எண்ணம் போல் வாழ்க்கை..!!

எண்ணம் போல் வாழ்க்கை..!!


நொய்யல் என்னும் அழகிய ஊரில், சண்முகம் என்ற பெரிய பண்ணையார் ஒருவர் இருந்தார். அந்த ஊரில் இருந்த பெரும்பாலான நிலங்கள் அவருக்கு தான் சொந்தம். அவர் பணத்தாசை பிடித்தவர். அவரிடம் முத்தன் என்ற விவசாயி வேலை பார்த்து வந்தார். அவருக்குக் குடிசை மற்றும் சிறிதளவு நிலமும் இருந்தன.


பண்ணையாரிடம் முத்தன், தன் நிலத்திலும் விதை விதைக்க விதைகள் கேட்டார். ஆனால், அவர் தர மறுத்ததால், விவசாயி தன் மனைவியிடம், எப்போதும் போல பசியில் இருக்க வேண்டியதுதான் என்று சோகமாகக் கூறினார்.


விவசாயி குடிசையில் குருவி ஒன்று கூடு கட்டி இருந்தது. அதற்கு தங்க இடமும், தானியமும் கொடுத்தனர். அந்தக் குருவி நான்கு முட்டைகள் இட்டு குஞ்சு பொறித்தது. ஒரு நாள் பலத்த புயல், மழையால் வெளியே சென்ற தாய் குருவி வரவில்லை.


இளம் குஞ்சுகள் பசியால் கத்தியது. விவசாயி அவைகளின் பசியை போக்க சிறு தானியங்களை கொடுத்தார். இரவில் அந்தக் குருவிக் கூட்டுக்குள் பாம்பு நுழைந்ததை கண்ட விவசாயி பாம்பை அடித்துக் கொன்றார். சிறிது நேரத்தில் தாய் குருவி வீட்டிற்கு வந்தது. பின், குஞ்சுகள் நடந்ததை கேட்டதும், தாய்க்குருவி விவசாயிக்கு நன்றி கூறியது.


குஞ்சுகள் வளர்ந்ததும், விவசாயிக்கு நன்றி கூறி தாய் குருவி தன் குஞ்சுகளுடன் பறந்து சென்றது. சில நாட்கள் சென்றன. விவசாயி வீட்டில் சாப்பிடவே தானியங்கள் இல்லாததால் பசியால் அனைவரும் வாடினர்.


அந்த சமயத்தில் தாய் குருவி விவசாயிடம் மூன்று விதைகளைக் கொடுத்து அதில் ஒன்றை தோட்டத்திலும், மற்றொன்றை முன்புறத்திலும், மூன்றாவது விதையை சன்னல் ஓரத்திலும் நடுமாறு கூறியது. எங்கள் மீது காட்டிய அன்பிற்கு நன்றி என்று சொல்லிவிட்டுப் பறந்தது, தாய் குருவி.


குருவி கூறியவாறு மூன்று விதைகளையும் முத்தன் நட்டார். மறுநாள் காலையில் அங்கே மூன்று பெரிய பூசணிக்காய்கள் காய்த்திருப்பதைப் பார்த்து வியப்படைந்தார்.


அந்த பூசணிக்காய்களை வெட்டியதும் ஒன்றிலிருந்து உணவு பொருட்கள், மற்றொன்றிலிருந்து ஆடைகளும், கடைசி பூசணிக்காயிலிருந்து பொற்காசுகளும் வந்தன.


பின் அவர்கள் பூசணிக்காயிலிருந்து கிடைத்த பொருட்கள் மூலம் நல்ல நிலையை அடைந்தனர். அதன்பின் ஏழ்மையில் உள்ளோருக்கு உதவியும் செய்தனர்.


நீதி :


நல்லது செய்தால் நல்லதே நடக்கும். 'எண்ணம் போலவே வாழ்க்கை அமையும்".

 

Thanks and regards 

A s Govinda rajan 


அறிவார்ந்த முயற்சியால் ஆகாததில்லை!



