கரூரில் வீட்டில் இருப்பவர்களை தாக்கிவிட்டு நகை, பணம் துணிகரக் கொள்ளை: எஸ்.பி. நேரில் விசாரணை
Aug 19 2025
10

கரூர்:
ஓய்வுப்பெற்ற அரசுக் கல்லூரி முதல்வர் வீட்டில் 31 பவுன் நகை, ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி. கே.ஜோஷ் தங்கையா ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அண்ணா நகரை சேர்ந்தவர் கருணாநிதி (70). திருச்சி மாவட்டம் முசிறி அரசு கலைக் கல்லூரி முதல்வராக பணியாற்றி ஓய்வுப் பெற்றவர். இவர் மனைவி சாவித்ரி. அரசுப் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது தனியார் பள்ளி தாளாளராக உள்ளார்.
அவர்களுக்கு ஒரு மகன், இரு மகள்கள் இருக்கின்றனர். அதில், மகன் சேலத்தில் வசிக்கிறார். மூத்த மகள் ரம்யா திருமணமாகி வை.புதூர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியின் முதல்வராக உள்ளார். இளைய மகள் அபர்ணா (25). பல் மருத்துவர். கடந்த சில மாதங்களாக வீட்டை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தரைத்தளத்தில் கருணாநிதியும், சாவித்ரியும், மேல் தளத்தில் அபர்ணாவும் நேற்றிரவு தூங்கிக்கொண்டிருந்தனர். இன்று (ஆக. 18ம் தேதி) அதிகாலை 3.30 மணிக்கு வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த 3 மர்ம நபர்கள் கத்தி மற்றும் அரிவாளை காட்டி மிரட்டியுள்ளனர். இதனை தடுக்க முயன்ற அபர்ணா காயமடைந்தார். அப்போது அங்கிருந்த ரூ.9 லட்சத்தை எடுத்துக் கொண்டு தரைத்தளத்தில் கருணாநிதி, சாவித்ரி ஆகியோரை கத்தி, அரிவாளை காட்டி மிரட்டியுள்ளனர்.
இதனை தடுக்க முயன்ற சாவித்ரி காயமடைந்தார். அங்கிருந்த 31 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு கொள்ளையர்கள் காரில் தப்பிச் சென்றனர். காயமடைந்த அபர்ணா, சாவித்ரி ஆகிய இருவரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த எஸ்.பி. கே.ஜோஷ்தங்கையா, குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
கரூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. கை ரேகை நிபுணர் கை ரேகைளை பதிவு செய்தனர். குளித்தலை போலீஸார் வழக்கு பதிவு செய்து வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளித்தலை நகரில் அதிகாலை நேரத்தில் ஓய்வு பெற்ற அரசுக் கல்லூரி முதல்வர் வீட்டில் கொள்ளையர்கள் நகை, பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?