பெண்கள் ஐரோப்பிய கால்பந்து: இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி

பெண்கள் ஐரோப்பிய கால்பந்து: இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி

சூரிச்,


14-வது பெண்கள் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் சூரிச்சில் நேற்று முன்தினம் இரவு நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியனான சுவீடனை எதிர்கொண்டது.


பரபரப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் 2-வது நிமிடத்தில் சுவீடன் வீராங்கனை அஸ்லானி முதல் கோல் அடித்தார்.25-வது நிமிடத்தில் பிளாக்ஸ்டெனியஸ் 2-வது கோலை போட்டார். இதனால் முதல் பாதியில் சுவீடன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது. பின்பாதியிலும் இதே நிலை நீடித்ததால் சுவீடன் அணியே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால் கடைசி கட்டத்தில் அபாரமாக செயல்பட்ட இங்கிலாந்து அணி சரிவில் இருந்து மீண்டு வந்து இரண்டு நிமிடங்களில் 2 கோல்கள் அடித்து அசத்தியது. அந்த அணியின் லூசி பிரான்ஜி 79-வது நிமிடத்திலும், மாற்று வீராங்கனை அக்யிமாங் 81-வது நிமிடத்திலும் கோலடித்தனர். அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் வழக்கமான நேரம் முடிவில் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் (டிரா) முடிந்தது. இதைத்தொடர்ந்து வெற்றியை முடிவு செய்ய அளிக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் (30 நிமிடம்) கோல் எதுவும் விழவில்லை.


இதனால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இரு அணிகளுக்கும் அளிக்கப்பட்ட முதல் 5 பெனால்டி வாய்ப்புகளில் தலா 2 கோலடித்தனர், 3 வாய்ப்புகளை வீணடித்தனர்.


இதைத்தொடர்ந்து 'சடன்டெத்' முறை அமலானது. 6-வது பெனால்டி வாய்ப்பை இரு அணிகளும் தவறவிட்டன. 7-வது வாய்ப்பை சுவீடன் வீராங்கனை ஹோல்ம்பெர்க் கோலாக்க தவறினார். ஆனால் 7-வது பெனால்டி வாய்ப்பை இங்கிலாந்து வீராங்கனை லூசி பிரான்ஜி கோல் வலைக்குள் திணித்து தனது அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் இங்கிலாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் சுவீடனை சாய்த்து அரையிறுதிக்கு முன்னேறியது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%