"டேட்டா ஃபைன்" அஸோசியேட்ஸ் எனும் அந்த மென்பொருள் நிறுவனத்தின் எம்.டி.கோகுல், கடந்த ஆண்டில் கோடிக் கணக்கில் லாபங்களைப் பெற்றுத் தந்த தன் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு ஒரு அன்பான கட்டளையையும் வைத்தார்.
"நாளைக்கு "பேரடைஸ் இன்"ஹோட்டலில் நடைபெறும் நம்ம ஸ்டாப்ஸ் கெட்-டு-கெதர் பார்ட்டிக்கு எல்லாரும் கண்டிப்பாக அவங்களோட பேரண்ட்ஸ் கூடத்தான் வரணும்... திஸ் ஈஸ் மை ஆர்டர்"
எல்லோரும் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ள, முரளி மட்டும் தயங்கினான். தன் கொலீக்ஸ் முன்னால் தன் அம்மா கலாவைக் கூட்டி வர அவனுக்குக் கூச்சமாயிருந்தது.
காரணம், அவளது இரண்டு கைகளிலும் முழங்கையிலிருந்து விரல்கள் வரை ஆங்காங்கே திட்டுத் திட்டாய் வெண்ணிறத்தில் இருக்கும். சிலர் அதை வெண் குஷ்டம் என்று சொல்லி அவளைத் தள்ளி வைப்பர். அவ்வாறான அவமானம் தாய்க்கு ஏற்பட்டு விடக் கூடாதென்றுதான் முரளி அவளை எங்கும் அழைத்துச் செல்வதில்லை.
இன்று எம்.டி.இப்படியொரு கட்டளையை இட்டு விட்டுச் சென்று விட, தவித்தான். டீம் லீடரிடம் சொல்லி தான் மட்டும் தனியே வர அனுமதி கேட்டான். மறு பேச்சின்றி அது மறுக்கப்பட்டது.
வேறு வழியில்லாமல் தாயையும் அழைத்துக் கொண்டு வந்தான்.
ஃபங்ஷன் முடிந்து டின்னர் சாப்பிடும் வேளையில்தான் பலர் கலாவின் கையைக் கவனித்தனர்.
சிலர் முகம் சுளித்தனர். பலர் அங்கிருந்து நழுவினர்.
அதைக் கண்டும் காணாதவன் போல் அமைதியாயிருந்தான் முரளி. அவன் அமைதியைக் கெடுப்பது போல் அது நடந்தது.
பஃபே சிஸ்டம் ஆனதால் எல்லோரும் ஆங்காங்கே நின்று, பேசிச் சிரித்தபடி டிபனை விழுங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது பக்கத்தில் இருந்த ஒரு பெண்மணி புரையேறி இரும, தன் கையிலிருந்த வாட்டர் பாட்டிலைத் தந்தாள் கலா.
எதார்த்தமாய் வாங்கிய அப்பெண்மணி கலாவின் கையைப் பார்த்ததும் சட்டென்றுமுகத்தை அருவருப்பாக்கிக் கொண்டு, "ச்சை... ச்சை... உன்னையெல்லாம் யார் உள்ளே விட்டது?" சொல்லியவாறே வாட்டர் பாட்டிலை ஓங்கி வீசியடித்தாள்.
மொத்தக் கூட்டமும் திரும்பிப் பார்க்க, அப்பெண்மணி கத்தினாள். "யாரப்பா மேனேஜர்... இந்த மாதிரி தொழு நோய்க் கேஸையெல்லாம் யாரப்பா அலவ் பண்ணினது?"
கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது கலாவிற்கு. பாய்ந்து வந்தான் முரளி, "மேடம் வார்த்தைகளை அளந்து பேசுங்க... இவங்க என்னோட அம்மா... சின்ன வயசிலேயே கணவனை இழந்திட்டு ஒரே பையனான என்னைப் படிக்க வைப்பதற்காக சாயப்பட்டறையில் இரவு பகலா வேலை பார்த்ததினால ஏற்பட்ட தழும்புகள்தான் இது... நீங்க நெனைக்கற மாதிரி தொழு நோயல்ல... அதைப் புரிஞ்சுக்கங்க மொதல்ல!" பதிலால் அடித்தான்.
"ஓ... ஸாரி" அப்பெண்மணி சொல்ல,
"இன்னிக்கு நான் இந்தக் கம்பெனில ஒரு நல்ல பொசிஸன்ல இருக்கேன்.. அதுக்காக எங்கம்மா ஏத்துக்கிட்ட தண்டனைதான் இது... என்னைப் பொறுத்த வரையில் இதெல்லாம்...வெற்றியின் வடுக்கள்"
சொல்லி விட்டுத் தாயை அழைத்துக் கொண்டு அங்கிருந்து உடனே கிளம்பினான் முரளி.
(முற்றும்)

முகில் தினகரன்,
கோவை