பட்டியலின மக்களுக்கு திருமாவளவன் துரோகம் இழைக்கிறார்: எல்.முருகன் குற்றச்சாட்டு
சென்னை:
பட்டியலின மக்களுக்கு திருமாவளவன் துரோகம் இழைக்கிறார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது 2009 முதல் 2014 வரை தமிழக ரயில்வே திட்டங்களுக்கு வெறும் ரூ.879 கோடி தான் நிதி ஒதுக்கப்பட்டது.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடி இந்த நிதியாண்டில் மட்டும் ரூ.6,666 கோடி தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கி உள்ளார். இது தவிர ரூ.33,467 கோடிக்கு பணிகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும், ரூ.2,948 கோடிக்கு தமிழக ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 11 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் கோடிக்கான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தமிழகத்துக்காக கொடுத்திருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 22-ம் தேதி நெல்லையில் நடைபெறும் பூத் கமிட்டி மாநாட்டில் கலந்து கொள்கிறார். அமலாக்கத்துறையை பொறுத்தவரை அது சுதந்திரமாக செயல்படக் கூடிய அமைப்பு. அவர்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களின் அடிப்படையில் சோதனைகள் நடத்தப்படுகிறது.
எங்கள் கூட்டணி பலமாக உருவாகியிருக்கிறது. பழனிசாமி மேற்கொண்டுள்ள யாத்திரையில் மிகப்பெரிய அளவில் மக்களின் ஆதரவு பெருகியிருக்கிறது. தமிழகத்தில் எழுச்சியை உருவாக்கிக் கொண்டிருக்கிற இந்த யாத்திரையை பார்த்து ஸ்டாலின் ஏதேதோ பேசிவருகிறார். தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் விசிக தலைவர் திருமாவளவன் மாறி மாறி பேசுவது அவர் நிலையாக இல்லை என்பதையே காட்டுகிறது.
தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தூய்மை பணியாளர்களின் கல்வி தகுதிக்கு ஏற்றவாறு அவர்களுக்கு பணி உயர்வை வழங்க வேண்டும். பட்டியலின மக்களுக்கு திருமாவளவன் மிகப்பெரிய துரோகத்தை இழைத்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளில் பட்டியலின மக்களின் பிரச்சினைகளுக்கு திருமாவளவன் குரல் கொடுத்ததில்லை. அவர்களது நலனில் திருமாவளவனுக்கு அக்கறை இல்லை.
திமுக கூட்டணியில் ஒட்டிக்கொள்ள வேண்டும். அந்த கூட்டணியில் இருந்து எம்.பி, எம்எல்ஏ-க்களாக வேண்டும் என்பது தான் அவருடையை குறிக்கோள். அதிமுக - பாஜக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. 2026-ல் எங்கள் கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். திமுக கூட்டணி படுதோல்வி அடையும். திமுகவில் இருந்து முக்கியமான சிலர் எங்களுடன் பேசி வருகிறார்கள். அவர்கள் யாரென்று சொல்ல முடியாது. அவர்கள் பாஜகவில் இணையும் போது அனைவருக்கும் தெரியப்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.