ராகவன் ஹவுஸ் ஓனரிடமிருந்து வந்திருந்த அந்த நோட்டீசை மீண்டும் படித்தான். ''வாடகை அடுத்த மாதம் முதல் இரு மடங்கு.”
அதில் எழுதியிருந்த எழுத்துக்கள் ராகவனின் நெஞ்சை நசுக்கின.
“இது என்ன நியாயம்?” "இவ்வளவு வாடகையா? .. நமக்குக் கட்டுபடியாவாது... வேற வீடு பார்த்துடலாம்.”மனைவி லதா
சத்தம்போட்டாள்.
அடுத்த இரண்டு நாட்கள் கணவன் மனைவி இருவருமாய்ச் சேர்ந்து
வீடு தேடினார்கள். கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் ஒரு வீடு கிடத்தது. சிறியதாயிருந்தாலும் சுத்தமாயிருந்தது. வாடகையும் குறைவு.
ஆனால் வீட்டு ஓனர் கடைசியில் ஒரு கண்டிஷன் போட்டார். "நாய், பூனை எதுவும் வரக் கூடாது....வீட்டுக்குள்ளார வளர்க்கவும் கூடாது.”
லதாவுக்கு அது பிரச்சனை இல்லை.
“நல்லதுதானே? நம்ம சுமையும் குறையும்.” என்றாள்.
ராகவன் எதுவும் பேசவில்லை.
வீட்டுக்கு வந்ததும்,வாசலோரத்தில் சுருண்டு படுத்திருந்த அந்த நாயைப் பார்த்தான்.
எங்கிருந்து வந்ததென்றே தெரியாத அந்த நாய் கடந்த எட்டு வருடமாய்
போட்டதைத் தின்று கொண்டு, விசுவாசமாய்க் காவல் காத்து
தீபாவளிக்குp பயந்து நடுங்கி,
அவனுடைய காலடியிலேயே வளர்ந்தது.
அன்றிரவு லதா கேட்டாள்.
“இந்த நாய்க்காக டபிள் வாடகையை ஒத்துக் கொள்ளப் போறீங்களா?...
நம்ம கஷ்டத்தை யோசிங்க.”
ராகவன் மெதுவாக அந்த நாயை பார்த்தபடி கேட்டான். 'எங்கியோ பொறந்த இந்த நாய்...
ஏன் நம்ம வீட்டு வாசல்ல வந்து நின்னிச்சு?... அதுக்கப்புறம்...
கடந்த எட்டு வருஷமா
நம்ம சாப்பாட்டை தின்னு,
நம்ம காலடியேலே படுத்து தூங்கிச்சு..
அது ஏன்?”
லதாவிடம் பதிலில்லை.
“எல்லாம் அந்த ஆண்டவன் கணக்கு,”
சரியாய்ச் சொல்லணும்ன்னா "பூர்வ ஜென்மக் கடன்" அதைத் திருப்பித் தரத்தான் இந்த ஏற்பாடு.”
அந்த நாய் மெதுவாக எழுந்து
ராகவனின் பாதத்தருகே வந்து உட்கார்ந்தது. வால் அசையவில்லை.
கண்களில் மட்டும் ஒரு சீரியஸான நம்பிக்கை.
லதாவின் கண்கள் ஈரமாயின.
எதுவும் பேசாமல் நாயின் தலையை தடவினாள்.
“வாடகை உயர்ந்தாலும் பரவாயில்லை... இது இங்கேயே இருக்கட்டும்,” மெதுவாக சொன்னாள்.
அந்தப் பழைய வீட்டினுள் இன்று
புதிதாய்ப் பிறந்த மனங்கள்.
--++++

முகில் தினகரன்
கோயமுத்தூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?