ஆடி மாதம் வந்தாலே அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும். நிறைய பண்டிகைகள், வடை பாயசத்தோடு சாப்பாடு, கோவில் விசேஷங்கள் என்று குதூகலமாக கொண்டாடப்படும் மாதம்.
சிலர் ஆடி மாதத்தில் திருமணம், கிரக பிரவேசம் ஆகிய நல்ல காரியங்களைத் தொடங்க கூடாது என்பர். ஏனெனில் இந்த மாதம் இறைவனை தொழ வேண்டிய மாதம். அதாவது நம் மனமாகிய பீடத்தில் இறைவன், இறைவியை அமர்த்தி ஆராதனை செய்ய வேண்டிய மாதம்.
மற்றொரு காரணம் தேவர்களுக்கு ஒருநாள் என்பது நமக்கு ஒரு வருடம் தேவர்களுக்கு சந்தியா வேளை ஆரம்பிக்கும் பொழுது ஆடி மாதம் ஆரம்பிக்கிறது.
அந்த மாதத்தில் திருமணம் போன்ற வைபவங்களை வைத்துக் கொண்டால், அவர்களின் ஆசிர்வாதம் பரிபூர்ணமாகக் கிடைக்காது என்ற நம்பிக்கையில் ஆடி மாதத்தை அவர்களுடன் நாமும் இறைவனை வழிபட ஒதுக்கி இருக்கலாம்.
பெரும்பாலும் அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் வேப்பிலையை அம்மனுக்கு சாற்றி வணங்குவதும், கூழ் ஊற்றும் விழா நடத்துவதும் இந்த மாதத்தில் நடைபெறுகிறது.
வேப்பிலைக் கொழுந்துகளுக்கு அபார மருத்துவ, தெய்வீக குணம் உண்டு. மழைக் காலத்தில் கிருமிகள் தாக்குதலில் இருந்து நம்மை வேப்பிலை காக்கும்.
ஆடி மாதத்தில் பொதுவாகவே காற்று அதிகமாக வீசும். மழைக் காலம் வேறு. அந்தக் காலத்தில் எளிதில் ஜீரணிக்கக் கூடிய வகையிலான உணவுகள் சாப்பிடுவது நல்லது. அதனால் கூழ் ஊற்றும் வைபவத்தை நடத்துகின்றனர். கூழ் எளிதில் ஜீரணம் ஆகும்.
மாதங்களை 'உத்தராயணம்', 'தட்சிணாயனம் ' என இரு பிரிவுகளாக பிரித்து உள்ளனர். ஆடி முதல் மார்கழி வரை 'தட்சிணாயனம்' புண்ணிய காலமாகவும், தை முதல் ஆனி வரை 'உத்தராயணம்' எனவும் பிரிக்கப்பட்டுள்ளது.
சூரியன் வடக்கிலிருந்து தெற்காக பயணிக்கும் காலத்தை தட்சிணாயனம் என்கிறோம்.
இக்காலங்களில் சூரியனின் கதிர்வீச்சு பகலில் குறைவாகவும், இரவில் குளிர்ச்சி அதிகமாகவும் இருக்கும்.
தட்சிணாயனம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள் ஆகியவற்றிற்கு ஆடி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது. பிராண வாயு அதிகமாக கிடைப்பதும் ஆடியில் தான்.
உத்தராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தட்சிணாயனம் காலத்தில் (ஆடி) சூரியனின் ஒளிக் கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும். அதனால் 'ஆடிப் பட்டம் தேடி விதை ' என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். மேலும் மழை பெய்து விதை விதைக்க ஏற்றதாக இருக்கும்.
துர்க்கை, காளி, உள்ளிட்ட பெண் தெய்வ வழிபாட்டுக்கு உகந்ததாக ஆடி மாதம் கருதப்படுகிறது. முருகப் பெருமானுக்கும் உகந்த மாதம்
மேலும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற
தெய்வங்களுக்கும் பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.
ஆடி மாதத்தில் ஆடி பதினெட்டு, ஆடிப் பூரம், நாக பஞ்சமி,வரலட்சுமி விரதம் போன்ற பல விசேஷங்கள் கொண்டாடப் படுகின்றன. அதிலும் மிகச் சிறப்பானது ஆடிப் பூரம்.
