பொண்டாட்டி பேச்சியோட அம்மன் கோவிலுக்கு போயிட்டு வெதைப்பு நல்லபடியா நடக்கணும், நாளை மறுநா நல்ல படியா தூறல் போடனும்னு ஆத்தா கிட்ட வேண்டிக்கிட்டு.. வாரப்போ கொஞ்சம் கம்மாய் மேட்டுல ஒக்காந்து பேசலாம்னு ஒக்காந்தப்போ தான் பொண்ணு எதையோ சுவைச்சுக்கினு.
என்ன புள்ளே அது கையில?
.மாமன் வீட்டில ஆச்சி கொடுத்துச்சு. குரல்ல லேசான பயம்.
பாவி மவளே! ஒன்னிய அங்கிட்டு போவக்கூடாதுன்னு சொல்லி
யிருக்கேன்ல மிரட்டினான் அப்பன் நடேசு.
சீனு தான் நாவப்பழம் பொறுக்கலாம்னு கூட்டிட்டுப் போனான்.
இது எப்போ நடந்துச்சு. போயி? மறுபடியும் மெரட்டல். நடந்ததை நினைச்சுப் பாத்தான் அவன். நடேசுக்கும், மச்சானுக்கும் சண்டை. வாய்ச் சவடாலா ஆரம்பிச்சு ..பெரிசாயிடுச்சு..பேச்சி கதற, போராட ... வீடு ரெண்டாயிடுச்சு. அக்காவும் மச்சானும் பிரிஞ்சி பக்கத்துல வீடு எடுத்துபோயி அஞ்சாறு மாசம் இருக்கும் . பேச்சி தம்பிக்கும், புருஷனுக்கும் இடையில தவிக்க, ஒண்ணா இருந்த குடும்பம் ஆரு கண்ணு பாட்டுச்சோ அடிதடி கணக்கா ஆயிடுச்சு. உப்புப் பெறாத விஷயத்துக்கு உண்டான வாய்ச் சண்டை. அக்கா எவ்வளவோ சமாதானம் சொல்லியும் எடுத்துக்கலை நடேசு.
காலைல வெள்ளென புறப்பட்டு டவுனுக்குப் போகணும் விவசாய ஆபீஸ்ல வெதை நெல்லு வாங்கியார. கிளம்புவோம்னு எழுந்தான்
மறுநா காலைல,நீச்சத் தண்ணியக் குடிச்சுட்டு நடேசு கெளம்ப வெத்திலபாக்குப் பொட்டலத்தோட இன்னொரு பொட்டலத்தையும் வச்சுக் கொடுத்தா.. பேச்சி..அவசரமா புறப்பட்டுப் போயிட்டான்.
காகிதமெல்லாம் கொடுத்துட்டு காத்திருந்தான். போன இடத்துல உடனே வேலை நடக்கலை. ஆபீஸர் நெலத்தைப் பாக்க போயிருக்காக காத்திருங்க! அஞ்சு தடவையா அத்தையே சொல்லுறாக. நேரம் போயிக்கிட்டே இருக்க, பசி வயித்தைக் குடைய ஒரு டீ க்கு கூட நவர முடியல. கூட்டம் வேற காத்து இருந்துச்சா? நாம போய் வாரத்துக்குள்ள ஏதாவது கொடுத்து முடிச்சாச்சு அடுத்த வாரம் வாங்கன்னுப்புட்டா.. தவிச்சான். இடுப்புல ஏதோ பொட்டலம்?! அப்போ தான் பாத்தான். காலைல பேச்சி ஏதோ கொடுத்துச்சில்லே? பிரிச்சு பாத்தான் அதிரசம்?! எடுத்துப் பிச்சுப் பிச்சு வாயில போட்டுக் கிட்டான். யக்கா! உசுரு வந்துச்சும்மா. நாலஞ்சு அதிரசத்தை துன்னுப்புட்டு அங்கே கேன்ல வச்சிருந்த தண்ணியை கப்புல புடிச்சு கடக்கு, கடக்குனு குடிச்சான் நடேசு.
பசி வந்திட பத்தும் பறந்துடுச்சு. யக்கா சண்டை மட்டும் இல்லைனா நீ இன்னிக்கு இட்லியோ , சோறோ கட்டிக் கொடுத்து இருப்பீல்ல? நான் பசிச்சிருக்க பாக்கப் பொறுக்க மாட்டியேக்கா.. கண்ணுல தண்ணி பொல பொலன்னு கொட்ட ஆரம்பிச்சுடுச்சு. ச்சே! அவந்தான் சின்னப்பய பேசினான்னா எனக்கெங்கே போச்சு அறிவு? மட்டிப் பய நான். குடும்பத்தையே பிரிச்சிப் புட்டேனே ..
“நடேசன்.. நடேசன் யாருப்பா.அது?” கூப்பிட்டு ஆபீஸர், “கைநாட்டு வை” சொல்லி வெதை நெல்லு மூட்டையைக் கொடுத்தாரு.
ஊருக்கு வந்த நடேசு.., பேச்சி இங்கிட்டு வா. வெதை நெல்லு வந்துருச்சு. அக்காவூட்டுக்குப் போயி ..அக்காவைப் பாத்துட்டு வரலாம். .பேச்சிக்கு பேச்சே வரல. பொண்டாட்டி, பொண்ணோட அக்காவூட்டுக்குப் போன நடேசு ஓடிப்போயி அக்காவைக் கட்டி அணைச்சுக்கிட்டு அழுகிறான். நான்தான்கா தப்புப் பண்ணிட்டேன். அறிவு கெட்டவன். உறவோட உறவா ஒண்ணா இருந்தா எவ்வளோ நல்லதுனு புரியாம முறைச்சுக்கிட்டேன்.
மன்னிச்சிடுக்கா. நாம இனிமே ஒண்ணாவே சேந்து இருக்கணும்.. வந்துடுக்கா. ஒங்கையால வெதை நெல்லை எடுத்துக் கொடுத்து ஆரம்பிச்சு வைக்கா. கண்ணீரும், கதறலுமா நடேசு.
பேச்சி கண்ணீரோட நெனைச்சுப் பாக்கிறா..மொத நா கோவில்ல அம்மா கொடுத்த இலைப் பொட்டலம் அதிரசத்தை பூசாரி கையில கொடுத்து ஆத்தாளை வேண்டிக்கிட்டு வந்ததுக்கு கைமேல் பலன் கெடைச்சதேன்னு. குடும்பம் சேந்துச்சு எவ்வளோ சந்தோஷம். அதிரசத்தை இப்போ முழுசா ருசி பாத்தா பேச்சி. இனிப்பு நெஞ்சு வரைக்கும் உள்ளே போச்சு.
முன் வாசல்ல இரண்டு புள்ளைகளும் கூட்டா மரத்தடியில நாவப்பழத்தை பங்கு போட்டு சுவைச்சுக்கிட்டு இருந்ததுக.
Dr. விஜயலக்ஷ்மி குமரகுரு