நாமக்கலில் 27 பேருக்கு ரூ.9 லட்சம் மதிப்பில் நல உதவி: அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்
Dec 06 2025
23
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் அரசு சட்டக்கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், 27 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8.75 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கலெக்டர் துர்காமூர்த்தி தலைமையேற்றிருந்தார்.
இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் மா.மதிவேந்தன் கூறியதாவது:–
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தனித்துறை அமைத்து, மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவி, பராமரிப்பு உதவி, இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட எண்ணற்ற நலத்திட்டங்களை முதன்முதலில் அமுல்படுத்தியது முன்னாள் முதல்வர் கருணாநிதி. அவரின் பாதையில், தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல புதிய நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்று தெரிவித்தார்.
டிசம்பர் 3 உலக மாற்றுத்திறனாளிகள் தினம், மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாள் எனவும் அவர் கூறினார். நாமக்கல் மாவட்டத்தில் 200 தன்னார்வலர்கள் இல்லந்தோறும் சென்று மாற்றுத்திறனாளிகளின் சமூகத் தரவு தளம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
விழாவில், திருமண உதவித்தொகை 2 பேருக்கு ரூ.1,92,640, பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி 4 பேருக்கு தலா ரூ.4,57,600, 3 பேருக்கு தலா ரூ.43,470 மதிப்பில் செல்போன், வங்கி கடன் மானியம் 5 பேருக்கு ரூ.1,08,334, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் 10 பேருக்கு ரூ.63,590, காதொலி கருவி 3 பேருக்கு ரூ.9,855 என மொத்தம் 27 பேருக்கு ரூ.8,75,489 மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற 23 குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்வுக்கு முன், உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கேக் வெட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.
விழாவில், கல்லூரி முதல்வர் அருண், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் க.கலைச்செல்வி, மறுவாழ்வு அலுவலர் பிரகாஷ் உள்ளிட்ட துறை அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?