வாசகர் கடிதம் (P. கணபதி) 22.08.25

வாசகர் கடிதம் (P. கணபதி) 22.08.25


தமிழ்நாடு இ இதழ் வாசக சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம். 22.08.25 இ இதழ் செய்திகள் குறித்து ஒரு பறவைப் பார்வை. 


1538 டன் அரிசியை வீணாக்கிய பொறுப்பற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டசபைக் குழு பரிந்துரை செய்துள்ளது வரவேற்கத் தக்கது. 


கிவி பழத்தின் பூர்வீகம், அதன் மருத்துவ குணங்கள், அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் குறித்த கட்டுரை சிறந்த பொது அறிவுத் தகவலாகவும், உடல்நலனுக்கு வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது. 


நான்கு அடுக்கு G. S. T. வரி விதிப்பு குறைந்த பட்சம் 5 % ஆகவும் அதிக பட்சம் 18% ஆகவும் இரண்டு அடுக்காக குறைக்கும் மத்திய அரசின் முடிவு G. S. T. எனும் ரணத்திலிருந்து மிகப்பெரிய நிவாரணம். இது சாமானிய மக்களுக்கு நிதிச்சுமையிலிருந்து விடுதலை தருவதாகும். 


எதேச்சையான நிகழ்வினால் உருவாகும் புதிய கண்டுபிடிப்பு serendipity என அழைக்கப்படும். அத்தகைய ஒரு கண்டுபிடிப்பாக இ. இ. ஜி. அமைந்ததை விளக்கியுள்ள செய்தி புதிய தகவல். 


தொழிலாளி ஒருவரின் குறைந்த பட்ச ஊதியதைக் கூட அளிக்க இயலாத நிலையில் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட தேர்தல் ஆணைய அதிகாரிகள் குடிநீருக்காக ஆயிரக் கணக்கில் செலவழிப்பது குறித்த செய்தி - படித்தவன் பாவம் செய்தால்..... என்ற வரிகளே நினைவுக்கு வருகின்றன. 


தேங்காயின் மூன்று கண்கள் மனிதனின் மும்மலங்களின் உருவகம் என்பதும், தேங்காயின் அழுகல் அபசகுனமல்ல என்பதையும் விளக்கியுள்ள கட்டுரை பகுத்தறிவுக்கு பலம் சேர்ப்பதாக உள்ளது. 


சீனாவுக்கு அரிய தாதுக்களின் ஏற்றுமதியை சீனா அரசு ஒப்புதல் அளித்துள்ளதும்,


இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்க்கு 5% தள்ளுபடி என்ற ரஷ்யாவின் அறிவிப்பும் இந்திய வர்த்தகத்தின் வாசல் விரியத் திறக்கும் என்பதைத்தான் சொல்கிறது. 


திரு. ஹரணி அவர்களின் "மதிப்பிற்குரிய அறிவழகன்" சிறுகதையின் நாயகன் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளும் சாதுர்யத்தின் மூலம் பெயருக்கு ஏற்ப மதிப்பிற்குரிய அறிவழகனாகவே உயர்கிறார். கதைக் கருவும், தலைப்பும் இணைந்துள்ள நேர்த்தி அபாரம். 


திருநீல நக்கர் நாயனார் வரலாறு ஆன்மீக அலையின் அழகிய வீச்சு. சிவ. முத்து லட்சுமணன் அவர்கள் கடைவிரிக்கும் தமிழ் அழகை, அதன் நர்த்தன நடையை ரசிக்கத் தெரிந்தவன் சிவனால் ஆசீர்வதிக்கப் பட்டவன் என்றே சொல்லலாம். அவ்வளவு மேன்மையான புலமை அவருக்கு. பாராட்டுக்கள் சார்.


சையத் ஹசன் இமாம் அவர்களின் வரலாறு நல்லதொரு தகவல் களஞ்சியம். இந்தத் தொடரை வாசிக்கும் பொது கோவை வாசக அன்பர் சிவ சங்கர் அவர்களின் பரிந்துரை என் மனதில் நிழலாடியது. ஆம். இத்தகைய ஆக்கங்கள் நிச்சயம் நூல் வடிவம் பெறவேண்டும். இலக்கியமாய் நிலை பெறவேண்டும். அவரது பரிந்துரையை நான் வழிமொழிகிறேன். தமிழ்நாடு. காம் குழுமம் இதைப் பரிசீலிக்கட்டும்.


திரு. கருமலைத் தமிழாழன் அய்யா அவர்களின் கவிதை "எது வியப்பு". என்னைக்கேட்டால் அந்தக் கவிதையின் நேர்த்தியை விட எது வியப்பு? அப்படியொரு எதுகை, மோனையின் சங்கமம். தாள லயத்தின் (Diction) அற்புதம். நல்ல கவிதைக்கொரு எடுத்துக்காட்டு. வாழ்த்துக்கள். 


திருமதி. பானுமதி நாச்சியாரும் சளை த்தவரல்ல. அவரது கவிதையில் உறைந்த உண்மைகள் உடைந்து போவதை அழகாக வரிசைப் படுத்தி, இறுதியில் "இறுக்கமாக எதையும் பற்றி இருத்தல் சாத்தியமல்ல. காலம் ஒரு இரக்கமற்ற ஆசான் " என்று முடித்து வைத்துள்ள நயம் அருமை. அருமை. 


மதிப்புக்குரிய சான்றோர்களான வே.கல்யாண் குமார், இரா. இரவி, நறுமுகை, சாந்தி ரங்கநாதன், பரிபூரணன், போற்றோர்களின் படைப்புகளும் பரவசம் தருகின்றன. காதலின் ஆழம், பிரிவின் சோகம், அன்பின் ஏக்கம், நகைச்சுவை, நையாண்டி, புலமை, போன்றவைகளின் கலவையாக ஒரு கவிதை ஜூகல் பந்தியாக கவிதைப் பக்கங்கள் தினமும் திழ்கின்றன. 


இத்தகைய அற்புத விருந்தை இலவசமாக வழங்கி வரும் தமிழ்நாடு டாட் காம் குழுமத்தாருக்கு நன்றிகள் பல. 


"வட்டிக் கடன்" -- மீண்டும் பிரசுரமாகியுள்ளது. 


மீண்டும் நாளை சந்திப்போம். நன்றி. 


P. கணபதி

பாளையங்கோட்டை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%