மனிதம் பழகு!
பெரிய அடுக்கு மாடி குடியிருப்பு. அதில் ஆறாவது தளத்தில் மூன்று வீடுகள். இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீடு.
மனோகர் திருமணமாகி மனைவி காயத்ரியுடன் குடியேறியிருந்தான்.
இருவரும் ஐடி கம்பெனியில் வேலை. வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை. இரண்டு நாட்கள் அலுவலகத்தில் வேலை. மூன்று நாட்கள் வீட்டில் இருந்தபடியே வேலை.
சந்தோஷமாக நாட்கள் நகர்ந்தன. பெற்றோர்கள் இரவில் வீடியோ காலில் சந்தித்தார்கள்.
வாழ்க்கை சுமுகமாக சந்தோஷமாக இருந்தது.
அந்த இனிப்பான செய்தியும் இருவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆம் இருவருக்கும் இவர்கள் அன்பின் அடையாளமாக ஒரு வாண்டு பிறக்கப் போகிறது.
நகரின் மிக பெரிய ஆஸ்பத்திரியில் செக்கப்பிற்கு போவார்கள். நண்பர்கள் வட்டாரம் தந்த ஆலோசனை. வீட்டிலிருந்து எட்டு பத்து கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.
எல்லாம் நல்லபடியாக போய்கொண்டிருந்தது.
ஆனால் இன்று மனோகர் செய்வதறியாது திகைத்து கொண்டிருந்தான். மனைவி காயத்ரிக்கு எட்டாவது மாதமே வயிறு வலிப்பதாக சொன்னதும் மனோகர் பயந்து விட்டான். பிரசவ வலி வந்துவிட்டதோ என பயந்தார்கள்.
ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் செல்ல மிகவும் சிரமப்பட்டான். செல்லும் வழியெல்லாம் ட்ராபிக் மிக அதிகமாக இருந்தது. ஊர்ந்து ஊர்ந்து சென்றது கார். காயத்ரி அணத்திக் கொண்டே வந்தாள் பாவம்.
ஆஸ்பத்திரியில் காயத்ரியை உள்ளே அழைத்துப்போனவர்கள் சொன்னதன் பேரில் செவிலியர்கள் இங்கும் அங்கும் வேகமாக செல்வதும் வருவதுமாக இருந்தனர்.
எதையெதையோ வாங்கி வர சொன்னார்கள். மெடிக்கலில் வாங்கிக் கொடுத்தான்.
கொஞ்சம் கஷ்டம் என்றும், ஸ்பெஷலிஸ்டிற்கு போன் செய்திருப்பதாக சொன்னார்கள்.
ஊருக்கு அப்பா அம்மாவிற்கு, அத்தை மாமாவிற்கு தகவல் கொடுத்து விட்டான்.
ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் வருவதற்கு தாமதமானது. ட்ராபிக் அதிகம் என்றார்கள்.
கொஞ்சம் கஷ்டமான நிலையில் அனுபவமுள்ள பெரிய டாக்டரை அழைத்தார்கள்.
கடவுளை வேண்டிய வண்ணம் இருந்தான் மனோகர். இதோ டாக்டர் வந்தாச்சு. பரபரப்பாக இன்னும் இரண்டு டாக்டர்களுடன் உள்ளே சென்றார் அந்த டாக்டர்.
குழந்தை கொடி சுத்தி இருப்பதாகச் சொல்லி உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றார்கள்.
ஒன்றும் புரியவில்லை. கண்ணில் நீர் வந்தது. கலக்கமாக காத்திருந்தான்.
இதோ ஆபரேஷன் செய்தாயிற்று. தாயும் சேயும் நலம்.
டாக்டரம்மா அழகான ஆண் குழந்தையை மனோகர் கையில் தந்தார்.
குழந்தையை கையில் வாங்கியதும் உலக சந்தோஷம் முழுவதும் தனக்கே சொந்தம் என்று நினைத்தான் மனோகர்.
குழந்தை எட்டாவது மாத கடைசியில் பிறந்துள்ளதால் அதிக கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது.
காயத்ரியும் குழந்தையும் ஒரு மாதமாவது ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டியிருக்கும் என்றார்கள்.
அந்த டாக்டரை பார்த்து நன்றி கூறினான்.
விசாரித்ததில் தெரிந்தது இவர்கள் பிளாட்டில் இவர்களுக்கு எதிர் போர்ஷனிலேயே டாக்டர் இருந்திருக்கிறார்!
யாரும் யாருடனும் பேசாமல், யாரையும் தெரிந்து கொள்ளாமல் இருந்தது எவ்வளவு தவறு என்று புரிந்து கொண்டான்.
தான் தன் வீடு என்றிருப்பதும் தவறு. தன்னைப் பற்றிய எல்லா விபரங்களையும் அடுத்தவருக்கு தெரிவிப்பதும் தவறு.
ஓரளவேனும் ஒருவரை பற்றி தெரிந்து கொள்வதும், நட்பு பாராட்டுவதும் நலம் தானே!
ஒரே பிளாட்டில் யார் யார் இருக்கிறோம் என்று தெரியாமல் இருந்தது எவ்வளவு தவறு என்று புரிந்து கொண்டான் மனோகர்.
வி பிரபாவதி
மடிப்பாக்கம்