அவர் கோகுல்தாஸ். நகரில் புகழ் பெற்ற பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர்.
தீ விபத்தில் உயிர் பிழைத்தும் முகம் எரிந்து போனதில் அவலட்சணமாக மாறியவர்களுக்கு தன்னுடைய தனித் திறமையால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழகாக்கும் வித்தகர்.
அவ்வப்போது சிலர் வந்து "டாக்டர் என்னோட முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி... கம்ப்ளீட்டா மாத்தி விடுங்க"என்று கேட்கும் போது "என்ன காரணத்துக்காக?"என்று திருப்பிக் கேட்பார்.
அவர்கள் திக்கித் திணறும் போதே ஏதோவொரு குற்றச் செயல் புரிந்து விட்டு அதிலிருந்து தப்பிக்கத்தான் முகத்தை மாற்றிக் கொள்ள வந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு, அவர்கள் கொடுக்கத் தயாராயிருக்கும் லட்சங்களைத் துச்சமாக மதித்துத் துரத்தியடிப்பார்.
அப்படிப்பட்ட கோகுல்தாஸ் தன் மனைவியைக் கான்ஸரிலிருந்து காப்பாற்றுவதற்காக ஒரு முறை... ஒரே ஒரு முறை... பெருந்தொகை பெற்றுக் கொண்டு ஒரு தீவிரவாதியின் முக ஜாடையை மாற்றி அவன் தப்பிக்க உதவுகிறார்.
எப்படியோ அதை மோப்பம் பிடித்து, அவரிடம் என்கொயரிக்கு வந்த காவல்துறையிடம் அவர்கள் காட்டிய தீவிரவாதியின் பழைய போட்டோவைப் பார்த்து, "நோ... நோ... இந்த நபரை நான் பார்த்ததேயில்லை" எனப் பொய் கூறுகிறார்.
அவர் வார்த்தையை நம்பியபடி வெளியே சென்றது காவல்துறை. ஆனால் அடுத்த நகர்வாய் அவர்கள் பக்கத்து பில்டிங்குகளுக்குச் சென்று சி.சி.டி.வி.காட்சிகளைச் சேகரிக்க அதில் அந்தத் தீவிரவாதி ஒரிஜினல் முகத்தோடு, கோகுல்தாஸின் கிளினிக்கிற்குள் செல்வதைக் காண்கின்றனர்.
அந்தக் காட்சியை தங்களது பென்டிரைவில் நிரப்பிக் கொண்டு மீண்டும் அவர்கள் கோகுல்தாஸின் கிளினிக்கிற்கு வருகின்றனர்.
வந்தவர்கள் அதிர்ச்சியடையும் வண்ணம் கோகுல்தாஸ், துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
போலீஸார் அவரது சவத்தை ஆராய்ந்து கொண்டிருந்த போது,
கோகுல்தாஸின் மேஜை மீதிருந்த அவரது மொபைலுக்குபேதோ ஒரு அழைப்பு வர, இன்ஸ்பெக்டர் யோசனையுடன் எடுத்து, "ஹலோ" என்றார் சன்னக் குரலில்.
"சார்... நாங்க "எஸ்.ஆர்.எஸ். ஹாஸ்பிடல்"ல இருந்து பேசறோம்... உங்க வைஃப்... இது வரைக்கும் நல்லாத்தான் இருந்தாங்க.... இப்ப ஒரு பத்து நிமிஷத்துக்கு முன்னாடி பேச்சு மூச்சே இல்லாம ஆயிட்டாங்க... நாங்களும் தீவிரமா முயற்சி பண்ணிப் பார்த்திட்டோம்... எங்களால உங்க மனைவியைக் காப்பாத்த முடியலை....ஸாரி..." என்றார் மருத்துவமனை டாக்டர் எதிர்முனையில் இருப்பது இன்ஸ்பெக்டர் என்று தெரியாமல்.
தான் செய்த தவறுக்கு வருந்தி ஒரு உயிரும், அந்தத் தவறால் கிடைக்கும்
மருத்துவம் தேவையில்லை, என்று இன்னொரு உயிரும் இந்த உலகத்தை விட்டு சந்தோஷமாய் வெளியேறின.
(முற்றும்)

முகில் தினகரன்,
கோயமுத்தூர்