ரஷ்யாவுக்குப் போட்டியாக 30 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் மீண்டும அணு ஆயுத சோதனை:

ரஷ்யாவுக்குப் போட்டியாக 30 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் மீண்டும அணு ஆயுத சோதனை:



அதிபர் டிரம்ப் உத்தரவு


வாஷிங்டன், அக். 31–


ரஷ்யா அணு ஆயுத சோதனையில் ஈடுபட்ட நிலையில் பதிலுக்கு, சுமார் 30 ஆண்டுகளாக நிறுத்திவைத்திருந்த அணு ஆயுத சோதனைகளை மீண்டும் நடத்துமாறு பாதுகாப்புத் துறைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.


இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:–


அமெரிக்கா வேறு எந்த நாட்டையும் விட அதிக அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளது. ரஷியா 2-வது இடத்தில் உள்ளது, சீனா 3-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவின் தொடர் அணு ஆயுத சோதனைகளால் 5 ஆண்டுகளுக்குள் அது அமெரிக்காவை ஈடு செய்யும்.


பிற நாடுகளின் (ரஷியா, சீனா) மேம்பட்ட சோதனை திட்டங்கள் காரணமாக, நமது அணு ஆயுதங்களையும் அந்த திட்டங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சோதிக்க வேண்டும் என்று ராணுவத் துறை அமைச்சகத்துக்கு (பென்டகன்) உத்தரவிட்டுள்ளேன். இந்த உத்தரவின் அமலாக்கம் உடனுக்குடன் தொடங்கும் என தெரிவித்துள்ளார். இதனால் 30 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா அணு ஆயுத சோதனையில் ஈடுபட உள்ளது.


மாஸ்கோ, சோவியத் ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே 1990-களில் பனிப்போர் நிலவியது. இதனால் இருநாடுகளும் அணு ஆயுத சோதனைகளில் தொடர்ந்து ஈடுபட்டு உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து போரில் சோவியத் ரஷ்யா தோல்வி அடைந்ததை தொடர்ந்து அது ரஷ்யாவாக பிரிக்கப்பட்டது. மேலும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் அணு ஆயுத சோதனையை மேற்கொள்ள ஐ.நா. அமைப்பால் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் உக்ரைன்–ரஷ்யா இடையே போர் தொடங்கி 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாட்டு தலைவர்களின் தொடர் முயற்சி தோல்வியடைந்து வருகிறது. குறிப்பாக ரஷ்ய அதிபர் புதின் இந்த போரை முடிவுக்கு கொண்டு வராமல் தொடர்ந்து இழுத்தடிப்பு செய்து வருகிறார். இதனிடையே ரஷ்ய ராணுவம் தற்போது அணுசக்தி சோதனையில் ஈடுபட்டு வருகிறது. ‘பறக்கும் அணு உலை’ என்று சொல்லக்கூடிய அதிநவீன அணுசக்தி ஏவுகணையான ‘புரெவெஸ்ட்னிக்‌’கை சோதித்தது.


கண்டம் விட்டு கண்டம்


பாய்ந்து தாக்கும்...


எதிரிகளின் ரேடாரில் சிக்காமல் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து எதிரி இலக்குகளை துல்லியமாக தாக்கும் தன்மை கொண்டதாக இது உள்ளது. இந்த நிலையில் மீண்டும் ஒரு அணு ஆயுதத்தை ரஷ்யா நேற்று சோதித்தது. அணுசக்தியால் இயங்கும் வல்லமை கொண்ட கட்டுக்கடங்காத தூரம் செல்லும் நீர்மூழ்கி டிரோனை ரஷ்யா வெற்றிகரமாக சோதித்தது. ‘போசைடன் சூப்பர் டார்பிடோ’ என பெயரிடப்பட்டுள்ள இந்த டிரோன் ரஷியாவின் மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணையைவிட தாக்கும் திறன் கொண்டது. இதனை ரஷ்ய அதிபர் புதின் உறுதிப்படுத்தினார். அவர், “அணு உலையைபோல 100 மடங்கு சக்திவாய்ந்த அணு என்ஜின் பொருத்தப்பட்ட நீர்மூழ்கி டிரோன் சோதனை வெற்றிப்பெற்றுள்ளது” என்றார். ரஷ்யாவின் இந்த சோதனைக்கு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார். ஏவுகணை, நீர்மூழ்கி ட்ரோன் ஆகியவற்றை ரஷ்யா வெற்றிகரமாக சோதித்துள்ள நிலையில், டிரம்ப் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.


1998-ம் ஆண்டுக்குப் பிறகு உலகில் வடகொரியா தவிர வேறு எந்த நாடும் அணு ஆயுத வெடிப்பு சோதனை நடத்தவில்லை. ஆனால் அமெரிக்கா போன்ற அணு ஆயுத பலம் கொண்ட நாடுகள், சக்திவாய்ந்த கணினிகளைப் பயன்படுத்தி உருவகப்படுத்தப்பட்ட அணு வெடிப்புகள், அணு இயற்பியல் சோதனைகள், அணு ஏவுகணை சோதனைகள், அணு ஆயுதப் போர் ஒத்திகைகள் போன்ற சோதனைகளை நடத்தி வருகின்றன.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%