காவிரி ஆறு செல்லும் வழியெங்கும் தடுப்பணைகள் கட்டப்படும்’’: எடப்பாடி உறுதி

காவிரி ஆறு செல்லும் வழியெங்கும் தடுப்பணைகள் கட்டப்படும்’’: எடப்பாடி உறுதி

திருச்சி, ஆக. 25–


காவிரி ஆறு செல்லும் வழியெங்கும் தடுப்பணைகள் கட்டப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.


‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தில் நேற்று அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மணச்சநல்லூர் தொகுதிக்குச் செல்லும் வழியில் பனையகுறிச்சியில் ஏராளமான விவசாயகள் ’நடந்தாய் வாழி காவிரி நாயகனே’ என்ற பதாகையைப் பிடித்தபடி காத்திருந்தனர்.


விவசாயிகளைக் கண்டதும் பேருந்தை நிறுத்தச்சொல்லி கீழே இறங்கினார் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, காமராஜ் மற்றும் பலரும் இருந்தனர்.


விவசாயிகள் ஆழாக்கில் அரிசி மற்றும் பூக்களை நிரப்பி எடப்பாடி பழனிசாமி கையில் கொடுத்து, “உங்களது பொன்னான கைகளால் அரிசியையும், பூக்களையும் காவிரி ஆற்றில் தூவுங்கள், இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்கும்” என்று வேண்டுகோள் விடுத்தனர். உடனே எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியுடன் அரிசியையும், பூக்களையும் காவிரி ஆற்றில் தூவினார்.


இதையடுத்து எடப்பாடியிடம் பேசிய விவசாயிகள், ‘’காவிரி மற்றும் துணை ஆறுகளை சுத்தப்படுத்தும் வகையில், ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்தைக் கொண்டு வந்தீர்கள். மத்திய அரசிடம் பேசி இந்த திட்டம் நிறைவேறுவதற்கு முன்னெடுப்பு செய்தீர்கள். இந்த திட்டம் நிறைவேறினால் சாயக்கழிவு, கழிவுநீர் போன்றவை ஆற்றில் கலந்து நீர் மாசுபடுவது முழுமையாகத் தடுக்கப்படும். இதன் மூலம் நீர் ஆதாரமும் மேம்படும். மத்திய அரசுடன் இணைந்து நடந்தாய் வாழி காவிரி திட்டம் கொடுத்த உங்களுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர். அதோடு காவிரி ஆற்றில் தடுப்பணை கட்டி நீர் சேமிக்கவும் கோரிக்கை வைத்தனர்.


அவர்களிடம் பேசிய எடப்பாடி, “ஏற்கனவே ஆதனூர் குமாரமங்கலம் உள்ளிட்ட 2 இடங்களில் அண்ணா தி.மு.க. ஆட்சியில் தடுப்பணை கட்டியிருக்கிறோம். மேலும் நான்கு தடுப்பணைகள் கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து, அதற்கான முதற்கட்டப் பணிகள் துவங்கிய நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அடுத்து வந்த தி.மு.க. அரசு திட்டத்தை ரத்து செய்துவிட்டது.


மீண்டும் அண்ணா தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மேட்டூர் அணையில் இருந்து காவிரி கடலில் கலக்கும் வரை எங்கெல்லாம் தடுப்பணைகள் அமைக்க முடியும் என்பதை ஆராய்ந்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். ஏனெனில், தடுப்பணை கட்டும்போது அந்த இடத்தைச் சுற்றிய நிலங்களும், மக்களும் பாதிக்கப்படக்கூடாது, அதுபோன்ற இடங்களை ஆய்வு செய்தே அமைக்க முடியும். அதனால் முழுமையாக ஆராய்ந்து தடுப்பணை அமைத்துக்கொடுக்கிறேன்” என்றார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%