சென்னை: மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து ஸ்டாம்ப் வடிவிலான போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார். போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையைத் தடுக்க அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களும் ரோந்து மற்றும் கண்காணிப்பை முடுக்கிவிட்டுள்ளனர்.
அதன்படி மீனம்பாக்கம் காவல் நிலைய போலீஸார் நேற்று முன்தினம் மாலை மீனம்பாக்கம், ரயில்வே ஸ்டேஷன் சாலை அருகில் கண்காணித்தனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த இளைஞரிடம் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அவரது உடைமைகளைச் சோதனை செய்தபோது, அவர் எல்எஸ்டி ஸ்டாம்ப் எனப்படும் ஸ்டாம்ப் வடிவிலான போதைப் பொருளை மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.
அதை பறிமுதல் செய்த போலீஸார், போதைப் பொருள் வைத்திருந்த பொழிச்சலூரைச் சேர்ந்த தீபக் (23) என்பவரை கைது செய்தனர். இவர் தனியார் வங்கி ஒன்றில் பணி செய்து கொண்டே மாணவர்கள், இளைஞர்களைக் குறிவைத்து அவர்களுக்கு போதைப் பொருள் விநியோகம் செய்து வந்தது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். விசாரணைக்குப் பின்னர் தீபக் சிறையில் அடைக்கப்பட்டார். இவரது கூட்டாளிகளை போலீஸார் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?