அதிமுக கூட்டணிக்கு இபிஎஸ் அழைப்பு: விஜய்யின் தவெக பதில் என்ன?

அதிமுக கூட்டணிக்கு இபிஎஸ் அழைப்பு: விஜய்யின் தவெக பதில் என்ன?

சென்னை:

“எங்கள் கூட்டணியில் யாரைச் சேர்ப்பது, யாரைத் தவிர்ப்பது என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அழைப்புக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி பதில் அளித்துள்ளது.


இது குறித்து, தவெக கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளர் அருண்ராஜ் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “எங்களுடைய முதல்வர் வேட்பாளர் தவெக தலைவர் விஜய்தான் என்பதை செயற்குழுவில் தீர்மானமாக நிறைவேற்றி விட்டோம். எங்கள் கூட்டணியில் யாரைச் சேர்ப்பது, யாரைத் தவிர்ப்பது என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம். டிசம்பருக்கு பிறகுதான் அதுகுறித்து முடிவு எடுப்போம்.


அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குழப்பமான மனநிலையில் உள்ளார். தங்களுடைய கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே தன்னை பெரும் தலைவர் என்றும், நல்ல கூட்டணியை உருவாக்கி விடுவேன் என்ற தோற்றத்தையும் கட்டமைக்கவே இதுபோல் தவறான கருத்தைக் கூறி வருகிறார். மேலும், அதிமுக - பாஜக கூட்டணி மக்கள் மத்தியில் எடுபடாது என்பதாலேயே பிரம்மாண்ட கட்சி எங்கள் கூட்டணிக்கு வர உள்ளது என்றும் கூறுகிறார். இதுவரை யாரிடமும் நாங்கள் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எங்கள் முதல்வர் வேட்பாளர் விஜய்தான்” என்று அவர் தெரிவித்தார்.


முன்னதாக, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அளித்த பேட்டி ஒன்றில், “திமுகவை தோற்கடிக்க ஒருமித்த எண்ணம் கொண்ட அனைத்து கட்சிகளும் அதிமுகவுடன் கைகோக்க வேண்டும். இது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் பொருந்தும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


இதனிடையே, "திமுகவை வீழ்த்த அதிமுக அழைப்பு என்பது தீமைக்கு மாற்று தீமை கிடையாது. நெருப்பை, நெருப்பை வைத்து அணைப்பது கடினம்” எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிராகரித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%