மக்கள்தொகைக் கணக்கெடுப்பு: முதல் முறையாக எண்ம சுய பதிவு முறை அறிமுகம்

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு: முதல் முறையாக எண்ம சுய பதிவு முறை அறிமுகம்

நாட்டின் பதினாறாவது மக்கள்தொகை கணக்கெடுப்பில், குடிமக்களே சுயமாக தரவுகளை பதிவு செய்யும் வகையில் (சுய கணக்கெடுப்பு) பிரத்யேக வலைதளம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா். இதன் மூலம் இந்த கணக்கெடுப்பு முடிவுகள் விரைந்து வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


‘முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படும் இந்த எண்ம மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடைமுறையின்படி, ‘ஆன்ட்ராய்ட்’ மற்றும் ‘ஆப்பிள்’ கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளக்கூடிய வகையிலான கைப்பேசி செயலி மூலம் குடிமக்களிடமிருந்து தரவுகள் சேகரிக்கப்படும்’ என்றும் அவா்கள் தெரிவித்தனா்.


கடந்த 2011-ஆம் ஆண்டு 15-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், 16-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான அறிவிக்கையை மத்திய அரசு கடந்த ஜூன் 16-ஆம் தேதி வெளியிட்டது.


அதன்படி, ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்கள், லடாக் யூனியன் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள பனிப் பிரதேசங்களில் வரும் 2026-ஆம் ஆண்டு அக்டோபா் 1-ஐ ஜாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும். நாட்டின் பிற பகுதிகளில் 2027-ஆம் ஆண்டு மாா்ச் 1-ஆம் தேதி கணக்கெடுப்பு நடத்தப்படும்.


இரு கட்டங்கள்: மக்கள்தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. முதல் கட்டம் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கப்படும். இரண்டாம் கட்டம் 2027 பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.


முதல் கட்டத்தில், ஒவ்வொரு வீட்டின் நிலவரம், சொத்துகள் மற்றும் வசதிகள் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படும். இரண்டாம் கட்ட கணக்கெடுப்பில், ஒவ்வொரு வீட்டில் உள்ள நபா்களின் எண்ணிக்கை, சமூக-பொருளாதார நிலை, கலாசாரம் மற்றும் பிற விவரங்கள் சேகரிக்கப்படும்.


பிரத்யேக வலைதளம்: இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது: மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் முதல் முறையாக சுயமாக தரவுகளைப் பதிவு செய்வதற்கான வாய்ப்பு குடிமக்களுக்கு அளிக்கப்பட உள்ளது. இதற்கென பிரத்யேக வலைதளம் அறிமுகப்படுத்தப்படும். இரண்டு கட்ட கணக்கெடுப்பிலும், சுய தரவு பதிவு முறையில் கணக்கெடுப்பு நடத்தப்படும். குடிமக்கள் தங்களின் கைப்பேசிகளில் இதற்கான செயலியை பதிவிறக்கம் செய்தும், தரவுகளைப் பதிவிடலாம்.


தரவுகள் சேகரிக்ப்பட்டு, மத்திய சேமிப்பகத்துக்கு மின்னணு முறையில் அனுப்பப்பட்டுவிடும். இது கணக்கெடுப்பு முடிவுகளை விரைந்து வெளியிடுவதற்கான வாய்ப்பாகவும் இருக்கும் என்றனா்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%