மருத்துவ உயிர்க்கழிவு ஆலை கட்டுமானப் பணிகளை நிறுத்தக் கோரி மானாமதுரையில் 22–ந் தேதி ஆர்ப்பாட்டம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மருத்துவ உயிர்க்கழிவு ஆலை கட்டுமானப் பணிகளை நிறுத்தக் கோரி மானாமதுரையில் 22–ந் தேதி ஆர்ப்பாட்டம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை, செப்.10–


மக்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் வகையில் மேற்கொண்டு வரும், மெடிக்கேர் என்விரான்மென்டல் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மருத்துவ உயிர்க்கழிவு மறுசுழற்சி ஆலை கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்தத் தவறிய தி.மு.க. அரசு மற்றும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்கள் நலன் கருதி இந்நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளை உடனடியாகத் தடுத்து நிறுத்திட வலியுறுத்தியும், சிவகங்கை மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் 22–ந் தேதி -- திங்கட் கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–


சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சிக்கு அருகில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மெடிக்கேர் என்விரான்மென்டல் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மருத்துவ உயிர்க்கழிவு மறுசுழற்சி ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, பொதுமக்களின் ஆட்சேபனையால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.


இந்த ஆலை அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிப்பு, தொற்று நோய், உயிர்க்கொல்லி நோய் ஏற்பட்டு சுற்று வட்டார மக்களை பலவகையான நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது எனத் தெரிவித்து, மானாமதுரை நகராட்சியைச் சேர்ந்த மக்களும், சூரக்குளம் பில்லறுத்தான் ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்களும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.


தற்போது, ஆட்சி முடியும் தருவாயில், திமுக அரசு, இந்த ஆலையின் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தி வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


மானாமதுரை நகராட்சிக்கு அருகில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில், மக்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் வகையில் மேற்கொண்டு வரும், மெடிக்கேர் என்விரான்மென்டல் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் மருத்துவ உயிர்க்கழிவு மறுசுழற்சி ஆலை கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்தத் தவறிய திமுக ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்கள் நலன் கருதி இந்நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளை உடனடியாகத் தடுத்து நிறுத்திட வலியுறுத்தியும், அண்ணா தி.மு.க. சிவகங்கை மாவட்டத்தின் சார்பில் 22–ந் தேதி -- திங்கட் கிழமை காலை 10 மணியளவில், மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.


இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான வி.வி. ராஜன் செல்லப்பா தலைமையிலும்; கழக அமைப்புச் செயலாளர் ஏ.கே. சீனிவாசன், சிவகங்கை மாவட்டச் செயலாளர் பி.ஆர். செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.


இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சிக் கழகச் செயலாளர்கள்; மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், நகர, பேரூராட்சி மன்ற இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.


இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%