அரை இறுதியில் சாட்விக், ஷிராக் ஜோடி | சீனா ஓபன் பாட்மிண்டன்

அரை இறுதியில் சாட்விக், ஷிராக் ஜோடி |  சீனா ஓபன் பாட்மிண்டன்

சாங்சோவ்:

சீனா ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது.


சீனாவின் சாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் யூ சின் ஆங்க், யி தியோ ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் சாட்விக், ஷிராக் ஜோடி 21-18, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, 4-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமகுச்சியிடம் 16-21, 12-21 என்ற நேர் கணக்கில் தோல்வி அடைந்தார்.


ஜூனியர் கால்பந்தில் மேகாலயாவை வீழ்த்தியது தமிழகம்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் டாக்டர் பி.சி.ராய் கோப்பைக்கான ஆடவர் ஜூனியர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி முதல் லீக் ஆட்டத்தில் கடந்த 21-ம் தேதி மேற்கு வங்கத்துடன் மோதியது.

இதில் மேற்கு வங்கம் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் ரஜ்தீப் பால் (32-வது நிமிடம்), ரின்டூ மாலிக் (86-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். தமிழக அணி சார்பில் 80-வது நிமிடத்தில் சுரேஷ் ஒரு கோல் அடித்தார்.


23-ம் தேதி நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் தமிழக அணி, கேரளாவுடன் மோதியது. இந்த ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் தமிழக அணி, மேகாலயாவுடன் மோதியது. இதில் தமிழக அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தமிழக அணி தரப்பில் சுரேஷ் 34-வது நிமிடத்திலும், இனியன் சந்தர் 90+4-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் 4 புள்ளிகளுடன் தமிழக அணி தனது பிரிவில் 3-வது இடத்தில் உள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%