ஓவிய, சிற்பக் கலைஞர்கள் கண்காட்சி நடத்திட அரசு நிதி உதவி: தகுதியானவர்கள் 20ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

ஓவிய, சிற்பக் கலைஞர்கள் கண்காட்சி நடத்திட அரசு நிதி உதவி: தகுதியானவர்கள் 20ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்


சென்னை, ஜன.


தமிழக அரசின் சார்பில், கலை பண்பாட்டுத் துறை, தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழுவின் மூலம், தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக் கலைஞர்களின் கலைத்திறமைகளை வெளிப்படுத்த அவர்களது கலைப் படைப்புகள் அடங்கிய கலைக்காட்சியினை தனிநபர் கலைக்காட்சியாக நடத்திட ஒரு நபருக்கு ரூ.25 ஆயிரம்- வீதம் 10 கலைஞர்களுக்கும் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து கூட்டாக கூட்டுக் கலைக்காட்சியாக நடத்திட ஒரு குழுவுக்குரூ.50 ஆயிரம்- வீதம் 5 குழுக்களுக்கும் அரசின் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. தகுதி வாய்ந்த ஓவிய, சிற்பக் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–


விண்ணப்பதாரர்கள் மாநில அளவிலோ அல்லது தேசிய அளவிலோ நடைபெற்ற கலைக்காட்சிகளில் பங்கு கொண்டவர்களாகவும், நுண்கலைகளில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருந்தல் வேண்டும்.


கலை பண்பாட்டுத் துறை – ஓவிய நுண்கலைக் குழுவின் கலைச்செம்மல் விருது பெற்றவர்கள், கலையமைப்புகள் பெயரில் கலைக்காட்சி நடத்த விரும்புபவர்கள், தற்போது நுண்கலை பயின்று வரும் மாணவர்கள் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கக் கூடாது. இதற்கு முன் இத்திட்டத்தில் பயனடைந்தோர் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க இயலாது.


விண்ணப்பதாரர்கள் தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய தன் விவரக் குறிப்பு, சிறந்த படைப்புகளின் புகைப்படங்கள் 5 எண்ணிக்கைகள் (ஏ4 அளவு), அவரவர்கள் படைப்புத் திறன் பற்றிய செய்தித் தொகுப்புகள் அடங்கிய விவரங்களை இணைத்து, இயக்குநர், கலை பண்பாட்டுத் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை (தொலைபேசி எண்: 044-28193195) என்ற முகவரிக்கு 20–ந் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.


இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%