இந்தியா- –ஆஸ்திரேலியா கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: மழையால் ரத்து இந்தியா 2-–1 என்ற கணக்கில்தொடரைக் கைப்பற்றியது

இந்தியா- –ஆஸ்திரேலியா கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: மழையால் ரத்து இந்தியா 2-–1 என்ற கணக்கில்தொடரைக் கைப்பற்றியது


பிரிஸ்பேன், நவ.9-


இந்தியா–-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. இந்திய அணி 2-–1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.


ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடியது.


இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.


‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்யும்படி பணித்தார். இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் வேகமாக மட்டையை சுழற்றினர். பென் துவார்ஷூயிஸ் வீசிய ஒரு ஓவரில் சுப்மன் கில் 4 பவுண்டரிகள் விளாசி அமர்க்களப்படுத்தினார்.


5 மற்றும் 11 ரன்னில் இருக்கையில் ‘கேட்ச்’ கண்டத்தில் இருந்து தப்பிய அபிஷேக் சர்மா நாதன் எலிஸ் பந்து வீச்சில் சிக்சர் விளாசி அசத்தினார். 4.2 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 52 ரன் எடுத்திருந்த போது இடி மற்றும் மின்னல் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது அபிஷேக் ஷர்மா 23 ரன்களுடனும் (13 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்), சுப்மன் கில் 29 ரன்களுடனும் (16 பந்து, 6 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்டம் நிறுத்தப்பட்டதும் வீரர்கள் அவசரமாக தங்கள் அறைக்கு திரும்பினர்.


ரசிகர்கள் யாரும் திறந்தவெளியில் நிற்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


இடி, மின்னலை அடுத்து சற்று நேரத்தில் மழையும் பலமாக கொட்டியது. மழை தொடர்ந்து பெய்ததால் 2.30 மணி நேர பாதிப்புக்கு பிறகு ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா (மொத்தம் 163 ரன்கள்) தொடர்நாயகன் விருதை கைப்பற்றினார்.


5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி 2-–1 என்ற கணக்கில் கைப்பற்றியது. சூர்யகுமார் தலைமையில் இந்திய அணி தொடரை வெல்வது இது 6-வது முறையாகும். கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் ரத்தானது.


மெல்போர்னில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், ஹோபர்ட்டில் நடந்த 3-வது ஆட்டம் மற்றும் கோல்டு கோஸ்டில் நடந்த 4-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்று இருந்தது.


2007-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் 20 ஓவர் தொடரை இழந்தது கிடையாது. முன்னதாக நடந்த 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 1-–2 என்ற கணக்கில் தோற்று இருந்தது. அதற்கு சரியான பதிலடி கொடுத்தது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%