"மிஸ்டர் ரகு சார்... நீங்க ஒரு பெரிய தொழிலதிபர், போன வார " எக்கனாமிக்ஸ் டைம்ஸ்" இதழ்ல உங்க இண்டர்வியூ போட்டிருந்தாங்க... அதுல நீங்க... "எல்லாத் தவறுகளும் தீமைகளால் ஆனவையல்ல... சில தவறுகளால் நன்மைகளும் ஏற்படும்"ன்னு அது எங்களுக்குப் புரியலை" என்றார் சக தொழிலதிபர் கோவிந்த்"
"மிஸ்டர் கோவிந்த்... நடந்த ஒரு உண்மை நிகழ்ச்சியைச் சொல்றேன்... அதிலேயே உங்க கேள்விக்கான பதில் இருக்கு" என்ற ரகு அந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.
----
கோயமுத்தூர் ரயில்வே ஸ்டேஷன். அந்த எக்ஸ்பிரஸ் ரயில் மெல்லமாய்ப் புறப்பட, ஓடி வந்து ஏறினான் ஒரு இளைஞன்.
வண்டி சிறிது தூரம் சென்று வேகம் பிடித்தபின் தான் அவனுக்குத் தெரிய வந்தது அது அவன் செல்ல வேண்டிய சென்னை எக்ஸ்பிரஸ் அல்ல, ஹைதராபாத் போகும் ரயிலென்று.
"ச்சை... இப்படியொரு முட்டாள்தனத்தைச் செஞ்சிட்டேனே.
இப்ப என்ன பண்றது?" யோசித்தபடி நின்றவனை கவனித்த ஒரு பெரியவர், "மிஸ்டர்... கொஞ்சம் இங்க வாங்க!" என்று அருகில் அழைத்துத் தன் பக்கத்தில் அமர வைத்துக் கொண்டார்.
"உங்க அப்பா பேரு ஜகதீஷா?"
ஆச்சரியமாய்ப் பார்த்த இளைஞன், "ஆமாம்... அதுஎப்படி... உங்களால...?"
"என் பேரு சுந்தரவரதன்... நானும் உங்கப்பாவும் ஒரு காலத்துல கூட்டாய் ஒரு பிசினஸ் பண்ணினோம்... அது ஹெவியா நஷ்டம் ஆயிடுச்சு... அந்த சமயத்துல உங்கப்பாவும் இற்ந்திட்டாரு... பிசினஸ் நஷ்டம் என்கிற காரணத்தினால உங்க குடும்பத்திலிருந்து யாரும் பங்கத் திருப்பிக் கேட்கலை..."
"சரி..." என்றான் இளைஞன்.
"அப்புறம் என்ன ஆச்சோ தெரியைலை பிசினஸ் பயங்கரமா டெவலப் ஆகி... பணம் கோடிக்கணக்குல கொட்ட ஆரம்பிச்சுது... உங்க ஃபேமிலிக்கும் அந்த லாபத்துல பங்கு தரணும்னு நெனச்சுத் தேடினேன்... கண்டுபிடிக்க முடியலை... அதனால அந்தத் தொகையைக் கொண்டு வேறொரு கம்பெனி ஆரம்பிச்சு நானே நடத்தினேன் அதிலும் நல்ல லாபம் வந்திட்டிருக்கு... அதை... அதை..."
அந்த இளைஞன் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு பார்க்க, "அந்தக் கம்பெனியை உங்க கிட்ட ஒப்படைச்சிடலாம்னு நினைக்கறேன்"
****
"அப்படி அவர் எழுதிக் கொடுத்த கம்பெனி வேற எதுவுமில்லை... என்னோட கம்பெனிதான்... அந்த இளைஞனும் வேற யாருமில்லை.. நான்தான்... தவறா ரயில் மாறி ஏறினேன்... அந்தத் தவறு எவ்வளவு பெரிய நன்மையா முடிஞ்சிருக்கு பார்த்தீங்களா?... சரியான ரயிலேறி சென்னை போயிருந்தா அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்ல ஏதாவதொரு கம்பெனில அக்கௌண்டெண்டா இருந்திருப்பேன்!"
அவர் சொல்லி முடித்ததும் அந்த ரிப்போர்ட்டர் மட்டுமல்லாது அங்கிருந்தோர் அனைவரும் கை தட்டி அவரைப் பாராட்டினர்.
(முற்றும்)

முகில் தினகரன்,
கோயமுத்தூர்