நீலகிரி மாவட்டத்தில் 2.51 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணி: கலெக்டர் லட்சுமி பவ்யா தொடங்கி வைத்தார்

நீலகிரி, ஆக. 12–
நீலகிரி மாவட்டத்தில் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில், தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணியை, கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
உதகை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில், கலெக்டர் தெரிவித்ததாவது:
நீலகிரி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க நாள் ஆகஸ்ட் 11 (திங்கட்கிழமை) மற்றும் விடுபட்டவர்களுக்கு ஆகஸ்ட் 18 (திங்கட்கிழமை) அன்றும் அனுசரிக்கப்படுகிறது. இதில் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்களுக்கும், மேலும் பள்ளி செல்லாத குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்திலும் மாத்திரைகள் வழங்கப்படும்.
நீலகிரி மாவட்டத்தில் இம்மாத்திரைகள் அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில், 486 அங்கன்வாடி பணியாளர்கள், 216 கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் 416 ஆஷா பணியாளர்கள் மூலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் முன்னிலையில் வழங்கப்படும். இதன் மூலம் 1–19 வயது குழந்தைகள் 1,26,130 பேரும், 20–45 வயது கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்கள் 1,24,977 பேரும், மொத்தம் 2,51,107 பேரும் பயனடைவார்கள்.
அல்பெண்டசோல் மாத்திரை உட்கொள்வதால் குடற்புழு நீக்கம் செய்யப்படுவதுடன் ரத்தசோகை நீங்கி, நல்ல உணவு உட்கொள்ளும் பழக்கம் உருவாகி, குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆரோக்கியம் பெற உதவும் என கலெக்டர் லட்சுமி பவ்யா தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், உதகை வருவாய் கோட்டாட்சியர் சதீஷ், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) சோமசுந்தரம், உதகை நகர்நல அலுவலர் சிபி, உதகை வட்டார மருத்துவ அலுவலர் முருகேஷன், ஆசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?