திண்டுக்கல் டாஸ்மாக் வருமானம் ரூ.1.15 கோடி நீதிமன்ற கணக்கில் சேர்ப்பு - இழப்பீடு வழக்கில் ஐகோர்ட் அதிரடி
மதுரை: அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு வழங்காததால், அதற்கு ஈடாக திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் கடைகளின் 20 நாட்கள் வருமானத்தில் ரூ.1.16 கோடி நீதிமன்றக் கணக்கில் செலுத்தப்பட்டது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த முத்து, கல்யாணி உள்ளிட்ட 30 பேர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “எங்களுக்குச் சொந்தமான நிலத்தை 2017-ல் அரசு கையகப்படுத்தியது. இதற்கு ரூ.4.37 கோடியை இழப்பீடாக வழங்க மாவட்ட நீதிமன்றம் 2021-ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்த அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடியாகியும், இன்னும் இழப்பீடு வழங்கவில்லை” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் கடைகளின் தினசரி வருமானத்தை மாவட்ட நீதிமன்றத்தின் வங்கிக் கணக்கில் செலுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை நிறைவேற்றாததால் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர், மாவட்ட மேலாளர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் கே.முத்துகணேசபாண்டியன் வாதிட்டார்.
டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன், மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆகியோர் ஆஜராகினர். தொடர்ந்து அரசுத் தரப்பில், “உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் என்பது தனி நிறுவனம். இழப்பீடு வழங்குவது அரசின் பொறுப்பு. டாஸ்மாக் நிறுவனம் இழப்பீடு வழங்குமாறு கூறுவது சரியல்ல” என்று கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், “சாலைப் பணிகளுக்காக நிலம் கொடுத்தோர் பிச்சைக்காரர்களைப்போல கையேந்தி நிற்க வேண்டிய நிலை உள்ளது. டாஸ்மாக் விற்பனை பணத்தை நீதிமன்றத்தின் வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டு, அதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ரூ.1.16 கோடியை நீதிமன்ற வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, “உயர் நீதிமன்ற உத்தரவு, உச்ச நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டால், மறுநாளில் இருந்து திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் கடைகளின் தினசரி வருமானத்தை மறு உத்தரவு வரும் வரை மாவட்ட நீதிமன்ற வங்கிக் கணக்கின் பெயரில் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். விசாரணை நவ.21-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.