விராலிமலை முருகன் கோயில் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவர் தவறி விழுந்து உயிரிழப்பு
Aug 17 2025
17

புதுக்கோட்டை:
ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்கக் கோரி விராலிமலை முருகன் கோயிலில் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவர் தவறி விழுந்து உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள கொடும்பாளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(43).
சமூக ஆர்வலரான இவர், விராலிமலையில் மலை மீதுள்ள முருகன் கோயிலில் 70 அடி உயரமுள்ள கோபுரத்தில் ஏறி, கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும், மயில்கள் சரணாலயம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தேசியக் கொடியுடன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்து வந்த வருவாய் மற்றும் காவல் துறையினர், அவரது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்து சமாதானப்படுத்தினர். பின்னர் அவரை மீட்பதற்காக தீயணைப்பு படையினர் ஆயத்தமாகினர்.
சுதை சிற்பத்தைப் பிடித்து... அப்போது, அவரே கீழே இறங்கி வருவதாக கூறிவிட்டு கோபுரத்தின் உச்சியில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தார். சுதை சிற்பத்தைப் பிடித்து இறங்கியபோது, சிற்பம் பெயர்ந்ததால் நிலைதடுமாறிய ஆறுமுகம் கோபுரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஆறுமுகம் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதேபோல, சில மாதங்களுக்கு முன்பு விராலிமலையில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆறுமுகம் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?