முன்னொரு காலத்தில் ரோமாபுரி என்னும் நாட்டில் ஒரு பெரிய வியாபாரி இருந்தார். அவருக்கு பாபு, குமார், ராமன் என்ற மூன்று மகன்கள் இருந்தனர். தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யாரிடம் ஒப்படைப்பது என தீர்மானிக்க அவர்களுக்கு வியாபாரி ஒரு போட்டி வைத்தார்.


யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்தில் விற்கிறார்களோ அவர் தான் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அவர்களிடம் கூறினார். அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சில நாட்கள் அவகாசம் கொடுத்தார். ஆனால், மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா? என்று மூன்று மகன்களும் ஆரம்பத்தில் திகைத்தனர்.


பிறகு மூவரும் முயற்சி எடுப்பது என்று முடிவு செய்தனர். அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சில நாட்கள் அவகாசம் கொடுத்த அந்த வியாபாரி, அவகாசம் முடிந்தவுடன் மகன்களை அழைத்து அவர்கள் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கேட்டார்.


அதில், முதல் மகன் பாபு இரண்டு சீப்புகள் புத்த மடாலயத்திற்குள் விற்றேன் என்றான். எப்படி விற்றாய்? என்று அவனது தந்தை கேட்டார். சீடர்களிடம், இந்த சீப்பை முதுகு சொறிய உபயோகிக்கலாம் என்று கூறினேன். இரண்டு புத்த சீடர்களுக்கு அது சரியென தோன்றியது. அதனால் இருவரும் இரண்டு சீப்புகள் வாங்கினார்கள் என்றான்.


இரண்டாவது மகன் குமார், பத்து சீப்புகள் விற்பனை செய்ததாக கூறினான். ஆச்சரியத்துடன் எப்படி? என அவனது தந்தை கேட்டார். வழியெல்லாம் காற்று அதிகமாக உள்ளதால் மலை மேல் உள்ள புத்த மடாலயத்திற்கு செல்பவர்கள் தலைமுடி கலைந்து விடுகிறது. அப்படி கலைந்த தலைமுடியுடன் புத்தரை தரிசிக்க பக்தர்கள் செல்வது, புத்தருக்குச் செய்யும் அவமரியாதையாகத் தோன்றுகிறது என்றும், ஒரு பெரிய கண்ணாடியும் சில சீப்புகளும் வைத்தால் அவர்கள் தங்கள் தலைமுடியைச் சரி செய்து கொண்டு புத்தரை தரிசிக்க செல்வது நன்றாக இருக்கும் என்றும், ஆலோசனை கூறியதால் அச்சீடர்கள் ஒத்துக்கொண்டு பத்து சீப்புகள் வாங்கினார்கள் என்றான். இதைக்கேட்ட வியாபாரி குமாரைப் பாராட்டினார். 


பின், மூன்றாவது மகன் ராமன் ஆயிரம் சீப்புகள் விற்பனை செய்ததாக கூறினான். எப்படி? என ஆச்சரியத்துடன் கேட்டார். புத்த மடாலயத்திற்கு ஏராளமானோர் பொருளுதவி செய்கிறார்கள். அவர்கள் உதவியை பாராட்டி புத்தரின் ஆசிகள் அவர்களை வழிநடத்தும் வண்ணம் அவர்களுக்கு ஏதாவது ஒரு நினைவுப்பரிசு வழங்கினால், மேலும் பலரும் புத்த மடாலயத்திற்கு உதவி செய்யத் தூண்டுவதற்கு உதவும் என்றேன்.


பின் நான் புத்தரின் வாசகங்களைப் பதித்து வைத்திருந்த சில சீப்புகளை நீட்டினேன். அந்த சீப்புகளை தினமும் உபயோகிக்கும் பக்தர்களுக்கு அந்த வாசகத்தை தினமும் காணும் வாய்ப்பும் கிடைக்கும், அந்த உபதேசங்கள் அவர்களைத் தினமும் வழிநடத்துபவையாகவும் இருக்கும் என்று தெரிவித்தேன். அது நல்ல யோசனை என்று நினைத்து மடாலயத் தலைவர் ஆயிரம் சீப்புகளை வாங்க ஒப்புக்கொண்டார் என்றான்.


