இரு கைகளின் சந்திப்பு

இரு கைகளின் சந்திப்பு



மழைத் துளிகளால் நனைந்த சாலையின் ஓரத்தில், பழைய பிளாஸ்டிக் தார்ப்பாயின் கீழ், சிறிய டீ கடை. வெளியே பெஞ்ச். அதில் நாலைந்து பீடி மனிதர்கள்.


தினமும் காலை ஆறு மணிக்கே அந்தக் கடைக்கு வந்து விடுவான் முருகன்.


அவன் தோற்றமே அவன் ஒரு ஏழைப் பிரதிநிதி என்பதைப் பறை சாற்றிக் கொண்டிருக்கும். பழைய செருப்பு, கிழிந்த சட்டை, எண்ணை காணாத தலை.


ஆனால், ஒரேயொரு நல்ல பழக்கம் மட்டும் தவறாமல் நடக்கும்.


வரிசையாக டீ ஆர்டர் செய்து சாலையோரம் உறங்கும் பிளாட்பாரவாசிகளுக்கு. 

அடுத்து வரும் இட்லி

அவசர அவசரமாய் வேலைக்கு போகும் கட்டிட வேலைச் சித்தாளுகளுக்காக.


“என்னப்பா, நீயே கஷ்டப்படுறே… உனக்கு ஏன் இதெல்லாம்?”

டீ கடைக்காரன் கேட்டால்,

முருகன் சிரித்துக் கூறுவான்


 "இப்ப என்னால முடியுது குடுக்கறேன்.. முடியாத நிலைமை வரும் போது ஆண்டவன் விட்ட வழி!"


அப்போது கருப்புக் கண்ணாடி காரொன்று வந்து நின்றது.


உள்ளிருந்து இறங்கினான் ஒரு டிப்டாப் இளைஞன். பெயர் ஆதவன்.


விலை உயர்ந்த ஆடை, வீதியெங்கும் மணக்கும் பர்ஃப்யூம். முகத்தில் ஒரு அலட்சியம்.


டீக்கடை வாசலில் நின்றிருந்த முருகனைப் பார்த்துக் கத்தினான்.

“ஏ மிஸ்டர்... ஒரு வாட்டர் பாட்டில்"  


முருகன் அமைதியாக அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு போய் நீட்டினான். 


வாங்கிய ஆதவன், "என்ன மேன்... கூலிங் இல்லை" என்றதும்,


"ஃப்ரிட்ஜ் ரிப்பேர் சார்" என்றான் முருகன்.


"அப்ப நீயே வெச்சுக்க" வாட்டர் பாட்டிலைத் திருப்பித் தந்து விட்டுக் காரில் ஏறினான்.


அப்போது முருகன் அந்த வாட்டர் பாட்டிலை பிளாட்பார முதியவருக்குக் கொடுப்பதை காரிலிருந்தபடி பார்த்தான் ஆதவன்.


 "நீயே புவர் மேன்... உனக்கெதுக்கு தானம்... தர்மம்?" என்று சிரிப்புடன் கேட்டான்.


முருகன் மெதுவாக சொன்னான்,

“என் கிட்டே பணம் இல்ல… ஆனா கொடுக்கணும்கற மனம் இருக்கு!... உன் கிட்ட பணம் இருக்கு ஆனா மனம் இல்லை... அதனால நீதான் ஏழை!"


அந்த வார்த்தை…ஆதவனின் உள்ளே எங்கோ தட்டியது.


அன்று மாலை, அதே இடம்.


ஆதவன் மீண்டும் வந்தான்.


முருகனிடம் ஒரு பையை நீட்டினான்.

உணவு பொட்டலங்கள்.


“இதை… நீயே கொடு.

எனக்குப் பழக்கம் இல்ல.” என்றான்.


முருகன் அவனைப் பார்த்து சிரித்தான். "கொடுப்பதற்கெல்லாம் பழக்கம் எதுக்கு... " என்றவாறே சற்றுத் தள்ளியிருந்த பிளாட்பாரவாசிகளை அழைத்து ஆதவன் கையாலேயே அந்த உணவுப் பொட்டலங்களைத் தர வைத்தான்.


அன்று முதல் பணக்கார ஆதவனும் கற்றுக் கொண்டான் தான, தர்மத்தை.

கற்றுக் கொடுத்தவன் ஏழை முருகன்.


(முற்றும்)


முகில் தினகரன்

கோயமுத்தூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%