சபரிமலை தங்கத் திருட்டு வழக்கு: 21 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
திருவனந்தபுரம், ஜன. -
சபரிமலை தங்கத் திருட்டு வழக்கில் தொடர்புடைய 21 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சொந்தமான தங்கம் திருடப்பட்டதாகக் கூறப்படும் புகாரில், அதன் பின்னணியில் உள்ள பணமோசடி குறித்து அமலாக்கத்துறை தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளிகளுக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சபரிமலை கோயிலில் கருவறைக் கதவுகள் மற்றும் துவார பாலகர் சிலைகளின் 42 கிலோவுக்கும் அதிக எடைகொண்ட தங்க முலாம் பூசிய கவசங்கள், கடந்த 2019ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டன. அப்போது, அந்த தங்கக் கவசங்கள் முறையாகக் கையாளப்படாமல், செம்புத் தகடுகள் என தவறாக கணக்குக் காட்டப்பட்டு முறைகேடு செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக கேரள உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து, சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது.
இந்த நிலையில் கேரளம் மற்றும் பெங்களூருவிலும் சோதனையில் ஈடுபட்டுள்ள அமலாக்கத் துறை அதிகாரிகள் மொத்தம் 21 இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் தங்க முலாம் பூசும் நிறுவனத்தில் சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளாவில் உன்னிகிருஷ்ணன் வீடு, திருவனந்தபுரத்தில் தேவசம் வாரிய தலைமையகம் மற்றும் முன்னாள் தேவசம் வாரியத் தலைவர் பத்மகுமாரின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
சென்னையைச் சேர்ந்த பங்கஜ் பண்டாரின் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது.
கோயில் நகைகள் மற்றும் கோபுரங்களில் இருந்து திருடப்பட்ட தங்கத்தை விற்று, அதன் மூலம் பெறப்பட்ட சட்டவிரோதப் பணத்தைக் கண்டறிவதே இந்தச் சோதனையின் முக்கிய நோக்கமாகும். இந்த நிதிப் பரிமாற்றங்கள் பினாமி பெயர்களிலோ அல்லது போலி நிறுவனங்கள் மூலமாகவோ முதலீடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சோதனையின் போது முக்கிய நிதி ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சிறப்புப் புலனாய்வு விசாரணை:
சபரிமலை தங்கத் திருட்டு குறித்து ஏற்கனவே கேரள உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அக்குழு குற்றச் சதி குறித்து விசாரணை நடத்த, அமலாக்கத்துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நிதி முறைகேடுகளை மட்டும் தனியாக விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் முன்னாள் தேவசம் போர்டு தலைவர் என். வாசு தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார். மற்ற சில குற்றவாளிகளின் ஜாமீன் மனுக்கள் நீதிமன்ற நிலுவையில் உள்ளன. இதற்கிடையில், இந்த வழக்கின் விசாரணையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறி, சிபிஐ விசாரணை கோரி கோயில் பூசாரிகள் மற்றும் சில மத அமைப்புகள் நீதிமன்றத்தை நாடியுள்ளன.
தற்போது நடைபெற்றுள்ள சோதனைகளில் கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில், அடுத்தகட்டமாகச் சம்பந்தப்பட்ட நபர்களுக்குச் சம்மன் அனுப்பவும், சட்டவிரோதமாகச் சேர்க்கப்பட்ட சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.