இப்போது அந்த வியாபாரி எந்த மகனிடம் தன் வியாபாரத்தை ஒப்படைத்தார் என்று தெரிகிறதா?


மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு விற்கப்போவது கண்டிப்பாக ஆகாத வேலை என்று நினைப்பது தான் பொதுவாக நாம் காணக்கூடிய மனோபாவம். விதி சில சமயங்களில் நம்மைக் கொண்டு சேர்க்கும் சூழ்நிலையும் கிட்டத்தட்ட இதே போலத் தான் இருக்கும். அதிலிருந்து மீள்வதற்கு வழியே இல்லை என்று முதலில் தோன்றும். ஆனால், நாம் இருக்கும் அந்த மோசமான சூழ்நிலைக்குத் தீர்வே இல்லை என்று ஆரம்பத்தில் தோன்றினாலும் ஏதாவது செய்து நல்ல தீர்வைக் காண வேண்டும் என்று தீர்மானிப்பதே அறிவு.


முயற்சிகளிலும் பல வகை உண்டு என்பதற்கு வியாபாரியின் மூன்று மகன்களின் முயற்சிகளே உதாரணம். 


நீதி:


எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் மனம் துவண்டுவிடாமல், முடியாது என்று தோன்றும் எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து பல்வேறு கோணங்களில் சிந்தியுங்கள். பொறுமையுடனும், நம்பிக்கையுடனும், துடிப்புடனும் செயல்பட்டால் அந்தக் கடினமான சூழ்நிலையே நீங்கள் அடையப் போகும் வெற்றிகளுக்கு ஊன்றுகோலாய் அமையும்.



 Thanks and regards 

A s Govinda rajan 




சுயநலமற்ற நண்பன்.! 



ராமு என்பவர் ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவர் ஆவார். அவருடைய நிறுவனத்தில் கார்த்தி என்ற நண்பரும் பணிபுரிந்து வந்தார். தொழிலில் வெற்றியடைந்ததால் ஒரு உல்லாச பயணமாக கப்பலில் அவருடைய நண்பர்களுக்கும், பணிபுரிபவர்களுக்கும் ராமு விருந்து வைத்தார். கடலில் சென்ற போது புயலினால் அக்கப்பல் கடலில் மூழ்கியது. அக்கப்பலில் பயணித்த ராமுவும், கார்த்தியும் மட்டுமே உயிர் தப்பி கடலில் நீந்தி வந்து அருகிலிருந்த ஒரு சிறிய தீவிற்கு வந்தடைந்தனர்.


அப்போது அவர்கள் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்திருந்தனர். முடிவில் இருவரும் கடவுளை வேண்டிக் கொள்வதென்று முடிவு செய்தனர். அப்போது யாருடைய பிரார்த்தனைக்கு அதிக சக்தி இருக்கிறது என பார்ப்போம் என்று, இருவரும் முடிவு செய்து தனித்தனியாக கரைகளில் தங்கினார்கள்.


முதலில் இருவரும் உணவுக்காகப் பிரார்த்தனை செய்யலாம் என்று எண்ணி பிரார்த்தனை செய்தனர். அவர்களின் பிரார்த்தனைப்படி ராமு இருந்த பகுதிக்கு சில பழங்கள் மிதந்து வந்தன. பசி தீர பழங்களை உண்டார். மேலும், அவர் தான் உடுத்திக்கொள்ள துணிகளும், தனக்கு அருகில் மனைவியாக ஒரு பெண் இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் வேண்டினார். 


