டெல்லியில் செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடம்.
புதுடெல்லி: வெடிபொருள் வாங்க 4 மருத்துவர்கள் இணைந்து ரூ.26 லட்சம் நிதி திரட்டி உள்ளனர் என்று என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் குண்டு வெடித்த காரில் இருந்தவர் காஷ்மீரின் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் உமர் அகமது நபி என்றும் அவர் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியிருப்பதும் முதல்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அவர்கள் வெடிபொருளை சேகரித்தது தொடர்பாக தேசிய பாதுகாப்பு அமைப்பு (என்ஐஏ) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து என்ஐஏ மூத்த அதிகாரிகள் கூறியதாவது: தற்கொலைப் படை தீவிரவாதியான மருத்துவர் உமர் அகமது நபி மற்றும் அவரது நெருங்கிய நண்பர்களான மருத்துவர்கள் முஜம்மில் ஷகீல், ஆதில், ஷாகின் ஆகியோர் இணைந்து வெடிபொருள் வாங்க ரூ.26 லட்சத்தை திரட்டி உள்ளனர்.
இவர்கள் 26 குவின்டால் என்பிகே உரத்தை ரூ.3 லட்சத்துக்கு வாங்கி உள்ளனர். ஹரியானாவின் குருகிராம், நூ ஆகிய நகரங்களில் இருந்து என்பிகே உரத்தை பெற்றுள்ளனர். சுமார் 2 ஆண்டுகளாக என்பிகே உரம் என்ற பெயரில் வெடிபொருட்களை தயார் செய்து உள்ளனர். மருத்துவர்கள் என்பதால் யாருக்கும் எந்த சந்தேகமும் எழவில்லை. ஒரு சிலர் கேள்வி எழுப்பியபோது, காஷ்மீரில் எங்களுக்கு வேளாண் நிலம் இருக்கிறது. அதற்காக உரங்களை வாங்கி வருகிறோம். இவற்றை காஷ்மீருக்கு கொண்டு செல்வோம் என்று கூறியுள்ளனர்.
வெடிபொருட்கள் தயாரிப்பு, வெடிபொருள் கடத்தல் தொடர்பாக பிரத்யேக செயலி வாயிலாக 4 மருத்துவர்களும் நாள்தோறும் தகவல்களை பரிமாற்றம் செய்துள்ளனர். கடந்த ஜனவரி மாதத்தில் மருத்துவர் உமர் அகமது நபி பலமுறை செங்கோட்டை பகுதியில் நோட்டமிட்டு உள்ளார். இதற்கான சிசிடிவி ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதியே (பாபர் மசூதி இடிப்பு தினம்) டெல்லியில் தாக்குதல் நடத்த உமர் அகமது நபி சதித் திட்டம் தீட்டியிருந்தார். ஆனால் பலத்த பாதுகாப்பு காரணமாக அவரால் தாக்குதலை நடத்த முடியவில்லை. தற்போது சக மருத்துவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட நிலையில், உமர் அகமது நபி டெல்லியில் தற்கொலை படை தாக்குதலை நடத்தி உள்ளார்.
வெடிபொருள் வாங்க 4 மருத்துவர்களும் யாரிடம் இருந்து நிதியுதவிகளை பெற்றனர் என்பது குறித்து அமலாக்கத் துறை தனியாக விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பான தகவல்கள் கிடைத்தபிறகு நிதியுதவி அளித்தவர்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள் இவ்வாறு என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்தன.