----------------------
ஐம்புலன்கள்
உள்ளவன் மட்டும்
மனிதனல்ல
ஆறாவது புலமாம்
பின்புலம் உள்ளவரே
பிரகாசிக்கும் சூரியன்!
ஆடையில்லா மனிதன்
அரை மனிதன்
பின்புலமில்லாதவனோ
கால் மனிதன்
காலில்லா மனிதன்!
பின்புலத்தை வருணிக்க வார்த்தைகள் இல்லை
ஆனால் அதன்
உட்பொருளை உருவகிக்கலாம்!
சிவபெருமானின்
நெற்றிக்கண்ணைப்போல் அது ஒரு
அதிசயக்கண்!
இராவணனின்
பத்துத்தலைகள்!
அர்ஜுனன் கையிலிருந்த காண்டீபம்!
கர்ணன் கையிலிருந்த
நாகாஸ்திரம்!
அன்று
கர்ணன் தலையை
தர்மங்கள் காத்தன
இன்று அதர்மத்தின்
தலைகளை வீழ்த்த
பின்புலத்தின் பலம் தேவை!
கர்ணனின் பின்புலம்
துரியோதனன்
அர்ஜுனனின் பின்புலம் கிருஷ்ணபரமாத்மா!ஒன்று செஞ்சோற்றுக்கடன்
தீர்த்தது மற்றொன்று
அநீதியை அழித்தது
போராட்டங்கள் இரண்டிலுமே
நியாயம் இருக்கிறது!
பின்புலம் உள்ளவன்
சிங்கத்தின் மீது
சவாரி செய்கிறான்
புலியின் மடியில்
துயில் கொள்கிறான்!
பின்புலத்தை உருவாக்குவது பூமியில்
நின்று ஆகாயத்தை
தொடுவதற்கு ஒப்பாகும்!
உழைப்பின் தாரகமந்திரத்தை
ஓயாது உச்சரிக்க வேண்டும் உறங்கும்போது கூட
பிறருக்கு உதவுவது போல் கனவு காண
வேண்டும்!
அப்போது
பணபலத்தாலும்
ஆள்பலத்தாலும்
புதிய பிரம்மனையே
நாம் உருவாக்கலாம்!

கவிஞர் த.அனந்தராமன்
துறையூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?