பின், அவர் வேண்டுதல் படியே அந்த தீவுக்கு அருகில் வந்த சிறிய கப்பல் உடைந்து அதிலிருந்து ஒரு அழகிய இளம் பெண் மட்டும் உடைந்த கப்பல் பலகையின் உதவியுடன் அத்தீவிற்கு வந்தாள். அவளையே தெய்வ சாட்சியாக திருமணம் செய்து கொண்டார் ராமு. ஆனால், அந்த தீவில் இருக்கும் கார்த்தியோ பசியால் வாடி, தனிமையில் இருந்தார். 


ராமு செய்த வேண்டுதல் படி நல்ல உணவுகள், துணிகள் எல்லாம் அவர் இருந்த பகுதிக்கு மட்டுமே மந்திரம் செய்தது போல கரை ஒதுங்கின. கரைக்கு ஒதுங்கி வந்த பழங்கள், உணவுகளுடன் ராமுவும், அந்தப் பெண்ணும் ஒரு வாரத்தைக் கடத்தினர். இறுதியாக ராமு, தன் சொந்த இடத்திற்கு போவதற்காக கடவுளிடம் வேண்டினார். அதேபோல் படகு ஒன்று அடுத்த நாளே கரை ஒதுங்கியது.


ராமு தனது பிரார்த்தனையின் சக்தி கண்டு மிகுந்த மகிழ்ச்சியில், துரதிர்ஷ்டம் மிக்க தன் நண்பன் கார்த்தியை அழைக்காமல் தன் புது மனைவியுடன் அப்படகில் ஏறி அந்த தீவை விட்டுச் செல்ல தயாரானார். எல்லாம் கிடைத்த ராமு, கடவுளின் ஆசிர்வாதம் கூட கார்த்திக்கு கிடைக்கவில்லை, ஒரு சிறு பிரார்த்தனையை கூட கடவுள் நிறைவேற்றி வைக்கவில்லை. அவனை அழைத்துச் செல்ல கடவுளுக்கே விருப்பமில்லை என்று நினைத்தார். அவர்கள் தீவிலிருந்து புறப்படும் சமயத்தில் வானத்திலிருந்து ஒரு குரல் ஒலிக்கத் தொடங்கியது.


ஏன் உன் நண்பனை தனியாக இந்த தீவில் விட்டு செல்கிறாய்..? என்று அந்த குரல் கேட்டது. அதற்கு ராமு, நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன். அவர் என்னை ஆசிர்வதித்து, இது எல்லாம் எனக்கு மட்டுமே கிடைக்கச் செய்தார். அந்த குரல் அவனிடம் மறுபடியும், மகனே நீ நினைப்பது தவறு. நான் தான் கடவுள்.


உன்னை உயிராக நேசிக்கும் உன் நண்பர் பிரார்த்தனையில் ஒன்றே ஒன்று மட்டும்தான் கேட்டார். நான் அந்த ஒரு பிரார்த்தனையை தான் நிறைவேற்றி வைத்தேன். அதுமட்டும் அவன் கேட்கவில்லை என்றால் உனக்கு ஆசிர்வாதமும், பலனும் கிடைத்து இருக்காது என்றார். உன் நண்பன் வேண்டியது, வாழ்க்கையில் சுகம் மட்டுமே அனுபவித்து பழகியவர், அவர் கஷ்டமே அறியாதவர். ஆகவே, என் பிரார்த்தனையெல்லாம் அவர் வேண்டுவதை மட்டும் நிறைவேற்றுங்கள். அது போதும். நான் ஏற்கனவே ஏழை தான், இதுமாதிரி சூழ்நிலைகள் எனக்கு புதியதல்ல. ஆகவே எனக்கென்று கேட்க எதுவும் இல்லை என வேண்டினான் என்று கடவுள் கூறினார். அதைக்கேட்ட ராமு, மனம் திருந்தி தன்னலமற்ற தன் நண்பனை தேடி ஓடினார்.


நீதி: 


நம்மை நேசிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஒதுக்கி வைக்கக்கூடாது. உறவையும், நட்பையும் மதிக்க கற்றுக்கொள்வோம்.

 

Thanks and regards 

A s Govinda rajan 


ஏமாற்றம்..! 



