சிவ பூஜையில் கரடி’ என்பதன் உண்மையான அர்த்தம்

சிவ பூஜையில் கரடி’ என்பதன் உண்மையான அர்த்தம்


பழமொழிகள் அக்கால முன்னோர்களால் சொல்லப்பட்ட பழமை வாய்ந்தவை. அவை காலத்தின் மாறுபட்டால், அடுத்தடுத்து வந்த தலைமுறைகள் பயன்பாட்டின்போது வேறு பொருளுக்கு மாற்றம் பெற்று விளங்குகின்றன. அப்படி மாற்றம் பெற்ற பழமொழிகளில் ஒன்றுதான், ‘சிவ பூஜையில் கரடி’ என்பதும். இந்தப் பழமொழியை வீட்டில் உள்ள பெரியவர்கள் அடிக்கடி சொல்லக் கேட்டிருப்போம். வீட்டிற்கு அவசியமில்லாத நேரத்தில் ஒருவர் வருவதைத்தான் இப்படிக் கூறுவர்.


‘சிவ பூஜையில் கரடி’ என்பதன் உண்மை வாக்கியம், 'சிவ பூஜையில் கரடிகை' என்பதுதான். இந்த வாக்கியத்தின் கடைசியில் வரும் ‘கை’யை மட்டும் காலப்போக்கில் விட்டு விட்டார்கள். பழங்காலத்தில் தெய்வ வழிபாட்டின்போது பல்வேறு இசைக் கருவிகள் இசைக்கப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் கரடி கத்துவது போன்ற ஓசை எழுப்பக்கூடிய கருவியான கரடிகை என்பதால் இதற்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. மிருதங்கத்தைப் போன்று மரம் மற்றும் தோலால் செய்யப்பட்ட இசைக்கருவி இது.


பழங்காலத்தில் நாட்டை ஆட்சி செய்த மன்னர்கள், எந்த ஒரு செயலுக்கும் முன்பு சிவ பூஜை செய்வது வழக்கம். சிவ பூஜை செய்து வழிபட்ட பின்னரே அரியணையில் ஏறுவார்கள். அப்படி சிவ பூஜை செய்யும்போது ஏதேனும் தடங்கலோ இடையூறோ ஏற்படாமல் இருக்க அக்காலத்தில் கரடிகை வாத்தியம் இசைப்பார்கள். அதன் பிறகே சிவ பூஜையில் ஈடுபடுவார்கள். இதுவே பூஜைக்கு இடையூறு ஏற்படுவது போல அர்த்தம் மாறிவிட்டது.


கம்ப ராமாயணத்தில் வரும் பாடல் ஒன்றின் மூலம் கரடிகை என்ற இசைக்கருவி இருந்ததை அறிய முடிகிறது.


'கும்பிகை திமிலை செண்டை குறடுமாம்

பேரி கொட்டி பம்பை தார் முரசும் சங்கம் 

பாண்டில் போர்ப்பணவம் தூரி கம்பலி உறுமை தக்கை

கரடிகை துடி வேய் கண்டை அம்பலி கனுவை ஊமை

சகடையோ பார்த்தவன்றே'


இந்தப் பாடலில் வரும் சொற்கள் அனைத்துமே அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகளை குறிக்கிறது. அவற்றில் ஒன்று கரடிகை. சிவாலயங்களில் வழிபாட்டிற்கான இசைக்கருவிகளில் ஒன்று கரடிகை.


அருணகிரிநாதர் பிள்ளைத் தமிழ் எனும் நூலில் தாள இசைக் கருவிகள் எவை என்பதைக் குறிப்பிடுகிறார். 'இடக்கை சல்லிகை கரடிகை பேரிகை' என அப்பாடல் நீண்டு செல்கிறது. திருவலம் அருகே உள்ள ஒரு கோயில் கல்வெட்டில் இசைக் கருவிகளின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.


ஆக, சிவ பூஜையின்போது முக்கியமாகப் பயன்படுத்தப்பட்ட ஓர் இசைக்கருவிதான் 'கரடிகை.' அது இப்போது தேவையற்ற இடத்தில் ஒருவரின் வருகையை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த இசைக் கருவியின் பயன்பாடு குறைந்து போனது போல, அதன் பெயரும் மாற்றம் பெற்று குறைந்துபோய் அதன் அர்த்தமே மாறிப் போனது ஆச்சரியம்தான்.🌹



லட்சுமி ஆவுடைநாயகம்,

மடிப்பாக்கம்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%