப் போட்டு சாமி கும்பிடறது.. அப்புறம் வீட்டு வேலைகள்னு பிசியாவே இருப்பா..


 சற்று நிறுத்திவிட்டு டீயைக் குடித்தார் ஆறிவிடுமே என்று.


 குடித்து முடித்து டம்ளரை வைத்துவிட்டுச் சொன்னார்


          நாராயணன் சார்.. அவள் வீட்டுல இல்லாததால் அவ என்னென்ன வேலை செய்வாளே பிடிச்சு அதையெல்லாம் நான் செஞ்சா.. பொழுது போயிடுது.. அது மட்டுமில்ல அவளுக்குப் புடிச்ச வேலைகளைச் செய்யறதால அவ பக்கத்துல இருக்கற உணர்வும் கிடைக்குது.. எல்லாத்துக்கு மனசுதானே..? அப்புறந்தான் கடைத்தெருவுக்கு வந்துடுவேன்.. நூலகம்.. நம்ப சந்திப்பு பொழுது போயிடுதுல்ல.. சரி நீங்க வந்த காரியம் என்ன?


           அடுத்த வாரம் நம்ப நகர்லே காமராசர் பிறந்தநாள் வருது.. புள்ளங்களுக்குப் போட்டிங்க வைக்கணும்.. வழக்கம்போல நீங்க நடுவரா இருந்து செஞ்சு கொடுக்கணும்.. என்றார் நாராயணன்.


            காமராசரை எல்லாம் புள்ளங்களுக்கு நினைவிருக்கா.. அவசியம் செஞ்சு தரேன் என்று சொல்லிவிட்டு சிரித்தார்..


  சரி சார்.. நான் வரேன்.. உங்க கிட்ட கத்துக்கறதுக்கு நிறைய இருக்கு சார்.. என்றபடி படியிறங்கி நடக்க ஆரம்பித்தார் நாராயணன்.


ஹரணி,

தஞ்சாவூர்-2

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%