ஒரு ஊரில் மணி என்ற பொற்கொல்லன் ஒருவர் வசதியாக வாழ்ந்து வந்தார். அவருக்கு திருமண வயதில் ஓர் அழகான மகள் இருந்தாள். அதே ஊரில் வட்டிக்குக் கடன் கொடுக்கும் வாசு என்ற இளைஞரும் இருந்தான். அவனுக்கு பொற்கொல்லன் மகளை மணம் முடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், பொற்கொல்லனிடம் திருமணத்தை பற்றி பேசும்போதெல்லாம் அவர் மறுத்துவிடுவார். ஏனென்றால், பொற்கொல்லன் மகளுக்கு அந்த இளைஞனை அறவே பிடிக்காது.


ஒரு முறை நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. அதனால், பொற்கொல்லனின் வியாபாரம் நஷ்டம் ஏற்படும் நிலைக்கு வந்தது. அதனால், பொற்கொல்லன் வேறு வழியில்லாமல் வாசுவிடம் கடன் வாங்கப் போனார். அவனும் எந்த கேள்வியும் கேட்காமல் கடன் கொடுத்தான். பிறகு பொற்கொல்லனால் கடனைக் குறித்த நேரத்தில் திருப்பிக் கொடுக்க இயலவில்லை. அதனால், வாசு பொற்கொல்லனிடம் கடனைத் திரும்பக் கேட்காமல், அவர் மகளை மணம் முடித்துத் தருமாறு கேட்டான்.


பொற்கொல்லனும், அவர் மகளும் திருமணம் செய்ய மறுத்தார்கள். பிறகு வாசு ஊர் பெரியவர்களிடம் நியாயம் கேட்டான். அவர்களும், வாசுவிற்கு மகளை மணம் முடித்துக் கொடுத்து விடும்படி பொற்கொல்லனுக்கு அறிவுறுத்தினார்கள். 


ஆனால், பொற்கொல்லன் மறுத்துவிட்டார். பணத்தை எப்படியாவது திருப்பித் தந்து விடுவதாக கூறினார். இதை ஒத்துக்கொள்ளாத வாசு பிரச்சனையைத் தீர்க்க அனைவருக்கும் ஒரு யோசனையை கூறினான். 


என்னவென்றால், ஊரின் மத்தியில் உள்ள திடலில் சம்பந்தப்பட்ட அனைவரும் வாரக் கடைசியில் கூட வேண்டும். அந்தத் திடலில் கருங்கூழாங்கற்களும், வெண்கூழாங்கற்களும் நிறைந்திருக்கும். அந்தச் சமயம் வாசு திடலிலிருக்கும் கற்களிலிருந்து ஒரு கருங்கூழாங்கல்லையும், ஒரு வெண் கூழாங்கல்லையும் ஒரு சிறிய பைக்குள் போட்டுக் கொண்டு வருவான். பொற்கொல்லன் மகள் அவன் கொண்டுவரும் பைக்குள் கையை விட்டு, ஊரார் மத்தியில், ஒரு கல்லை எடுக்க வேண்டும். அவள் கையில் வெள்ளைக் கல் வந்தால் அவள் விருப்பம் போல் மணம் செய்து கொள்ளலாம். கருப்புக் கல் வந்தால் தன்னைத்தான் அவள் மணம் செய்து கொள்ளவேண்டும்.


இந்த யோசனையை பொற்கொல்லனும், அவர் மகளும் ஒத்துக் கொண்டால், கடனை ரத்து செய்து விடுவதாக வாசு ஊர் பெரியவர்களிடம் கூறினான். பொற்கொல்லனும் அவன் மகளும் இதற்கு ஒத்துக் கொண்டார்கள்.


