கடைசில இப்படி ஆயிடுச்சே

கடைசில இப்படி ஆயிடுச்சே


தன் கணவர் ராஜனும் பக்கத்து வீட்டு வேதாச்சலமும் கூடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததை செவிமடுத்தவாறே சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தாள் கண்ணம்மா.


 "பாருங்க வேதாச்சலம் சார்

.. உங்க பையன் கோபி... டிகிரி முடிச்சு மூணு வருஷமாகியும் வேலைக்கு போகாம... 'போனால் கவர்மெண்ட் வேலைக்கு தான் போவேன்!',ன்னு பீலா விடுறதெல்லாம் எதுக்கு?... எந்த கஷ்டமும் படாம.... சொகுசா... அப்பன் சம்பாத்தியத்திலயே தின்னுட்டு... ஊரைச் சுத்திகிட்டு ஜாலியா இருக்கணும்னு தான்...!"


 "அப்படியா சொல்றீங்க?... சரி.. இதை எப்படித் தடுக்கிறது?"


  'நான் சொல்ற மாதிரி செய்யுங்க!... தினமும் அவனை 'தண்டச் சோறு" "வெட்டிப்பயல்" "தட்டுவானி" 'ஊர் சுற்றிப் பயல்"ன்னு பார்க்கிற போதெல்லாம் திட்டிட்டே இருங்க"


  "அப்படிச் செஞ்சா....?" அப்பாவியாய்க் கேட்டார் வேதாச்சலம்.


  "ஒரு நாளைக்கு இல்லேன்னா... ஒரு நாளைக்கு ரோஷப்பட்டு வீட்டை விட்டு வெளியேறுவான்.... அப்புறம் ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பிப்பான்... "இந்தாங்க நான் சம்பாதிச்ச பணம் எடுத்துக்கங்க!" ன்னு உங்க காலடியில் கொண்டு வந்து பணத்தை கொட்டுவான்... பாருங்கள்"


    ராஜனின் பேச்சை முழுதாய் நம்பி, அன்றிலிருந்து தன் மகனை வார்த்தைச் சாட்டையால் விளாசினார். சொல்லம்புகளை கொட்டினார். தாங்க முடியாத கோபி வீட்டை விட்டு வெளியேறி விட வேதாச்சலம் காத்திருந்தார்.


  அவரது எதிர்பார்ப்பைப் பொய்யாக்கும் விதமாக ரயில் முன் பாய்ந்து கோபி தற்கொலை செய்து கொள்ள,


   செய்தி கேட்டு அரண்டு போனார் ராஜன்.


குற்றவுணர்ச்சி தாளாமல் தன் மனைவியிடம் புலம்பினார். "தப்புப் பண்ணிட்டேன் கண்ணம்மா... தப்புப் பண்ணிட்டேன்" முன் நெற்றியில் அடித்துக் கொண்டார்.


  "நீங்க வேதாச்சலம் சாரோட பேசிட்டிருந்ததை நானும் கேட்டேன்" என்ற கண்ணம்மா ராஜனின் அருகில் வந்து, சன்னக் குரலில், "ஏங்க எல்லா விஷயத்திலும் உங்க அனுபவத்தைப் பயன்படுத்தி... சரியான காரண காரியங்களை ஆராய்ந்து... தீர்க்கமா முடிவெடுக்கற நீங்க அன்னிக்கு எந்த அர்த்தத்தில் அப்படியெல்லாம் சொன்னீங்க?" கேட்டாள்


  "அது வந்து... நான் படிச்சு முடிச்சுட்டு வேலை தேடிட்டிருந்த நேரத்திலே ஒரு நாள் எங்கப்பா ஏதோ ஒரு வேகத்துல.... ஒரு சின்னக் கோபத்துல என்னை "தண்டச்சோறு" என்கிற அர்த்தத்தில் பேசிட்டார்... அதுக்கே வீட்டை விட்டு வெளியேறிய நான்... அப்பவே ஒரு சபதம் போட்டுக்கிட்டேன்... நல்லா கஷ்டப்பட்டு உழைச்சு, பெரிய ஆளாகி, இதே அப்பா முன்னாடி போய் நிற்க வேண்டும் என்ற அந்த சபதத்தில் வெற்றியும் அடைந்தேன்... என்னைக் கட்டிப் பிடித்து அழுத அப்பாவிடம் "அப்பா என்னோட முன்னேற்றத்திற்குக் காரணமே நீங்களும் உங்களோட திட்டும் தான்"னு சொல்லி அழுதேன்..


தன்னையே விழிகளை விரித்த படி பார்த்துக் கொண்டிருந்த கண்ணம்மாவிடம், "அதே மாதிரி இந்த கோபியும் ரோஷத்துல வேலைக்குப் போய் பெரிய ஆளா வருவான்னு நினைத்தேன்... என் எண்ணம் தப்பாயிடுச்சு" என்றார் ராஜன் தழுதழுத்த குரலில்.


  "எல்லாம் சரிதான்... ஆனா நீங்க ஒரு விஷயத்துல கோட்டை விட்டுட்டீங்க?.. அந்தக்கால இளைஞர்களுக்கும்... இந்தக்கால இளைஞர்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குங்க!... அப்பத்த இளைஞர்கள் கிட்ட இருந்த மனோதிடம்... மனப்பக்குவம்... இப்பத்த இளைஞர் கிட்ட இல்லைங்க!... பூஞ்சை மனசுங்க!... ஆன்னா ஊன்னா தற்கொலை முடிவுக்குப் போயிடுவானுங்க,!!.. வேலை கிடைக்கலையா?... காதல் தோல்வியா?... கட்சித் தலைவன் கைதா?.. எக்ஸாம்ல ஃபெயிலா?.... எல்லாத்துக்கும் தற்கொலை!"


கண்ணம்மா சொன்ன அந்த யதார்த்த உண்மையைப் புரிந்து கொண்ட ராஜன் வேதாச்சலத்தை எப்படிச் சமாதானப்படுத்துவது?... எப்படி ஆறுதல் கூறுவது?.. என்பது குறித்து யோசிக்க ஆரம்மித்தார்.


  (முற்றும்).


முகில் தினகரன் 

கோயமுத்தூர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%