திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி வருகின்ற டிசம்பர் 30-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அடுத்த 10 நாட்களுக்கு திறந்து வைக்கப்படுவது வழக்கம். இந்த பத்து நாட்களிலுமே பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காத அளவிற்கு அதிகரிக்கும். அவ்வகையில் இந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி முதல் ஜனவரி 8 ஆம் தேதி வரையிலான 10 நாட்களுக்கு திருப்பதியில் சொர்க்கவாசல் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி இன்று நடைபெற்றது. ஆனந்தநிலையம் முதல் தங்க வாசல் வரை உள்ள சன்னதிகள், பிரசாத அறை, சுவர்கள், மேல்சுவர் உள்ளிட்ட அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி காலை 6 மணி முதல் 10 மணி வரை அர்ச்சகர்களால் ஆகம முறைபடி நடத்தப்பட்டது. அர்ச்சர்கள் சிறப்பு பூஜை செய்து நைவேத்யம் படைத்தபின் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
கோவில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சியை முன்னிட்டு அஷ்டதள பாத பத்மாராதனை சேவை ரத்து செய்யப்பட்டது. அதேபோல், உயர் பொறுப்புகளில் உள்ள தலைவர்கள் தவிர மற்றவர்களுக்கான விஐபி தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டன.
தேவஸ்தான அதிகாரி பேட்டி
ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சிக்கு பிறகு திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால், கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
உகாதி, ஆனிவார ஆஸ்தானம், பிரம்மோற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய செவ்வாய்க்கிழமை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். அதன்படி வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஆனந்தநிலையம் முதல் தங்க வாசல் வரை, கோவிலுக்குள் உள்ள சன்னதிகள், கோவில் வளாகங்கள், மடப்பள்ளி, சுவர்கள், கூரை, பூஜை பொருட்களில் இன்று புனித வாசனை திரவிய நீர் தெளிக்கப்பட்டு, பின்னர் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. சாஸ்திரங்களின்படி அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை மற்றும் நைவேத்யம் படைத்தபின், பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
விரிவான ஏற்பாடுகள்
டிசம்பர் 30-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை நடைபெறும் சொர்க்கவாசல் தரிசனத்திற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதிகாரிகள் இரண்டு மாதங்களாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். கோவிலுக்குள் நுழையும் வழி மற்றும் வெளியேறும் வழிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், அன்ன பிரசாதம், தங்குமிடம், தரிசன வரிசையை ஒழுங்குபடுத்துதல் மற்றும் பார்க்கிங் வசதிகள் குறித்த முழுமையான திட்டங்களை தயாரித்துள்ளார்கள்.