பின்னர் வாசு தந்திரமாக ஒரு காரியம் செய்தான். அவன் திடலுக்குக் கொண்டு செல்லும் பைக்குள், இரண்டு கருப்பு கூழாங்கற்களையும் வைத்து விட்டான். பொற்கொல்லன் மகளுக்கு தெரிந்த ஒரு சிறுவன் இந்தக் காரியத்தை வாசுவிற்கு தெரியாமல் பார்த்து விட்டான். உடனே ஓடிச்சென்று அவளிடம் கூறி விட்டான்.


என்ன செய்வதென்றே அவளுக்குத் தெரியவில்லை. இரவு முழுவதும் தூங்காமல் யோசித்து யோசித்து விடை எதுவும் கிடைக்காமல் குழம்பிப்போனாள். அடுத்தநாள் அமைதியாக திடலுக்குப் போனாள். அங்கே அவளுக்கு தரையில் கிடந்த கறுப்பு வெள்ளைக் கூழாங்கற்களைப் பார்த்தவுடன் உற்சாகம் வந்து விட்டது.


வாசுவும் பையைக் கொண்டு வந்து பொற்கொல்லன் மகளிடம் கொடுத்தான். அவள் அதை வாங்கித் திறந்து அதனுள் இருந்த ஒரு கல்லை எடுத்து அதன் வண்ணத்தை எவரும் கவனிக்கும் முன் கை தவறுவது போல திடலில் கிடக்கும் மற்ற கறுப்பு, வெள்ளை கூழாங்கற்களுக்கு மத்தியில் நழுவ விட்டு விட்டாள். 


எதிர்பாராமல் நடந்ததாலும், அவள் நழுவ விட்ட கல் மற்ற இரண்டு கூழாங்கற்களுக்கு மத்தியில் சேர்ந்து விட்டதாலும், அந்தக் கல்லை யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. திடுக்கிட்டுப் போன ஊர் பெரியவர்களிடம் அவள் அமைதியாகப் பேசினாள். 


பைக்குள் ஒரு வெள்ளைக் கல்லும், ஒரு கருப்புக் கல்லும் இருந்ததால், பைக்குள் மிச்சமிருக்கும் கல்லை ஊரார் பார்த்தால் அவள் எடுத்து நழுவ விட்ட கல்லின் வண்ணம் எதுவென்று தானாகத் தெரிந்துவிடும் என்று சொல்லி பையை அவர்களிடம் கொடுத்து விட்டாள்.


பைக்குள் இரண்டு கருப்புக் கற்களை வைத்த வாசுவிற்கு திருடனுக்குத் தேள் கொட்டியது போல ஆகி விட்டது. ஏனென்றால், பைக்குள் இருப்பது கறுப்பு கல். பிறகு கடனை ரத்து செய்வதாக எழுதிக் கொடுத்து விட்டு ஏமாற்றத்துடன் சென்று விட்டான்.

 


Thanks and regards 

A s Govinda rajan 


வாய்ப்பை தவறவிடாதீர்கள்...!


பேரரசன் நெடுஞ்செழியன் என்பவர், போரில் பெற்ற மாபெரும் வெற்றியை நினைத்து பெரும் மகிழ்ச்சி அடைந்தார். அந்த வெற்றிக்குப் பேருதவியாக இருந்த அவரது நான்கு தளபதிகளையும் அழைத்து உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் என்று கூறினார்.


அவர்களில் முதல் தளபதி ஜெர்மனியைச் சேர்ந்தவன். அவன் மன்னனிடம் எனக்கு பாரிஸ் நகரத்தில் ஒரு வீடு கட்டிக் கொள்ள வெகுநாளாக ஆசை என்றான். உடனே அரசரும், உனக்கு பாரிஸ் நகரத்தில் பெரிய மாளிகையே கட்டித் தரச் சொல்கிறேன் என்றார்.


அடுத்தவன் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்தவன். அவன் தனக்கு சொந்தமாக ஒரு தங்கும் விடுதி நடத்த ஆசை என்று கூறினான். மாமன்னன் நெடுஞ்செழியனும் சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் ஏற்பாடு செய்வதாகக் கூறினார்.


