அயோத்தியை போல் மேற்கு வங்கத்தில் ராமர் கோயில்: 2028-ல் கட்டி முடிக்க திட்டம்
புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் ‘பெங்கால் ராமர்’ என்ற பெயரில் ஒரு ராமர் கோயில் அமைக்கப்படவுள்ளது. ரூ.100 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள இக்கோயிலுக்கான கட்டுமான பணிகள் 2028ம் ஆண்டு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி(டிஎம்சி) தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி ஆட்சியில் இருப்பது மேற்கு வங்க மாநிலம். இங்கு சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இச்சூழலில், இம்மாநிலத்திலும் கோயில், மசூதி அரசியல் நிலவி வருகிறது.
டிஎம்சியில் (திரிணமூல் காங்கிரஸ் கட்சி) இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏவான ஹுமாயூன் கபீர் தனது முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பாபர் மசூதி கட்டி வருகிறார். முதல்வரான மம்தா, தன் மாநிலத்தில் துர்கா மற்றும் மகா காளி கோயில்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் அயோத்தியைப் போல், நதியா மாவட்டத்தின் சாந்திப்பூரில் ஒரு ராமர் கோயில் கட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இக்கோயில் ரூ.100 கோடி செலவில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட உள்ளதாகவும், வரும் 2028ம் ஆண்டிற்குள் கோயில் கட்டி முடிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பெங்கால் மொழியில் கிருத்திபாஸ் ஓஜா என்பவர் எழுதிய ராமாயணம் மேற்கு வங்க மாநிலத்தவர் இடையே பிரபலம். இவர், 15ம் நூற்றாண்டில் சமஸ்கிருத ராமாயணத்தை வங்க மொழியில் ‘ஸ்ரீ ராம் பஞ்சாலி’ என்ற பெயரில் மொழிபெயர்த்த கவிஞர். இவரது ராமாயணம், இன்றும் பெரும்பாலான பெங்காலி இந்துக்கள் வீட்டில் பக்தியுடன் படிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில்தான் புதிய ராமர் கோயில், ‘பெங்காலில் ராமர்’ எனும் பெயரில் கட்டப்பட உள்ளது.
இக்கோயில் ஒரு மதக் கட்டமைப்பாக மட்டுமல்லாமல், வங்காளத்தின் கலாச்சார பாரம்பரியத்தை முன்னிறுத்தும் வகையில் அமைய உள்ளது. பெங்காலில் ராமர் கோயில் கட்டும் பணியை 2017-ல் பதிவு செய்யப்பட்ட மதம் மற்றும் தொண்டு நிறுவனமான ஸ்ரீ கிருத்திபாஸ் ராம் மந்திர் அறக்கட்டளை மேற்கொள்கிறது. இந்த அறக்கட்டளையின் தலைவராக அரிந்தம் பட்டாச்சார்யா உள்ளார். சாந்திப்பூரின் முன்னாள் டிஎம்சி எம்எல்.ஏவான பட்டாச்சார்யா, சமீபத்தில் பாஜகவில் இணைந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, அறக்கட்டளை உறுப்பினர்கள் கோயில் கட்டுமானத்திற்கான நிலத்தை அளவிடுவதற்கான இறுதி ஆய்வை நடத்தினர். இது கோயிலுக்கானத் திட்டத்தின் முறையான தொடக்கமாகக் கருதப்படுகிறது. நேபாளத்தின் புகழ்பெற்ற பசுபதி நாத் கோயிலுடன் தொடர்புடைய வேத அறிஞரான அர்ஜுன் தஸ்துலா, பெங்காலில் ராமர் கோயிலின் பாதுகாவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.