சும்மா சும்மா

சும்மா சும்மா


தேசிய மொழி மாதிரி 

தேசிய வார்த்தை சும்மா...

என்று சும்மா 

சொன்னாலும் 

பரவாயில்லை...இது

தேசியக் குற்றமாகி விடாது என்று 

சும்மா இருந்து விடுவர் 

எல்லோரும்...!

இதையும் சும்மா 

சொல்ல வரவில்லை

சொல்லாட்டம் 

செயலாட்டம் இணைத்து சிந்தித்துத் தான் 

சொல்ல வந்தேன்...

ஆகவே

சும்மா படித்து

சிந்தையில் ஏற்றாமல் 

சும்மா இருந்து விடாதீர்

ஜெகத்தீரே!

சும்மா இருப்பது 

சித்தர் பார்வையில் 

வேண்டுமானால் 

சுகமாக இருக்கலாம் 

கலிகாலப் பார்வையில் 

நல்லதோ அல்லதோ

காரியங்கள் ஆற்றி

காலத்தை ஒட்டுவது 

கட்டாயம் என்றான பின்

சுகங்கள் வேண்டி

சும்மா இருத்தல் சரியோ?

சித்தர் மரபு வழி சிந்தனை என்பது வேறு... இங்கே 

கலி மாந்தரின்

கட்டாயக் கடமைகள் 

என்பது வேறு...

எனவே 

சும்மா இருந்து சுகம் 

காண்பது என்பது 

சித்தர் வழிக்கு சரி...

சும்மா இருப்பது சோம்பல் என்பது 

நிகழ்கால நிஜத்துக்கு சரி...

இந்த நாணயத்துக்கு

இன்னொரு பக்கமும் 

உண்டு என்று 

உணர்வது உத்தமம்...

அறிவியலின் துணை கொண்டு 

அன்பே இல்லாமல் 

அழிவாற்றல் கூடிய 

ஆயுதங்கள் 

அனுதினமும் இங்கே 

புதிது புதிதாய்

 அறிமுகமாகும் அவலத்தை 

நினைத்துப் பார்த்தால் 

எதையும் செய்யாமல் 

இவர்கள் 

சும்மா இருந்தாலே போதும்... எல்லாமும் 

எல்லாரும் சுகம் சுகம் 

சுபம் சுபம் என்று 

சூளுரைத்து சொல்லத் 

தோன்றுகிறது...

ஆயுதப் போரின்

அழிவு நோக்கம் தெரிந்து 

தொலை நோக்கில் பார்த்துத் தான் அன்றே

சும்மா இருப்பது தான் சுகம் என்று சொல்லி வைத்தனரோ

சித்தர் பெருமக்கள்!

நாடறிந்த நல்ல 

தமிழ்ப் பேச்சாளர் 

நாவலர் நெடுஞ்செழியன் 

அன்றொரு தடவை 

சும்மா என்ற தலைப்பில் 

சும்மா வைத் திரும்பத் திரும்ப சொற்றொடராய்

சொல்லிச் சொல்லி 

சுவை யேதும் குன்றாமல் நீண்ட நேரம்

சொற்பொழிவு ஆற்றிய சரித்திரம் சும்மாவுக்குக் கிடைத்த 

மறக்க முடியாத மரியாதை மட்டுமல்ல 

தேசிய விருதும் தான்!

சும்மாவை சும்மா என்று யாரும் எளிதில் 

அலட்சியப் படுத்த முடியாது...

சும்மாவுக்கு இன்னொரு தனிச்சிறப்பு உண்டு... 

அம்மாவுக்கு இணையான 

ஒலி வடிவத்தில் 

சும்மா இருப்பதால் தானோ என்னவோ 

சும்மா வுக்கு 

எத்தனை எத்தனையோ 

அர்த்தம் என்னும் 

அணிகலன்கள்...

கொஞ்சம் சும்மா இருடா என்றால் அமைதியாக இரு

என்று அர்த்தம்..

அவரைப் பற்றி 

சும்மா சொல்லக் கூடாது என்றால் 

அருமை பெருமை

என்று அர்த்தம்...

சும்மா கதை விடாதே

என்றால் பொய்யென்ற அர்த்தம் 

சும்மா தான் இருக்கு 

நீ எடுத்துக் கொள் 

என்றால் 

உபயோகம் இல்லை 

என்றே பொருள் படும் 

சும்மா கிண்டல் 

பண்ணாதே என்றால் 

அடிக்கடி என்று அர்த்தம் சாற்றும்..

இப்படி இன்னும் 

அடுக்கிக் கொண்டே 

சும்மாவுக்கு 

அலங்காரம் பண்ணலாம்...

ஆராதித்து ஆனந்திக்கலாம்...

எந்த மொழியிலும் இல்லாத பெருமை 

என்ற 

இன்னொரு சிறப்பும் 

சும்மா வுக்கு உண்டு 

என்பதைச் சும்மா 

சொல்ல வில்லை...

சொல்லியே ஆக வேண்டும் என்ற 

சுய விருப்பத்தில் தான் 

சொல்லுகிறேன்... 

ஆகவே

இங்கே இனி யாரும் 

சும்மாவை சும்மாவா 

நினைத்து சும்மா 

இருந்து விடக்கூடாது !



நெல்லை குரலோன் 

பொட்டல் புதூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%