சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டம் 2030-ம் ஆண்டு வரை நீட்டிப்பு

சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டம் 2030-ம் ஆண்டு வரை நீட்டிப்பு

புதுடெல்லி,


பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் சாலையோர வியாபாரிகளுக்கான ஆத்ம நிர்பார் நிதி (பி.எம். சுவாநிதி) திட்டத்தை மறுசீரமைத்து விரிவாக்கம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. கொரோனாவால் ஏராளமான நெருக்கடிகளை சந்தித்த சாலையோர வியாபாரிகளுக்கு உதவுவதற்காக கடந்த 2020-ம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது.


அதன்படி இதில் 3 தவணையாக பெறப்படும் கடனை சரியான நேரத்தில் திருப்பிச்செலுத்தும் வியாபாரிகள் யு.பி.ஐ.யுடன் இணைக்கப்பட்ட ரூபே கிரெடிட் கார்டு பெற தகுதிபெறுகின்றனர். இந்த கார்டு மூலம் அவசர வியாபார தேவை மற்றும் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.


அந்தவகையில் சில்லரை மற்றும் மொத்த பரிவர்த்தனைகளில் டிஜிட்டல் கட்டணங்களைத் தேர்வு செய்யும் விற்பனையாளர்களுக்கு ரூ.1,600 வரை சலுகைகள் வழங்கப்படும். இந்த திட்டம் பல்வேறு மைல்கல் சாதனைகளை எட்டியுள்ளது. கடந்த ஜூலை 30-ந் தேதி நிலவரப்படி ரூ.13,797 கோடி அளவுக்கு 68 லட்சத்துக்கு அதிகமான சாலையோர வியாபாரிகளுக்கு 96 லட்சம் கடன் வழங்கல்கள் நடந்துள்ளன.


டிஜிட்டல் முறையில் செயல்படும் சுமார் 47 லட்சம் பயனாளிகள் ரூ.6.09 லட்சம் கோடி மதிப்புள்ள 557 கோடிக்கும் மேற்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளை நடத்தி, மொத்தம் ரூ.241 கோடி கேஷ்பேக்கைப் பெற்றுள்ளனர். இந்த திட்டம் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி வரை செல்லுபடியாகி இருந்த நிலையில், இதை மறுசீரமைத்து நீட்டிக்க மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.


அதன்படி ரூ.7,332 கோடி செலவில் 2030-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை இந்த திட்டம் நீட்டிக்கப்படுகிறது. மேலும் கூடுதலாக 50 லட்சம் புதிய வியாபாரிகளை சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. நீட்டிக்கப்படும் இந்த திட்டத்தில் கடன் உச்சவரம்பும் உயர்த்தப்படுகிறது.


மேலும் இதில் முதல் தவணை கடன் உச்ச வரம்பு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. மேலும் 2-ம் தவணை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக அதிகரிக்கப்படுகிறது. அதேநேரம் 3-ம் தவணை ரூ.50 ஆயிரமாக நீடிக்கும் என அரசு தெரிவித்து உள்ளது.


இதைத்தவிர ரூ.12,328 கோடி மதிப்பிலான 4 ரெயில்வே திட்டங்களுக்கு மத்திய மந்திரிசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி தேஷால்பர்-ஹஜிப்பூர்-லுனா மற்றும் வயோர், லக்பத் பகுதிகளை இணைக்கும் ரெயில் பாதை, செகந்திராபாத்-வாடி இடையே 3 மற்றும் 4-வது பாதைகள், பகல்பூர்-ஜமால்பூர் இடையே 3-வது பாதை மற்றும் பர்கேட்டிங்-நியூ தின்சுகியா இடையேயான பாதை இரட்டிப்பு ஆகிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%