இது குழந்தைகளின் உலகம்

இது குழந்தைகளின் உலகம்

வீட்டு ஓனர் செந்தில் சொல்லியதைக் கேட்டு அதிர்ந்து போனான் மனோகரன்.


  "என்ன சார்?... திடீர்னு ஆயிரம் ரூபாய் வாடகை ஏத்துனா எப்படி சார்?"


  "இங்க பாருங்க... இந்த வீதியில நான் ஒருத்தன்தான் 4000 ரூபாய்க்கு வாடகைக்கு விட்டிருக்கிறேன்... மற்றவர்கள் 7000... 8000...ன்னு போயிட்டாங்க"


   மனோகரன் எவ்வளவோ கெஞ்சியும் செந்தில் சற்றும் இறங்கி வராது போக, வேறு வீடு பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டான் மனோகரன்.


    எந்தக் கடவுள் புண்ணியமோ அவனுக்கு அடுத்த வாரத்திலேயே 4000 ரூபாய் வாடகைக்கு வீடு கிடைத்து விட. செந்திலுக்கும் அவன் வீட்டுக்கும் ஒரு "குட் பை" சொல்லி விட்டுப் புது வீட்டில் குடியேறினான் மனோகரன்.


  ஒரு வாரத்திற்குப் பிறகு,


  "ஏய்... ஹேமா.... ஒண்ணு கவனிச்சியா?... குழந்தைகள் ரெண்டும் கொஞ்ச நாளாகவே ஒரு மாதிரி டல்லா இருக்குதுக.... ரெண்டும் லேசா இளைச்சுப் போன மாதிரிக் கூடத் தெரியுது.. ஏன்... என்னாச்சு?" மனோகரன் கேட்க,


  "தெரியலைங்க... ரெண்டும் சரியாவே சாப்பிடறது இல்லை... மதிய டிபனை சாப்பிடாமலே கொண்டு வந்திடுதுக... கேட்டா சாப்பிடவே பிடிக்கவில்லை!ன்னு என்று சொல்லுதுக!".


மனோகரன் தாடையை சொறிந்தபடி யோசிக்க, "அட... சாப்பாட்டுலதான் அப்படின்னா... தூங்கறது கூட சரியா தூங்கறதில்லை.... சும்மா புரண்டு புரண்டு படுத்துட்டே இருக்குதுக" என்றாள் ஹேமா.


  "புது வீடு மாறியதால்தான் இப்படி இருக்குதுக... கொஞ்ச நாள் போனா இந்த வீடு செட் ஆயிடும்" என்றான் மனோகரன்.


   ஆனால் அவன் எண்ணத்தைப் பொய்யாக்கும் விதமாய் ஒரு மாதத்தில் இரண்டு குழந்தைகளும் பாதியாய் இளைத்து போய் விட, பெருங்கவலைக்குள்ளாயினர் பெற்றவர்கள். 


   வேறு வழியில்லாமல் குழந்தைகளையே நேரில் அழைத்து சுமூகமாய்ப் பேசி... நாசூக்காய் விசாரித்தனர்.


  "எங்களுக்கு அந்தப் பழைய வீட்ல இருந்த செந்தில் மாமாவோட குழந்தை கோபி ஞாபகமாவே இருக்குது... அவனைப் பார்க்காம... அவன் கூட விளையாடாம எங்களுக்கு சாப்பாடே இறங்க மாட்டேங்குது... ராத்திரியெல்லாம் அந்த குழந்தை முகமே கண்ணுக்குள்ள வந்துட்டு வந்துட்டுப் போகுது"


  ஆடிப் போயினர் மனோகரனும் ஹேமாவும்.


   "ச்சை.... ஒரு ஆயிரம் ரூபாய்க்குக் கணக்குப் பார்த்துட்டு குழந்தைகளோட பிஞ்சு மனசை இப்படி நோகடிச்சுட்டோமே!"


   நொந்து போன மனோகரன் அப்போதே முடிவு செய்தான்.  


 "இன்னைக்கே போய் அந்த செந்திலைப் பார்த்து நீங்க கேட்ட மாதிரியே வாடகை ஆயிரம் ரூபாய் சேர்த்துத் தரேன் அதே வீட்டை எங்களுக்கு வாடகைக்கு விடுங்க" ன்னு கேட்கப் போறேன்!"


அப்போது வீட்டு வாசலில் யாரோ வருவது போல் நிழலாட ஹேமா சென்று பார்த்து விட்டு, "ஏங்க நம்ம பழைய ஹவுஸ் ஓனர் செந்தில் அண்ணா வந்திருக்காங்க!" என்றாள்.


   உள்ளே வந்த செந்தில், "மனோகரன் நீங்க இருந்த வீடு இன்னமும் காலியாத்தான் இருக்கு... உடனே நீங்க மறுபடியும் அங்க குடி வந்துருங்க!.. கூடுதலா ஆயிரம் ரூபாய் கூடக் கொடுக்க வேண்டாம் பழைய வாடகையே போதும்" என்றான்.


   குழப்பமாகிப் போன மனோகர் "என்ன சார்... ஏன் திடீர்னு இந்த மாற்றம்?"


   "உங்க ரெண்டு குழந்தைகளையும் பார்க்காம அவங்களோட விளையாடாம.... என் மகன் கோபி சரியாவே சாப்பிட மாட்டேங்கிறான்... சரியாத் தூங்குறதுமில்லை.. எப்ப பார்த்தாலும் அழுதுட்டே இருக்கான்... எப்படிக் " கொழுக்... மொழுக்"ன்னு இருந்த குழந்தை இப்ப ஈர்க்குச்சி மாதிரி ஆயிட்டான்"


கண் கலங்கி விட்டான் மனோகர்.


  "செந்தில்... இங்கேயும் அதே பிரச்சனைதான்.... என் குழந்தைகளும் அதே மாதிரிதான் சாப்பிடாம... தூங்காமத் தவிக்குதுக!... நாம ரெண்டு பேரும் பணத்தை மட்டுமே கணக்குப் பார்த்தோம்!... குழந்தைகளோட மனசைப் பார்க்க மறந்திட்டோம்" என்று மனோகரன் சொல்ல,


    "சரி... எப்பக் குடி வரப் போறீங்க அந்த வீட்டுக்கு?"சந்தோஷமாய்க் கேட்டான் செந்தில்.


முகில் தினகரன்,

கோயம்புத்தூர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%