உற்பத்தியை அதிகரிக்க ரூ.24,000 கோடி திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

உற்பத்தியை அதிகரிக்க ரூ.24,000 கோடி திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி, ஜூலை.17-


உற்பத்தியை அதிகரிக்க ரூ.24 ஆயிரம் கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.


விவசாயத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.


அந்த வகையில் விவசாயிகளுக்கு வருமானத்தை அள்ளிக்கொடுக்கும் வகையிலான பிரதமரின் ‘தன் தானிய கிருஷி யோஜனா’ (பிரதமரின் செல்வம் கொழிக்கும் வேளாண்மை திட்டம்) என்ற திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.


இந்த திட்டம், மத்திய அரசின் 11 துறைகள், மாநில அரசுகளின் திட்டங்கள், தனியார் துறையினரின் கூட்டு ஒத்துழைப்புடன் தற்போது நடைமுறையில் உள்ள 36 திட்டங்களுடன் இணைத்து செயல்படுத்தப்படும்.


இதனை 100 மாவட்டங்களில் 6 ஆண்டுகளுக்கு செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


இந்த திட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.


இதனை ரெயில்வேத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பத்திரி கையாளர்களுக்கு விளக்கமாக அளித்து கூறியதாவது:-


பிரதமரின் செல்வம் கொழிக்கும் வேளாண்மை திட்டம், வேளாண் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், பயிர் பல்வகைப்படுத்தல், நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்குவித்தல், அறுவடைக்கு பிந்தைய தானிய சேமிப்புத்திறனை அதிகரித்தல், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல், விவசாயிகளுக்கு கடன்கள் கிடைப்பதை எளிதாக்குதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ளது. குறைந்த பயிர் சாகுபடி, குறைந்த உற்பத்தித்திறன் மற்றும் விவசாயிகளுக்கு குறைந்த அளவிலேயே கடன் கிடைக்கும் இடங்கள் ஆகியவற்றை கணக்கிட்டு 100 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. இந்த மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.24,000 கோடி நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.


ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தபட்சம் ஒரு மாவட்டமாவது இந்த திட்டத்தில் அடங்கும். இந்த திட்டத்தின் மூலமாக ஒரு கோடியே 70 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.


இதுபோல மராட்டிய மாநிலத்தில் 2032-ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்திறனை 60 ‘ஜிகாவாட்’டாக அதிகரிக்க தேசிய அனல் மின் கழகத்தின் பசுமை எரிசக்தி நிறுவனத்துக்கான ஒதுக்கீட்டு வரம்பை ரூ.7,500 கோடியில் இருந்து ரூ.20,000 கோடியாக உயர்த்த மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது.


புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளை உருவாக்கு வதோடு உள்ளூர் நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் வாய்ப்புகளை வழங்குகிறது. பசுமை எரிசக்தி நிறுவனம் அதன் இலக்கை எட்டுவதால் 2070-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ய உமிழ்வு என்ற இலக்கை எட்டுவதற்கு உதவியாக இருக்கும்.


மேலும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் துணை நிறுவனமான என்.எல்.சி. இந்தியா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனத்தில் ரூ.7,000 கோடி வரை முதலீடு செய்யவும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.


இந்த ஒப்புதல், நவரத்னா பொதுத்துறை நிறுவனங்களுக்கான தற்போதைய முதலீட்டு வழிகாட்டு நெறிகளில் இருந்து என்.எல்.சி. நிறுவனத்துக்கு சிறப்பு விலக்கு அளிக்கும்.


இந்த விலக்கு 2030-ம் ஆண்டுக்குள் 10.11 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்திறன் என்ற என்.எல்.சி. நிறுவனத்தின் லட்சிய இலக்கை எட்டுவதற்கும், 2047-ம் ஆண்டுக்குள் 32 ஜிகாவாட் என்ற அளவுக்கு விரிவுபடுத்துவதற்கும் உதவியாக இருக்கும். 2030-க்குள் நிலக்கரி அல்லாத எரிசக்தித் திறனை 500 ஜிகாவாட் அளவுக்கு உற்பத்தி செய்ய உறுதி ஏற்கப்பட்டு உள்ளது. இதில் என்.எல்.சி. நிறுவனம் முக்கிய பங்காற்றும்.


இவ்வாறு அவர் கூறினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%