வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு) 18.08.25

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு) 18.08.25


  முகில் தினகரனின் 'தாய் மாமன்' என்ற சிறுகதை சோகத்தின் உச்சமாக இருந்தது. தங்கைக்காக செய்த சத்தியத்திற்காக ஆயுசு முழுவதும் செருப்பு போடாமல் வாழ்ந்த அந்த அண்ணனின் பாசமும், வைராக்கியமும் மனதை நெகிழ வைத்தது. இது மறக்கமுடியாதபடி மனதில் நிற்கும் பாசக்கதை!


  குடும்பத்தில் ஏற்படும் பொருளாதார ஏற்ற தாழ்வுகளை ஹேமா வாசுதேவனின் 'வட்டிக்கடன்' என்ற சிறுகதை தெளிவாக படம்பிடித்துக்காட்டியது. ஆறுமாதத்திற்குள் பழையநிலை திரும்பி வந்து, ரகுவின் குடும்பம் மீண்டும் மீண்டு எழும் என்று நானும் நம்புகிறேன்.


  சசிகலா திருமாலின் 'சப்தமிடும் மௌனங்கள்' தொடர் ஒரு மெல்லிய சோகத்தில் இதயத்தை வருடியவாறு செல்கிறது. இலக்கியாவும் தீபக்கும் தங்களது பழைய காதலை, அதன் தோல்விகளை பேசிக்கொள்வது ஆறுதல் தரும் விதத்தில் இருக்கிறது.


  படாத பாடுபட்டு அடி உதை வாங்கி இரத்தம் சிந்தி சுதந்திரத்திற்காக பல தியாகிகள் போராடியிருக்கிறார்கள் என்று படித்திருக்கிறோம். சுதந்திரப் போராட்டவீரர் 'சூரியா சென்' னை பிரித்தானியா காவல்துறை தூக்கில் போடுவதற்கு முன்பு அவரது ஒவ்வொரு பற்களையும் குறட்டால் பிடுங்கி எறிந்து, பின்னர் கால் மற்றும் கைகளில் உள்ள அனைத்து மூட்டெலும்புகளையும் சுத்தியால் உடைத்து, உணர்வற்ற நிலையில் தூக்கில் போட்டார்கள் என்பதை படிக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. அவ்வாறு பலரால் பாடுபட்டு வாங்கிய சுதந்திரத்தை நாம் மதித்து போற்றி நடக்கிறோமாயென்று ஒவ்வொருவரும் சிந்தித்து பார்க்கவேண்டியது கடமையாகும்.


  முத்து ஆனந்த்தின் 'பழமை கால கல்யாணம்' என்ற கட்டுரை அந்த கால உறவினர்களின் பாசக்கல்யாணத்தையும், இந்த கால அவசரக் கல்யாணத்தையும் கண்முன் கொண்டுவந்தது.


  'கடவுள் எப்படிப்பட்டவன்? யார் இறைவன்' என்ற கவிஞர் கண்ணதாசனின் கருத்தை நடேஷ் கன்னா தொகுத்து தந்திருந்த விதம் சிறப்பாக இருந்ததுடன், சிந்திக்கவும் வைத்தது. நடேஷ் கன்னாவின் கட்டுரைகள், கவிதைகள் தொகுப்புகள் எல்லாமே சிறப்பாக இருப்பது பாராட்டுக்குரியது.


-சின்னஞ்சிறுகோபு,

 சிகாகோ.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%