எனக்கு நூறு கால்கள் இருக்கு

எனக்கு நூறு கால்கள் இருக்கு


   தன் அருகில் வந்தமர்ந்த கூனனை யோசனையுடன் பார்த்த சுயம்பு மெல்லக் கேட்டான். "என்னப்பா?... அங்க உட்கார்ந்து பிச்சையெடுக்கிற நீ இந்தப் பக்கம் வந்திருக்கே?...என்ன விஷயம்?"


  "ஒண்ணுமில்லை... என்னோட முதுகுல... வலது பக்கம் ஒரு பெரிய புடைப்பு... அதனால கொஞ்சம் கூன்!.... இந்த ரெண்டையும் காட்டி... அங்கே உட்கார்ந்து பிச்சையெடுக்கிற எனக்கு தினப்படி வருமானம் எவ்வளவு தெரியுமா?... நானூறிலிருந்து ஐநூறு".


  "சரி... அதுக்கென்ன இப்ப?" எரிச்சலாய் கேட்டான் சுயம்பு.


   "உனக்கு பஸ் ஆக்சிடெண்ட்ல இரண்டு காலுமே இடுப்புக்கு கீழே போயிடுச்சு... பலகைல நாலு சக்கரத்தை வச்சுக்கிட்டு உட்கார்ந்தபடியே கையால தள்ளித் தள்ளி நடக்குறே!... இப்படியிருக்கிற நீ... அங்க வந்து என் கூட உட்கார்ந்தேன்னா.... தினமும் என்னை விட அதிகமா அதாவது 700... 800... ரூபாய் வரைக்கும் பிச்சை விழும்"


   அந்தக் கூனனை முறைத்தான் சுயம்பு.


   "அதை விட்டுட்டு இந்தப் பக்கம் வந்து உட்கார்ந்துகிட்டு... ஷூவுக்கு பாலிஷ் போடுற இந்த வேலையைப் பண்ணிக்கிட்டிருக்கே!... இதுல எத்தனை கிடைச்சிடும் உனக்கு?... ஒரு நாளைக்கு 100... 150... ரூபாய் வருமா?" கூனன் கேட்க.


   மேலும் கீழும் தலையாட்டினான் சுயம்பு.


  "உழைச்சுச் சம்பாதிக்கிறேன்" ன்னு பீத்திக்கிறதுக்காக இப்படி கஷ்டப்படுவதை விட்டுட்டு... என் கூட வா... எந்த உழைப்புமே இல்லாம... துளியும் கஷ்டப்படாம... இதை விட ரெண்டு மடங்கு... மூணு மடங்கு சம்பாதிக்கலாம்!... என்ன?" கூனன் தலையைச் சாய்த்துக் கொண்டு கேட்டான்.


  இட வலமாய்த் தலையாட்டினான் சுயம்பு.


   "என்ன சுயம்பு இவ்வளவு சொல்றேன் புரிஞ்சுக்காமப் பேசுறியே? உனக்கென்ன கிடைக்குது இந்த வேலைல?" கோபமாய் கேட்டான் கூனன்.


 "மனதிருப்தி கிடைக்குது"


  "எது?... குறைச்சலான வருமானம் வருதே... அதுவா மனதிருப்தி?" நக்கலாய் கேட்டான் கூனன்.


   குறுஞ்சிரிப்பு சிரித்த சுயம்பு, "இதப் பாரு... உன்னால உன்னோட ரெண்டு கால்களையும் தொட முடியும்... நல்ல நீவி வீட்டுக்க முடியும்... இதமா அழுத்தி விட்டுக்கவும் முடியும்!...ஆனா என்னால?" கேட்டு விட்டு இடுப்பிற்கு கீழே வெறுமையாகிப் போயிருந்த தன் கால் பகுதியை பார்த்தான் சுயம்பு.


   "சரி அதுக்காக?"


   "அதனாலதான் இந்த வேலை மூலமா தினமும் ஷூக்களுக்கு பாலிஷ் போட்டுட்டு...அதை நானே அந்த ஆட்களோட கால்களை தொட்டு மாட்டி விடறேன்!... என்னோட ரெண்டு கால்களைத்தான் தொட முடியாது... ஆனால் தினமும் கிட்டத்தட்ட நூறு கால்களை தொட்டுத் தொட்டு சந்தோஷப்பட்டுக்கறேன்... இதுல கிடைக்கிற ஆத்மதிருப்தி 700... 800... பிச்சையெடுத்துச் சம்பாதிக்கிறதுல கிடைக்காது..."


   அந்தக் கூனன் மறு பேச்சின்றி நகர்ந்தான்.

(முற்றும்)



முகில் தினகரன்,

கோயமுத்தூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%