பேச வைத்த பெரியார்

பேச வைத்த பெரியார்

நூலாசிரியர் : நல்லாசிரியர் புலவர் செந்தலை ந.கவுதமன், தமிழ்நாட்டரசின் பாவேந்தர் விருதாளர்.

நூல் விமர்சனம் : சீ.தேவராஜபாண்டியன்,

வரலாற்றுத் துறை மாணவர், மதுரை.

வெளியீடு : திராவிட இயக்கத் தமிழர் பேரவை சூலூர், கோவை - 641 40402 

பக்கங்கள் : 179, விலை : ரூ. 250/-


 தந்தை பெரியாரால் பெயர் சூட்டப் பெற்ற பெருமையுடையவர் தான் இந்நூலின் ஆசிரியர் புலவர் செந்தலை ந.கவுதமன் அய்யா அவர்கள். 'விடுதலை' நாளேட்டை வாசிக்கத் தொடங்கியதால்; பெரியாரை சுவாசிக்கத் தொடங்கி அதை நீட்சியாக தமிழ்ச் சமூகத்திற்கு இந்நூலை கொடை அளித்துள்ளார் நம் புலவர்.


 இன்றும் சிலர் பெரியாரை, ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக செயல்பட்டார் என்று சொல்வது உண்டு. ஆனால், 1932 ஆம் ஆண்டு இங்கிலாந்திலேயே ஆங்கில ஆட்சியின் கொடுமையை எதிர்த்து முழங்கிய, அவரின் வீரத்தை வரலாற்றில் பேசப்பட வேண்டியதை தேதியுடன் குறிப்பிட்டுள்ளார் நம் புலவர் அய்யா.


 1938ல் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் தான் ஈ.வெ.ரா. பெரியார் ஆனார் என்று நம்மில் பலருக்கும் தெரியாது. ஆனால் 1929 ஆம் ஆண்டு முதலே 'பெரியார்' என்று அழைக்கப்பட்டதற்கு பல ஆதாரங்களை விளக்கியுள்ளார் இந்நூலாசிரியர். அதே ஆண்டு துவங்கிய முதல் தமிழ்த் தேசியப் போரான மொழிப் போராட்டத்தை, பெரியார் தலைமையேற்று நடத்தி கட்டாய இந்தி ஒழிக்கப்பட்டு வெற்றி கண்ட நாள் 21.02.1940. இந்த பிப்ரவரி 21 தான் இன்றும் 'உலகத் தாய்மொழி நாளாக' கொண்டாடப்படுகிறது என்று வரலாற்றை ஒப்பீடு செய்திருப்பது நூலாசிரியரின் நுண்ணறிவிற்குச் சான்று!


 தந்தை பெரியார் நடத்தியப் போராட்டத்தால் தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் முதன் முதலாக திருத்தப்பட்டு கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது என்று அதனால், படித்து பயனடைந்தோர் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?


 மனுநீதிப் படி ஆட்சி நடத்த விரும்பிய இராஜாஜி 1937ல் 2200; 1952ல் 6,000 பள்ளிகளையும் மூடினார் என புலவர் அய்யா இந்நூலில் பதிவு செய்துள்ளார். ஆனால், இன்றைக்கும் அதன் தொடர்ச்சியாக உத்திர பிரதேசத்தில் தேவையற்ற செலவினங்கள் குறைப்பு என்ற பெயரில் 22,764 அரசுப் பள்ளிகளை மூடி இராஜாஜியின் கொள்கை வாரிசு என நிரூபித்து விட்டார் யோகி ஜி.


 இந்தியத் துணைக் கண்டத்தில் எழுந்த 'முதல் மனித உரிமைப் போராட்டம்' பெரியார் நடத்திய வைக்கம் போராட்டம். இதுதான் என்னை பொதுவாழ்வில் ஈடுபடத் தூண்டின என்று அம்பேத்கரே கூறியுள்ளார். இதிலிருந்து ஒன்று நன்றாகத் தெரிகிறது அம்பேத்கர், அண்ணா, கலைஞர் முதலிய தலைவருக்கெல்லாம் தலைவராகப் பெரியார் விளங்கியுள்ளார்.


 பொதுவாகவே பல அரசியல் கட்சிகள் மதுரையில் தான் துவங்கியிருக்கிறது என்பது வரலாறு. இதற்கெல்லாம் முன்னோடியாக பெரியாரும் டிசம்பர் 26, 1926ல் சுயமரியாதை இயக்கத்தை முறைப்படி துவங்கியிருக்கிறார்.


 'தொண்டு செய்து பழுத்த பழம்' என்று பெரியாரை, தன் கவிதையில் மிகப் பொருத்தமான வைர வரிகளில் வடித்திருப்பார் நம் புரட்சிக் கவிஞர். ஆம், பெரியார் செய்த தொண்டினால் தான்; நாமெல்லாம் தோளில் துண்டு போட முடிந்தது. இல்லையென்றால் வண்டு மாதிரி அடித்துவிட்டு கண்டு கொள்ளாமல் நகர்ந்து கொண்டு இருந்திருக்கும் இந்த சனாதன அமைப்பு கொண்ட சமூகம்.


 அனைத்து நிகழ்வுகளையும் தேதியுடன் பதிவு செய்துள்ளது இந்நூலின் சிறப்பு. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், அண்ணா, கலைஞர், வே.ஆனைமுத்து ஆகியவர்களைப் பற்றிய கட்டுரைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. 'பெயரில் மட்டுமா பெரியார்?' என்ற மற்றொரு நூலையும் பெரியாரைப் பற்றி புலவர் அய்யா இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%