பொழிச்சலூர்:
பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர், ஞானமணி நகரை சேர்ந்தவர் அருண் (44). இவர் தனது மனைவி வனஜா (38) மற்றும் மகன்களுடன் சொந்த வீட்டில் வசித்து வருகிறார். மாற்றுத் திறனாளியான அருண், பெயிண்டிங் டிசைனர் ஆக பணிபுரிந்து வந்த நிலையில், அவரது மனைவி வனஜா இல்லத்தரசியாக இருந்து வந்தார்.
அருண் குடும்ப செலவுக்காக கொடுக்கும் பணத்தில் சிறிது சிறிதாக ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டில் வனஜா முதலீடு செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் அளவுக்கு அதிகமாக ஆன்லைனில் முதலீடு செய்ய விரும்பிய வனஜா, மகளிர் சுய உதவிக் குழுக்களில் கடன் பெற்று அந்த பணத்தையும் ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யத் தொடங்கினார்.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனது வீட்டுக்குத் தெரியாமல், தனியார் வங்கியில் ரூ.2.5 லட்சம் கடன் பெற்று, அந்தப் பணத்தையும் பங்குச் சந்தையில் முதலீடு செய்தார். இவ்வாறு கடன் வாங்கி, ஆன்லைன் பங்குச் சந்தையில் முதலீடு செய்த வனஜாவுக்கு, எந்தவித பணமும் இரட்டிப்பாக மட்டுமின்றி அவர் செலுத்திய அசல் பணம் கூட திரும்பக் கிடைக்காமல் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் மனமுடைந்த வனஜா, சமீப காலமாக வங்கியில் வாங்கிய கடனை கட்டமுடியாமல் அவதிக்குள்ளானார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வங்கி ஊழியர்கள் இவரது வீட்டுக்கு வந்து வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துமாறு கறாராக கூறிச் சென்றனர். இதனால் தான் அவமானம் அடைந்ததாகக் கருதிய வனஜா, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெளியில் சென்றிருந்த அருண், மகன்கள் வந்து பார்த்தபோது, கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தபோது தான், அங்கு வனஜா தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்குவிரைந்து சென்ற சங்கர் நகர் போலீஸார், உடலை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இதனிடையே வனஜாவின் கைபேசியை போலீஸார் ஆய்வு செய்து பார்த்தபோது, அதில் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக பதிவு செய்து வைத்திருந்த மூன்று ஆடியோக்கள் இருந்தது தெரிய வந்தது. அதில் ஓர் ஆடியோவில் தான் தனியார் வங்கியில் ரூ.2.5 லட்சம் கடன் வாங்கியதால் தனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றும், தன்னை மன்னித்து விடுங்கள் என்றும் கூறியிருந்தார்.