நன்னிலம் இளங்கோவனின் 'அரசியல் வியாபாரம்' என்ற சிறுகதை இப்போது தொண்டர்களும் விழித்துக்கொண்டார்கள் என்பதையே உணர்த்துகிறது. அரசியலே வியாபாரம் ஆனதால், தொண்டர்களும் தங்களுக்கு எது ஆதாயம் என்று சிந்தித்து செயல்பட ஆரம்பித்து விட்டார்கள். அந்த காலம்போல அரசியல் கட்சிக்காக உழைத்து, பிழைக்கத் தெரியாதவர்களாக வாழ இப்போது யாரும் தயாராக இல்லை.
'மகுடி ஊதிய பாம்பு' என்ற பிரபாகர்சுப்பையாவின் சிறுகதை, ஒரு பாம்பு பேசினால் எப்படி அதன் மனக்குறையை சொல்லுமோ, அது போலவே இருந்தது. மனிதன் தனது ஆதிக்கக் குணத்தால், மற்ற உயிரினங்களுக்கு ஏற்படுத்தும் நெருக்கடிகளை, அவைகளின் வாழ்க்கைப் போராட்டங்களை இந்த கதை நன்கு உணர்த்துகிறது. இதைதான் அன்றே உயிர்களிடத்து அன்பு வேண்டும் என்றார் பாரதியார்.
சசிகலா திருமாலின் 'சப்தமிடும் மௌனங்கள்' தொடர் நாவல் விதிவிட்ட வழியில் செல்கிறது. இலக்கியா கோபி திருமணம் நடக்காது, கடைசி நேரத்தில் தீபக் வந்துவிடுவான் என்று நான் நினைத்தேன். அப்படியெல்லாம் நிகழாமல் இலக்கியாவின் திருமணம் கோபியுடன் நடந்து, ஆண்டுகள் சில ஓடி, இலக்கியாவுக்கும் குழந்தைகள் பிறந்துவிட்டன. தீபக்கிற்கும் வேறு இடத்தில் திருமணம் நடந்து விட்டது. காதல் தோல்வியை, அது வேறொரு வாழ்க்கையில் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துப்போகிறது என்பதை இந்த நாவல் உயிரோட்டமாக சொல்கிறது.
நமது வருமானம் குறைவாக இருந்தாலும், உடல் ஆரோக்கியத்திற்கு, மிக சிறந்த உணவை நம்மால் உண்ணமுடியும் என்பதை முப்பதுக்கும் மேற்பட்ட தகவல்களுடன் விளக்கியிருந்த கட்டுரை எல்லோருக்கும் உதவக்கூடிய ஒரு நல்வழி பாடமாகும். நான் அவ்வப்போது படித்து, என்னை சரி செய்துக்கொள்ள இந்த கட்டுரையை பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டேன்.
உமாதேவி சேகர் மாறிவரும் திருமண விழாவை பற்றி மிக அழகாக அந்த கால திருமணத்திற்கும் இந்த கால திருமணத்திற்கும் உள்ள வித்தியாசத்தை வியப்பான கலாச்சார மாற்றங்களை சொல்லியிருந்த விதம் அசத்தலாக இருந்தது. 'இன்னும் என்னென்ன மாற்றங்கள் வருமோ... யானறியேன் பராபரமே..மணப்பெண் மணமகனிருவரும் மனமொத்து வாழ்ந்தாலே.. மனம் நிறைந்து விடுகிறது இப்போது' என்ற இவரது கருத்து மிகச்சிறப்பு.
'அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில்' என்ற ஏ.எஸ். கோவிந்தராஜனின் கட்டுரை, இந்த கோயில் எங்கே உள்ளது, அங்கே எப்படி செல்வது, அந்த கோயிலின் சிறப்புகள் என்னென்ன என்று நிறைய விபரங்களுடன் நிறைவாக இருந்தது. ஆன்மிக அன்பர்களுக்கு இந்த கட்டுரை நிச்சயம் பயன்படும்.
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.