நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க ஆக.3 கடைசி நாள்

நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க ஆக.3 கடைசி நாள்



சென்னை, ஜூலை 21-

 டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, நல்லாசிரியர் விருதுக்கு ஆகஸ்ட் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும், ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ‘ஆசிரியர் தின விழாவாக’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் சிறந்த ஆசிரியர்களுக்கு, மாநில அரசு விருதான ‘டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது’ வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இதில் விருது பெறும் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தின விழாவில் ரூ.10,000 ரொக்கப் பரிசு, ரூ.2,500 மதிப்பிலான வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பயணப்படி வழங்கப்படும்.

வழிகாட்டு நெறிமுறைகள்:

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெறும் ஆசிரியர்களை தேர்வு செய்ய 38 வருவாய் மாவட்டத்திற்கான விருதுகள் நிர்ணயக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

விருதுக்கு தகுதியுள்ள ஆசிரியர்கள், தங்களது விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பித்த ஆசிரியர்கள் பணிப்பதிவேடுகள் மற்றும் பிற சான்றுகள், மாவட்ட அளவில் உரிய அலுவலர்களால் சரிபார்க்கப்பட வேண்டும்.

விண்ணப்பித்த ஆசிரியர்கள் மாவட்ட தேர்வுக்குழுவின் முன் நேர்காணலுக்கு வரவழைக்கப்பட்டு மதிப்பீடு செய்தல் வேண்டும்.

மாவட்டத் தேர்வுக்குழுவினர் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல் கருத்துருக்களை இணையவழியாக மதிப்பீடுகளின் அடிப்படையில், மாநிலத் தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு ஆகஸ்ட் மாதம் 14 ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.


5வருடம் அனுபவம்

அனைத்து வகை ஆசிரியர்களும் குறைந்தபட்சம் 5 வருடங்கள் பணிபுரிந்திருக்க வேண்டும். மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை ஆசிரியர்களும் விருதிற்குத் தகுதியுடையவர்கள். வகுப்பறையில் கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அலுவலகங்களில் பணியில் நிர்வாகப்பணி மேற்கொள்ளும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்ககூடாது.

கல்வியாண்டில் செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு முன்பு, வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெற்ற ஆசிரியர்களை பரிந்துரை செய்யக்கூடாது. கல்வியாண்டில் குறைந்தது 4 மாதங்கள் (செப்டம்பர் 30ஆம் தேதிவரை -in Regular Service) பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும்.

அரசியலில் இருக்கக்கூடாது:

பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்கள் எவ்விதக் குற்றச்சாட்டிற்கும், ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாதவராகவும், பொதுவாழ்வில் தூய்மையானவராக, பொது சேவைகளில் நாட்டம் கொண்டவராகவும் இருத்தல் வேண்டும்.

பள்ளி மாணவர்களின் இடைநிற்றலைக் குறைத்தல், மாணவர் சேர்க்கை, தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துதல், கல்வித் தரத்தில் பின்தங்கிய மாணவர்களின் தரத்தை முன்னேற்ற பாடுபடுபவராகவும் இருத்தல் வேண்டும்

அரசியலில் பங்கு பெற்று, அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்படக் கூடாது.

கல்வியினை வணிக ரீதியாகக் கருதி செயல்படும் ஆசிரியர்களையும், நடத்தை விதிகளுக்கு முரணாக இருக்கும் ஆசிரியர்களையும் இந்த விருதிற்கு தகுதியற்றவர்கள்.

ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதிக்குள் முதன்மைக் கல்வி அலுவலர்கள், தங்கள் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட விருதுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டியலை தயார் செய்து 1:2 என்ற வீதத்தில் தேர்வு செய்து, நல்லாசிரியர் விருதுக்கான ஆசிரியர்களின் கருத்துருக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.

மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்டு தேசிய விருது பெற்ற எந்த ஆசிரியரையும் பரிந்துரை செய்தல் கூடாது. பள்ளிகளில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள், தங்களின் விவரங்களை EMIS இணையதளம் மூலம் இன்று முதல் ஆகஸ்ட் 3 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

==

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%