ஆடிப்பூரம் அம்பாளுக்கு உகந்த நாள்.
அன்று தான் உமா தேவியார் தோன்றியதாகக் கூறப்படுகிறது.
உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்து வந்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் கூறுகின்றன.
அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு திருவிழா ஆடிப் பூரம் ஆகும்.
அனைத்து உலகத்தையும் படைத்தும், காத்தும், கரந்தும், விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக் காப்பு வளை காப்பு நடக்கும் நாள்.
தாய்மை பேறுக்காக தவமிருக்கும் பெண்கள், அன்னைக்கு வளைகாப்பு நடத்துவதற்காக வளையல்களை வாங்கிக் கொடுத்து தங்களுக்கும் விரைவில் வளைகாப்பு நடைபெற வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள்.
வளைகாப்பு முடிந்ததும் அன்னையை அலங்கரித்த வளையல்கள் அனைத்தும் பெண் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். ஆடிப்பூரம் நாளில் அம்மன் வளைகாப்புக்கு வளையல் வாங்கிக் கொடுத்தால் புத்திரபாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை.
இந்நாளில் தேவி உலகிற்கு விஜயம் செய்து மக்களுக்கு அருள் புரிகிறாள் என்று நம்பப்படுகிறது. வெள்ளிக்கிழமை அன்று வரும் ஆடிப் பூரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
எம்பெருமான் விஷ்ணுவின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமாதேவியும் ஆடிப் பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள்.
பூர நட்சத்திரம்
சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரம்.சுக்கிரனின் தெய்வம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர். அதனால் தான் என்னவோ ஆடிப்பூரத்தில் பிறந்த ஆண்டாள் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை நேசித்து அவரையே மணந்தாள் போலும்.
சூடிக்கொடுத்த சுடர்கொடி.. ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரத்தை ஸ்ரீவில்லிபுத்தூரில் திருவிழாவாக, பன்னிரண்டு நாட்கள் கொண்டாடுகின்றனர்.
ஆடிப்பூரம் அன்று
பெரிய திருத்தேரில் ஸ்ரீஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.
திருக்கழுக்குன்றம், வேதகிரீஸ்வரர் திருக்கோவில், அன்னை திரிபுரசுந்தரி, சுயம்பு வடிவானவள். அம்பாள் மூர்த்தம் , அஷ்ட கந்தகம் உட்பட எட்டு விதமான நறுமண மூலிகைகளால் உருவாக்கப்பட்டது.
அம்பாளுக்கு (திரிபுரசுந்தரி) மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது. ஆண்டில் ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், நவராத்தியில் வரும் நவமி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே அம்பாளுக்கு முழு அபிஷேகம் செய்யப்படுகின்றது. தினந்தோறும் திருப்பாத பூஜை மட்டுமே நடக்கின்றது.
ஆடிப்பூரம் அன்று திருக்கழுக்குன்றத்தில் திரிபுரசுந்தரிக்கு அபிஷேகம் நடைபெறும்.
ஆடிப் பூர நன்நாளில், அம்மனுக்கு வளைகாப்பு விழா;
ஸ்ரீ வில்லிப்புத்தூர் , நெல்லையப்பர், அழகர் கோவில், கபாலீஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சியம்மன், திருவண்ணாமலை உள்ளிட்ட பல கோவில்களில் அங்கு எழுந்தருளியுள்ள அம்பாளுக்கு வளைகாப்பு நடைபெறுகிறது.
சைவ, வைணவத் திருத்தலங்களில் ஆடிப் பூரம் மிக விசேஷமாகக் கொண்டாடப் படுகிறது.
கோவிலுக்கு சென்று வழிபட இயலாதவர்கள் தங்கள் இல்லங்களிலேயே அம்பாளுக்கு வளையல் வைத்து பூஜை செய்து அவளுக்கு பிடித்த பானகம், பாயசம் நைவேத்தியம் செய்து வணங்கலாம்.
எழுத்தாளர்,
ஆசிரியர் ருக்மணி வெங்கட்ராமன்
சென்னை.