மூன்றாம் தளபதி போலாந்துக்காரன். அவன் தனக்கு திராட்சை மது செய்யும் தோட்டமும், தொழிற்சாலையும் வேண்டும் என்று கேட்டான். அதற்கும் நெடுஞ்செழியன் சரி என்று பதில் கூறினார்.


கடைசி தளபதி ஒரு யூதன். அவன் நெடுஞ்செழியனிடம், எனக்கு இரண்டு வார விடுப்பை பரிசாக அளிக்க வேண்டும் என்று கேட்டான். அதற்கு மன்னன், உன் விடுப்பு நாளை முதல் தொடங்கும் என்றார்.


அவர் பணித்தவுடன் வெளியே வந்த தளபதிகளில் முதல் மூவரும் யூதனைப் பார்த்து சரியான முட்டாளாக இருக்கிறாயே! ஏதாவது விலை மதிப்புள்ளதாகக் கேட்காமல் விடுப்பைப் போய் கேட்கிறாய்? என்று ஏளனம் செய்தார்கள்.


அதற்கு அவன் நண்பர்களே! நீங்கள் கேட்டதையெல்லாம் மன்னன் ஏற்பாடு செய்து தருவதாகத்தான் கூறியிருக்கிறார். இன்னும் அவை உங்கள் கையில் கிடைக்கவில்லை. அவர் கொடுத்த வாக்குகளை நேரடியாகச் செயல்படுத்த அவருக்கு நேரமிருக்கப் போவதில்லை. குழுமச் செயலருக்குதான் பணிக்கப்போகிறார்.


ஆனால் அவரோ, ஆயிரம் வேலை செய்பவர். அவரும் அவருக்கு கீழ் வேலை செய்பவர்களுக்குத்தான் இந்த வேலைகளைக் கொடுப்பார். உங்களுக்கு அளிக்கப்பட்ட பரிசுகளுக்கான வாக்குறுதிகளின் முக்கியத்துவம் இப்படியே ஆணைகளுக்கு கீழ் செல்லச் செல்ல கரைந்து கொண்டே போய் கடைசியில் மறைந்துவிடும் வாய்ப்புகள் அதிகம் என்றான். இதைக் கேட்டதும், மற்ற தளபதிகள், அப்படி நடந்தால் மன்னனிடம் போய் முறையிடலாம் தானே என்றார்கள்.


அதற்கு யூதத் தளபதி, நண்பர்களே.! மன்னனுக்கு இன்றைக்கு இருக்கும் வெற்றிக் களிப்பு வெகுநேரம் நிலைக்காது. போரில் பெற்ற வெற்றியின் மதிப்பு நாளடைவில் மற்ற பிரச்சனைகளுக்கு இடையே ஒளியிழந்து போகும். 


மேலும், இந்த கணத்தில் உங்கள் துறையின் வெற்றி மட்டுமே அவர் கண் முன் நிற்கிறது. நாளை உங்கள் துறையில் ஏதாவது தவறு நடந்தால் நீங்கள் தலை நிமிர்ந்து அவர்முன் உங்கள் பரிசை உரிமையுடன் நினைவுறுத்த இயலாது. ஆனால் நான் கேட்ட பரிசோ இப்போது என் கையில் என்றான்.


இதைக்கேட்டதும், மற்றவர்கள் பேச்சடைத்துப் போனார்கள். பிறகு யூதத் தளபதி தன் விடுமுறை நாட்களை திட்டமிடக் கிளம்பினான்.


நீதி :


அரிதான இடத்தில் உடனே கிடைக்கக்கூடிய சிறிய வாய்ப்பு என்பது பின்னாளில் வரும் பெரிய வாய்ப்பைவிட மேலானது. அதனால், கிடைக்கும் வாய்ப்பை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 


Thanks and regards 

A s Govinda rajan 


கஷ்டத்தை ஏற்றுக்கொள்வோம்..!


