2025 , ஜூலை மாதம் 10ம் நாள்
பௌர்ணமி.
இன்று ஒளி தரும் அழகான பூரண நிலவைக் காண்கையில், நமக்கு அறிவு ஊட்டிய குருவினை வணங்கும் ஒரு பண்பாடு நமது பாரதத்தில் மட்டுமே உண்டு.
"மாதா பிதா குரு தெய்வம்"என்ற வரிசையில் குருவையும் தெய்வமாக வழிபடுகிறோம் .
" மகா குரு " என்று கருதப்படும் வேத வியாசரின் ஆசிகளைப் பெறுவதற்கு குரு பூர்ணிமா தினம் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது .
அவரது ஆசிகள் அறியாமையின் இருளை அகற்றி, அறிவின் ஒளியைக் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.
ஆனி மாத அமாவாசைக்கும் ஆடி மாத அமாவாசைக்கும் இடைபட்ட காலத்திற்கு ஆஷாட மாதம் என்று பெயர்.இந்த ஆஷாட மாதப் பௌர்ணமி நாளில் குரு பூர்ணிமா அனுஷ்டிக்கப் படுகிறது.
"கு" என்றால் அறியாமை ; "ரு" என்றால் போக்குபவர்.
அறியாமை என்னும் இருளைப் போக்கி, ஞான ஒளி தரும் 'குருவைப்"போற்றுவதற்காக கொண்டாடப்படும் பாரம்பரிய ஆசிரியர்
தினம்தான் குரு பூர்ணிமா.
பராசர முனிவருக்கும் சத்தியவதிக்கும் மகனாக வேத வியாசர் அவதரித்த நாள் ஆஷாடமாத பௌர்ணமியாகும். வியாசபகவான் அவதரித்த நாள் என்பதால் இந்நாள் "வியாச பௌர்ணமி"
என்றும் அறியப்படுகிறது.
இவ்வழிபாட்டை வேத வேதாந்தக் கல்வி பயின்றவர்கள் தங்களது குருமார்களை நினைவு கூறும் வகையில் பௌர்ணமி அன்றுச் சிறப்பாக குரு பூஜை செய்வது வழக்கம்.
" ஒன்றே குலம் ஒருவனே தேவன்"
என்றுரைத்த திருமூலரின் திருமந்திரத்திலும் குருவின் பெருமையைக் , குருவின் அவசியத்தை குறிப்பிட்ட பாடல் -
சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர், அவனை வழிபட்டங்கு ஆமாறு ஒன்றில்லை, அவனை வழிபட்டங்கு ஆமாறு காட்டும், குருவை வழிபடிற் கூடலு மாமே”
எண்ணமுடியாத எண்ணிக்கையில் சிவனைத் தேவர்கள் வழிபட்டனர் .ஆனால் அவரை அடையவும்,அறியவும் வழி தெரியவில்லை. அதே சமயம் ஒரு மேன்மையான குருவின் துணைக்கொண்டு வழிபட்டு நின்றால்,சிவத்தை அடைய வழியும் தெரியும் ,அவனைச் சேரவும் முடியும் என்று திருமூலர்,குருவின் பெருமைப் பற்றி சொல்கிறார்.
"குரு தொட்டு காட்டாத வித்தை குருட்டு
வித்தை " என்ற பழமொழியைப் போல குரு உபதேசித்த அனைத்தையும் சரிவரச் செய்தாலே வாழ்க்கை மேன்மை அடையும்.
"வியாசம் வசிஷ்ட நப்தாரம் சக்தே பௌத்ரம் அகல்மஷம் பராசராத்மஜம் வந்தே சுக தாதம் தபோ நிதிம்"
வேத வியாசர் -
வியாசருடைய தந்தை பராசரர் மகரிஷி. தாயார் மச்சகந்தி.இவரே பின்னாளில் சத்தியவதி என அழைக்கப்பட்டார்.
