சென்னை மாநகராட்சியின் 32 வகை சேவைகளுமே இனி, ‘வாட்ஸ்–அப்’பில்: மேயர் பிரியா துவக்கி வைத்தார்
சென்னை, ஆக 25–
தமிழ்நாட்டில் முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் பிறப்பு– இறப்பு சான்றிதழ் பெறுதல், சொத்து வரி செலுத்துதல் உள்பட அனைத்து சேவைகளையும் (மொத்த 32 சேவைகள்)வாட்ஸ் – அப் வாயிலாக வழங்கிடும் செயல்பாட்டினை மேயர் ஆர்.பிரியா இன்று ரிப்பன் கட்டிட அரங்கில் தொடங்கி வைத்தார்.
இது சிறந்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தில், நிபுணர்களின் ஆலோசனைகளை மேற்கொண்டு, மக்கள் மிக எளிதாகப் பயன்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுடன் உருவாக்கப்பட்டுள்ளது
பெருநகர சென்னை மாநகராட்சியின் சேவையினைப் பெற தற்போது உருவாக்கப்பட்டுள்ள 9445061913 என்கிற வாட்ஸ் அப் எண்ணை பொதுமக்கள் தங்கள் கைபேசியில் முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும் இதனைத் தொடர்ந்து இந்த Whatsapp Chatbot எண்ணிற்கு Hi அல்லது ‘வணக்கம்' என பதிவிட வேண்டும். பின்னர் பெருநகர சென்னை மாநகராட்சியின் சேவைகளை அதில் உள்ள உரிய வழிகாட்டலுடன் உள் நுழைந்து பெற்றிட வேண்டும்.
இருந்த இடத்திலிருந்தே...
இதில் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல், புகார் பதிவு, தொழில் வரி செலுத்துதல், வர்த்தக உரிமம் செலுத்துதல் மற்றும் புதுப்பித்தல், ஆவண பதிவிறக்கம், சமுதாயக்கூடம் முன்பதிவு, முதல்வர் படைப்பகம் தொடர்பான சேவைகள், நீச்சல் குளம் முன்பதிவு, செல்லப்பிராணிகளின் உரிமம் பதிவு, பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், நகரமைப்பு தொடர்பான சேவைகள், விண்ணப்பங்கள் கண்காணிப்பு, கடை வாடகை செலுத்துதல், கட்டடம் மற்றும் கட்டுமானக் கழிவுகள் தொடர்பான பதிவு உள்ளிட்ட பெருநகர சென்னை மாநகராட்சியின் 32 வகையான சேவைகளை மக்கள் எவ்வித அலைச்சலுமின்றி தாங்கள் இருந்த இடத்திலிருந்து இந்த இதன் வாயிலாகப் பெற்றிட முடியும்.
இது மக்கள் எளிதாகப் பயன்படுத்தும் விதத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் உரையாட முடியும்.
மேலும் இதில் பிற தகவல் சேவைகளாக, மண்டல அலுவலகம், வார்டு அலுவலகம் கண்டறிதல், அருகில் உள்ள வசதிகளைத் தெரிந்து கொள்ளுதல், பள்ளிக் கூடங்கள், கழிப்பிடங்கள், பேருந்து நிறுத்துமிடங்கள், அம்மா உணவகம், மயான பூமி, சமுதாயக்கூடம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற சமூக சுகாதார மையம், படிவங்கள் பதிவிறக்கம், அடுத்தடுத்து கேட்கப்படும் கேள்விகள் உள்ளிட்ட சேவைகளையும் பெற முடியும். மேலும், இதில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சொந்த சேவைகளில் பொழுதுபோக்கு வரி மற்றும் சுகாதாரச் சான்றிதழ் சேவைகளும் புதிதாக சேர்க்கப்பட்டு அதன் சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும்.
இந்த Whatsapp Chatbot மூலம் மக்களுக்கான சேவைகளை எளிதாகப் பெறுதல், 24/7 சேவை கிடைக்கும் வசதி, இதனைப் பயன்படுத்துவதற்கான இயல்பான உரையாடல், எவ்வித காலதாமதமும் அலைச்சலுமின்றி மக்கள் தாங்கள் இருந்த இடத்திலிருந்தே இந்த சேவைகளைப் பெறுதல் ஆகியன குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.
இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக இந்த Whatsapp Chatbot-ல் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் (CMWSSB) மற்றும் பதிவுத்துறை (TNREGIET) ஆகியவற்றின் சேவைகளையும் மக்களுக்கு வழங்கிடும் வகையில் கூடுதலான சேவைகள் இதில் விரிவாக்கம் செய்யப்படும்.
க்யூஆர் கோடு வெளியீடு
இதனைத் தொடர்ந்து, மேயரின் 2025–26ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, சொத்துவரி மதிப்பீடு, பெயர் மாற்றம், திருத்தத்திற்கான இறுதி ஆணை அறிவிப்பு, புதிய மற்றும் புதுப்பித்தல் தொழில் உரிமங்கள், தொழில் வரி வழங்கும் அறிவிப்புகளுக்குப் பதிலாக QR Codeனை மேயர் வெளியிட்டார்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்கள், பகுதி அலுவலகங்கள், வார்டு அலுவலகங்கள் மற்றும் சேவைத் துறைகளான சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அலுவலகங்கள், தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகங்கள் மற்றும் அரசு இ–சேவை மையங்கள் ஆகிய இடங்களில் எளிதாக வரி செலுத்துவதற்கு ஏதுவாக பொருத்தப்படும் QR Code அச்சிட்ட அட்டைகளையும்,
பெருநகர சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் வாடகைக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடைகளில், ஒவ்வொரு வாடகைதாரருக்கும் தனித்தனியாக வாடகை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துவதற்கு ஏதுவாக அந்தந்த கடைகளில் பொருத்தப்படும். QR Code அச்சிட்ட அட்டைகளையும் மேயர் வெளியிட்டு வழங்கினார்.
இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், நிலைக்குழுத் தலைவ சர்பஜெயாதாஸ் நரேந்திரன், துணை ஆணையாளர்கள் வி. சிவகிருஷ்ணமூர்த்தி, ம.பிரதிவிராஜ், மாநகர வருவாய் அலுவலர் கே.பி.பானு சந்திரன், பினாக்கில் வாட்ஸ்அப் சேவை கம்பெனி சௌத் இந்தியா ஹெட் திரு.கௌரி சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.