ஒரு காட்டில் இரண்டு பெரிய பாறைகள் அருகருகே இருந்தன. அந்த பாறைகள் பல வருடங்களாக ஒரே இடத்தில் மழையில் ஊறி, வெயிலில் வாடிக் கிடந்தது. அதை நினைத்தால் அந்த கற்களுக்கு ரொம்பச் சலிப்பாக இருந்தது. நாம் எப்போதுதான் இங்கிருந்து நகர்வோமோ? என்று மிகவும் ஏக்கத்தோடு பேசிக்கொண்டன.


அந்தக் காட்டிற்கு பக்கத்தில் ஒரு நகரம் இருந்தது. அங்கிருந்த மக்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு கோவில் கட்டத் தீர்மானித்தார்கள். புதுக் கோவிலுக்கு மூலவர், உற்சவர், மற்ற சிலைகள் எல்லாம் வேண்டுமல்லவா? அதற்காக ஏழெட்டு சிற்பிகள் நியமிக்கப்பட்டார்கள். அதனால், அவர்கள் சிற்பங்களைச் செதுக்குவதற்கான கற்களைத் தேடிக் காட்டிற்குள் வந்தார்கள்.


அவர்களில் ஒரு சிற்பி இந்தப் பாறைகளைக் கவனித்தார். பிறகு மற்றவர்களிடம் அவற்றைக் காண்பித்து, இந்தப் பாறைகள் இரண்டும் சரியான அளவில் இருக்கிறமாதிரி தெரிகிறது. நாளைக்கு இந்த கற்களை ஆட்களை வைத்து தூக்கிக் கொண்டு செல்லலாம் என்று கூறினார்.


சிற்பிகள் திரும்பி சென்றபிறகு முதல் பாறை, ஹையா ஜாலி ஜாலி! நம்ம பல நாள் கனவு நிறைவேறப் போகுது! நாளைக்கு நாம நகரத்திற்குப் போறோம்! என்றது. உடனே இரண்டாவது பாறை கோபமாக அட மக்குப் பயலே! அவங்க உனக்கு நகரத்தை சுத்திக்காட்டறதுக்கா கூட்டிகிட்டுப் போறாங்கன்னு நினைச்சே? உன்னை அடிச்சு உடைச்சு செதுக்கி, சிலையா மாத்திப்புடுவாங்க. தெரியுமா? என்றது.


அதற்கு முதல் பாறை, அதுக்கு என்ன பண்றது? ஒண்ணைப் பெறணும்ன்னா இன்னொண்ணை இழந்துதானே ஆகணும்? என்றது. நான் வலியைப் பொறுத்துக் கொள்வேன். பிரச்சனையில்லை! என்றது. ஆனால் இரண்டாவது பாறை மட்டும், என்னால அது முடியாது! என்று தீர்மானமாகச் சொன்னது. நாளைக்கு அவங்க வரும்போது நான் இன்னும் ஆழமாக போய் விடுவேன். 


அவங்க எல்லோரும் சேர்ந்து எவ்ளோ கஷ்டப்பட்டாலும் என்னைத் தூக்கமுடியாது என்று கூறிவிட்டது. மறுநாள் அந்த சிற்பிகள் மீண்டும் வந்தார்கள். முதல் பாறையைக் கட்டித் தூக்கி வண்டியில் வைத்தார்கள். இரண்டாவது பாறையை அவர்களால் அசைக்கக்கூட முடியவில்லை. பிறகு அவர்களில் ஒருவர், சரி விடுங்க. அதான் ஒரு பாறை கிடைச்சுடுச்சே. அதுவே போதும் என்று கூறினார். பிறகு அவர்கள் வந்த வழியே திரும்பிச் சென்றார்கள்.


கஷ்டத்தை தாங்கிக்கொண்டு இருந்ததால், இப்போது அந்த முதல் பாறை அற்புதமான கடவுள் சிலையாக எல்லோராலும் வணங்கப்படுகிறது. ஆனால், இரண்டாவது பாறை இன்னும் காட்டிற்குள்தான் இருக்கிறது.

 


 Thanks and regards 

A s Govinda rajan 

Kodambakkam Chennai

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%