கத்தார் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல்; மத்திய கிழக்கில் பதற்றம்
Sep 10 2025
13

தோஹா,
இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023 அக்டோபர் 7ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,195 பேர் கொல்லப்பட்டனர். பலரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடத்தி சென்றனர்.
இதனை தொடர்ந்து காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது போர் அறிவித்த இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. சுமார் 2 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த போரில் காசாவில் 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், பணய கைதிகள் பலர் ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கையிலும் இஸ்ரேல் மீட்டுள்ளது. பணய கைதிகளில் சிலர் காசா முனையில் கொல்லப்பட்டனர். அவர்களின் சடலங்களும் இஸ்ரேல் படையினரால் மீட்கப்பட்டன. ஆனால், இன்னும் 48 இஸ்ரேலிய பணய கைதிகள் காசா முனையில் ஹமாஸ் பிடியில் உள்ளனர்.
இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு கத்தார் ஆதரவு அளித்து வருகிறது. கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கத்தாரில் இருந்தவாறு காசா போர் நிறுத்தம், பணய கைதிகள் விடுதலை குறித்து கத்தார் அரசு மூலம் இஸ்ரேலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கத்தார் மீது இஸ்ரேல் இன்று அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தியது. தோஹாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் அரசியல் பிரிவு தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
காசாவில் நடந்து வரும் போர், பணய கைதிகள் விடுதலை தொடர்பாக கத்தார் அரசு மூலம் இஸ்ரேலிடம் தோஹாவில் உள்ள தலைமையகத்தில் இருந்தவாறு ஹமாஸ் ஆயுதக்குழுவின் அரசியல் பிரிவு தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் அந்த அலுவலகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்த 2 பேர் ஹமாஸ் ஆயுதக்குழுவின் அரசியல் பிரிவு முக்கிய தலைவர்களா? என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?