8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமன ஆணை: துணை முதலமைச்சர் உதயநிதி வழங்கினார்

8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமன ஆணை: துணை முதலமைச்சர் உதயநிதி வழங்கினார்

சென்னை, செப். 3–


இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலமாக, 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமன ஆணைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.


இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாட்டினை உருவாக்கும் வகையில் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் அகில இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சிகள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கி வருவதுடன், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.


குறிப்பாக, விளையாட்டு வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சர்வதேச அளவில் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய மற்றும் தேசிய, மாநில அளவில் சிறந்து விளங்கிய 100 விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் அரசுத் துறைகள் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்துள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளால் நடத்தப்படும் தேசிய சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு மேற்குறிப்பிடப்பட்ட 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இதுவரை 104 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.


அந்த வகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மூலமாக 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு வருவாய் துறை, பள்ளி கல்வித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறைகளில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.


3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் இப்பணி ஆணையினைப் பெற்ற விளையாட்டு வீராங்கனைகள் துணை முதலமைச்சருக்கு நன்றியினை தெரிவித்தனர்.


இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தா. மோ. அன்பரசன், பி.கே. சேகர்பாபு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் மு. சாய் குமார், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல் ஆனந்த், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மரு.பி.சந்தர மோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைச் செயலாளர் (மு.கூ.பொ.) டாக்டர் நா. சுப்பையன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் டாக்டர் சி. பழனி, தொழில்துறை ஆணையர் இல. நிர்மல் ராஜ் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%