காதலின் மீது மோதிக் கொண்டேன்

காதலின் மீது மோதிக் கொண்டேன்


இந்த பிரபஞ்சத்தில் மிகவும் அழகானதும் ,அசிங்கமானதும் இந்த காதல் தான்.

காதல் சிலருக்கு வாதையை பரிசளிக்கும் ,சிலருக்கு போதையை வரமாய் தரும் .மொத்தத்தில் காதல் கடவுளும் ,சாத்தானும் கலந்த கலவை எனலாம் .

காற்று இல்லாத இடம் கூட இருக்கலாம் காதல் இல்லாத இடமேது .அரிஸ்டாட்டில் ,பிளேட்டோ போன்ற மேதைகள் உருவானது கூட இந்த காதலால் தான் எனலாம் .காதல் பிறக்கும் போது கவி படைப்பவனும் ,தத்துவ ஞானியும் பிறக்கிறான் என்பதை நிச்சயம் அடித்து சொல்வேன்.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழிக்கேற்ப மூன்று ,நான்கு வரிகளில் பல அழகான கவிதைகளை படைத்துள்ளார் நூலாசிரியர் மோகன்தாஸ் என்கிற கோ .பாரதி மோகன் .தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிறந்தவர் ,பித்தளை பாத்திரங்கள் உற்பத்தி செய்யும் பட்டறையில் தொழிலாளியாக இருக்கும் இவருக்கு இந்நூல் இரண்டாவது படைப்பாகும் .இவருடைய முதல் படைப்பான மௌனத்தின் சிறக்கடிப்பு வாசகர்களின் அதிக கவனம் பெற்றவை .

என் மனம் கவர்ந்த ஒரு சில கவிதைகளை வாசகர்களாகிய உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்

நான் மொழியால் செய்வதை 

நீ 

விழியால் செய்து விடுகிறாய்

காதலில் மோதி விட்டால் காதலியின் விழி கூட மொழியை விட வலிமையானது தான்.

உன்னை 

சொற்களில் தேடுகிறேன் 

நீயோ 

மௌனத்தில் ஒளிந்திருக்கிறாய்

மௌனத்தில் ஒளிந்திருக்கும் அவளை காதலால் மட்டுமே காணமுடியுமென தன்னுடைய கவிதையில் சொல்லாமல் சொல்கிறார்.

என் பிச்சை பாத்திரத்தில் 

காதலை 

தானமிட்டவள் நீ

உன்னை பார்ப்பதும் 

பார்க்காமல் இருப்பதும் 

கண்களுக்கு சாபம்

காதல் இல்லாத இதயம் 

பேய்களின் சத்திரம் 

காதலே உனக்கான ஆடையை 

கண்ணீரால் நெய்கிறேன்

இப்படி போகிற போக்கில் காதலை கொண்டாடி தீர்த்திருக்கிறார் இவையனைத்தும் கவிதைகள் அல்ல காதல் கனவுகளின் குவியல் மொத்தத்தில் காதல் போதையையும் தரும் ,வாதையையும் தரும் என்பதை கவிஞர் கோ .பாரதி மோகன் தன் கவிதையால் அழகுற சொல்லி இருக்கிறார் காதலர்கள் கண்டிப்பாக வாங்கி படிக்க வேண்டிய கவிதை நூல் 

நூல் வெளியீடு 

மௌவல் பதிப்பகம்

21/9 வரதர் தெற்கு மடவிளாகம் தெரு 

வலங்கை மான் -612 804


-லி .நௌஷாத் கான் -

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%