பராசரரின் தந்தை சக்தி.
சக்தியின் தந்தை வசிஷ்டர்.
வசிஷ்டர் ,சக்தி ,பராசரர் ,வேதவியாசர் ,
சுகப்பிரம்ம ரிஷி.
விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் வியாசருக்கு நமஸ்காரம் என்று சொல்லும்போது, வசிஷ்டருடைய கொள்ளுபேரர், சக்தியினுடைய பேரர், பராசரருடைய பிள்ளை, சுகருக்கு அப்பா, என அவரது வம்சத்தையே வணங்குகிறோம்.
வியாசர் ஸ்ரீ மஹா விஷ்ணுவின் அம்சமாக தோன்றினார்.
இவர் மகாயோகி; நடந்தது, நடக்கப் போவது போன்ற அனைத்தையும் அறிந்தவர்.
கடந்த யுகங்களில் வாழ்ந்த மக்கள் தத்தம் மனம் போன படி வாழ்ந்து,வேதங்களை முறைப்படி கற்காததால் தர்மமானது நாளுக்கு நாள் குறைந்து அதர்மம் மேலோங்கியது.
இதனைத் தியானத்தில் அமர்ந்திருந்த வியாசர் உணர்ந்து கொண்டு,வேதங்களுக்குரிய புனிதத்தை இவ்வுலகில் நிலை நிறுத்தவே, தான் அவதாரம் செய்ததை உணர்ந்தார்.
பற்பல விதங்களில் சிதறிக் கிடந்த வேதங்களை ஒன்று படுத்தி,அவற்றின் தன்மைகளுக்கு ஏற்ப ரிக், யஜுர் சாமம் ,அதர்வணம் என்று நான்காக வகைப்படுத்திக் கற்பிக்க ஏற்பாடு செய்தார்.
இதிகாசப் புராணங்களை ஐந்தாவது வேதமாக்கினார்.
வேதங்களின் உட்கருத்துகளை உணர்ந்து கொள்ளப் பதினெட்டு புராணங்களை இயற்றினார்.
பாமர மக்களும் தர்மங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வியாசரே மகாபாரதக் கதையையும் எழுதினார்.
உபநிஷதங்களை நான்காகப் பிரித்தார்.
வேதங்களை அழகாக பிரித்து , தொகுத்து கொடுத்ததால் இவர் "வேத வியாசர் "என அழைக்கப்பட்டார்.
குரு பூஜை என்பது செய்யப்படும்போது, "வியாசபூஜை" என்று சொல்லப்படுகிறது.
குருவின் பீடத்தை "வியாசபீடம்" என்றே கூறுகிறோம்.
காரணம் அனைவருக்கும் குருவாக விளங்குபவர் "வேத வியாசரே" ஆவார்.
கேரளத்தில் திருச்சூர் என்னும் ஊரில் அமைந்நுள்ள வடக்குந்நாதன் கோவிலில்
வலம் வருகையில், "வியாச மேடு " காணலாம்.
வழிபாட்டிற்குரியதான , அந்த மேட்டில் , வலம் செய்யும் பக்தர்கள் எழுதி வணங்கி குருவிற்கு மரியாதையை சமர்ப்பிப்பர்.
குரு வந்தனம் செய்யும் சுலோகங்கள்,..
குரவே சர்வ லோகானாம்
பிஷஜே பவ ரோகினாம்.
நிதயே சர்வ வித்தியானாம். ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியே நம:
குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு
குருர் தேவோ மஹேஸ்வரஹ
குரு சாட்சாத் பரப்ரம்ம
தஸ்மை ஸ்ரீ குரவே நம:
இந்நாளில் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், நமக்கு அறிவைப் புகட்டும் குருமார்களை, ஆசிரியப் பெருந்தகைகளை வணங்கி , மேன்மை அடைவோம்🙏🏻
சோபனா விஸ்வநாதன்